திருப்புகழ் 153 கோல மதிவதனம் (பழநி)
அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் இது இப்பாடலை தினமும் படித்தால் குடும்ப மேன்மை அடையும்.
கோல மதிவதனம் வேர்வு தரஅளக
பாரம் நெகிழவிழி வேல்கள் சுழலநுவல்
கோவை யிதழ்வெளிற வாய்மை பதறியிள …… முகையான
கோக னகவுபய மேரு முலையசைய
நூலி னிடைதுவள வீறு பறவைவகை
கூற யினியகள மோல மிடவளைகள் …… கரமீதே
காலி னணிகனக நூபு ரமுமொலிக
ளோல மிடஅதிக போக மதுமருவு
காலை வெகுசரச லீலை யளவுசெயு …… மடமானார்
காதல் புரியுமநு போக நதியினிடை
வீழு கினுமடிமை மோச மறவுனது
காமர் கழலிணைக ளான தொருசிறிது …… மறவேனே
ஞால முழுதுமம ரோர்கள் புரியுமிக
லாக வருமவுணர் சேர வுததியிடை
நாச முறஅமர்செய் வீர தரகுமர …… முருகோனே
நாடி யொருகுறமின் மேவு தினைசெய்புன
மீதி லியலகல்கல் நீழ லிடைநிலவி
நாணம் வரவிரக மோது மொருசதுர …… புரிவேலா
மேலை யமரர்தொழு மானை முகரரனை
யோடி வலம்வருமுன் மோது திரைமகர
வேலை யுலகைவல மாக வருதுரக …… மயில்வீரா
வீறு கலிசைவரு சேவ கனதிதய
மேவு முதல்வவயல் வாவி புடைமருவு
வீரை வருபழநி ஞான மலையில்வளர் …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
கோல மதி வதனம் வேர்வு தர அளக பாரம் நெகிழ விழி
வேல்கள் சுழல நுவல் கோவை இதழ் வெளிற வாய்மை பதறி …
அழகிய சந்திரனை ஒத்த முகம் வேர்வை அடையவும், கூந்தலின் கட்டு
அவிழவும், கண்களாகிய வேல்கள் சுழலவும், உவமை கூறப்படும்
கொவ்வைக் கனி போன்ற இதழ் வெளுக்கவும், சொற்கள் பதறவும்,
இள முகையான கோகனக உபய மேரு முலை அசைய
நூலின் இடை துவள வீறு பறவை வகை கூற இனிய களம்
ஓலம் இட வளைகள் கரம் மீதே காலின் அணி கனக நூபுரம்
ஒலிகள் ஓலமிட … இளமையான மொட்டு நிலையில் இருக்கும்
தாமரை ஒத்த இரண்டு மேருமலை போன்று உயர்ந்த மார்பகங்கள்
அசையவும், நூல் போன்ற இடை துவளவும், விளங்கும் கிளி, புறா
முதலிய பறவைகள் வகைகளின் குரல் போல் இனிமை உடைய
கண்டத்தின் இன்சொல் வெளிப்படவும், கைகளில் வளையல்கள்
ஒலி செய்யவும், காலில் அணிந்துள்ள பொன்னாலாகிய சிலம்பின்
ஒலிகள் சப்திக்கவும்,
அதிக போகம் அது மருவு காலை வெகு சரச லீலை அளவு
செயும் மடமானார் காதல் புரியும் அனுபோக நதியின் இடை
வீழுகினும் … அதிக போகத்தை அனுபவிக்கும் போது பலவித காம
லீலைகளை (பெற்ற பொருளுக்குத்) தக்கவாறு அளந்து செய்யும்
அழகிய பொது மகளிர் மீது காதல் புரிகின்ற அநுபோகம் என்னும்
ஆற்று வெள்ளத்தின் இடையே விழுந்தாலும்,
அடிமை மோசம் அற உனது காமர் கழல் இணைகள் ஆனது
ஒரு சிறிதும் மறவேனே … அடிமையாகிய நான் சிறிதும் (அந்த
வெள்ளத்திலே) அழிவின்றி உன்னுடைய அழகிய திருவடிகளை
ஒரு சிறிதும் மறக்க மாட்டேன்.
ஞால முழுதும் அமரோர்கள் புரியும் இகலாக வரும் அவுணர்
சேர உததி இடை நாசம் உற அமர் செய் வீரதர குமர
முருகோனே … உலக முழுவதும் தேவர்களுடன் போர் செய்யும்படி
பகையாக வந்த அசுரர்கள் யாவரும் ஒருமிக்க கடலில் அழியும்படி
போர் செய்த வீரத்தை உடையவனே, குமரனே, முருகோனே,
நாடி ஒரு குறமின் மேவு தினை செய் புன மீதில் இயல் அகல்
கல் நீழல் இடை நிலவி நாணம் வர விரகம் ஓதும் ஒரு சதுர
புரி வேலா … தேடிச் சென்று ஒரு குறப் பெண் இருந்த தினை வளரும்
புனம் மீது, ஒழுங்கு மிக்க மலைப் பாறையின் நிழலில இருந்துகொண்டு,
(அந்த வள்ளிக்கு) வெட்கம் உண்டாக ஆசை மொழிகளைக் கூறி,
ஒப்பற்ற சாமர்த்தியச் செயல்களை புரிந்த வேலாயுதனே,
மேலை அமரர் தொழும் ஆனை முகர் அரனை ஓடி வலம் வரு
முன் மோது திரை மகர வேலை உலகை வலமாக வரு துரக
மயில் வீரா … விண்ணுலகத்தில் தேவர்கள் தொழும் யானைமுகக்
கடவுளாகிய விநாயகர் சிவபெருமானை ஓடி வலம் வரும் முன்பே,
மோதுகின்ற அலைகளையும் மகர மீன்களையும் உடைய கடல் சூழ்ந்த
உலகை வலம் வந்த குதிரை போன்ற மயிலை உடைய வீரனே,
மேலும் படிக்க : திருப்புகழ் 51 கொங்கைப் பணை (திருச்செந்தூர்
வீறு கலிசை வரு சேவகனது* இதயம் மேவும் முதல்வ …
விளங்குகின்ற கலிசை என்னும் பதியில் வாழ்கின்ற சேவகனுடைய
மனத்தில் வீற்றிருக்கும் முதல்வனே,
வயல் வாவி புடை மருவு வீரை வரு பழநி ஞான மலையில்
வளர் பெருமாளே. … வயல்களும் குளங்களும் பக்கங்களில்
பொருந்தியுள்ள வீரை என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளவனும்,
பழனியாகிய ஞான மலையில் வீற்றிருப்பவனுமான பெருமாளே.