ஆன்மிகம்

திருப்புகழ் 15 தடக்கைப் பங்கயம் (திருப்பரங்குன்றம்)

சொந்த வீடு வாங்க மற்றும் கட்ட இப்பாடலை தினமும் படித்தால் போதும் நிச்சயமாக உங்களின் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.

பாடல் வரிகள்:

தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல்தண்
     டமிழ்க்குத் தஞ்சமென் …… றுலகோரைத்

தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந்
     தளர்ச்சிப் பம்பரந் …… தனையூசற்

கடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடுங்
     கலத்தைப் பஞ்சஇந் …… த்ரியவாழ்வைக்

கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங்
     கழற்குத் தொண்டுகொண் …… டருள்வாயே

படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்
     புரக்கக் கஞ்சைமன் …… பணியாகப்

பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்
     பரத்தைக் கொண்டிடுந் …… தனிவேலா

குடக்குத் தென்பரம் பொருப்பிற் றங்குமங்
     குலத்திற் கங்கைதன் …… சிறியோனே

குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
     குவித்துக் கும்பிடும் …… பெருமாளே.

சொல் விளக்கம்:

தடக்கைப் பங்கயம் … உன் அகன்ற கை தாமரை போன்றது,

கொடைக்குக் கொண்டல் … கொடை வன்மையில் நீ மேகம்
போன்றவன்,

தண்டமிழ்க்குத் தஞ்சமென்று … தமிழ்ப் புலவர்க்கு நீயே புகலிடம்
என்று கூறி

உலகோரைத் தவித்துச் சென்றிரந்து … உலகத்தவரைத் தவிப்புடன்
நாடி யாசித்து

உளத்திற் புண்படும் … மனம் நொந்து புண்ணாகி

தளர்ச்சிப் பம்பரந்தனை … தளர்வுற்றுப் பம்பரம் போன்று
சுழல்வேனை,

ஊசற் கடத்தை … உள்ளிருக்கும் பண்டம் ஊசிப்போன மண் சட்டியை,

துன்பமண் சடத்தை … துன்பம் நிறைந்த மண்ணாலான இந்த உடலை,

துஞ்சிடுங் கலத்தை … அழிந்துபோகும் இந்தப் பாண்டத்தை,

பஞ்சஇந்த்ரிய வாழ்வை … ஐம்பொறிகளால் ஆட்டிவைக்கப்படும்
இந்த வாழ்வை,

கணத்திற் சென்று இடம் திருத்தி … நொடியில் வந்து என் இதயமாம்
இடத்தைத் திருத்தி,

தண்டையங் கழற்கு … வீரக்கழல்கள் அணிந்த நின் அழகிய
திருப்பாதங்களுக்கு

தொண்டுகொண் டருள்வாயே … தொண்டு செய்ய என்னை
ஏற்றுக்கொண்டு அருள்வாயாக.

படைக்கப் பங்கயன் … படைக்கும் தொழிலைச் செய்வதற்குத்
தாமரைமலர் மேவும் பிரமன்,

துடைக்கச் சங்கரன் … அழிக்கும் தொழிலைச் செய்வதற்குச் சங்கரன்,

புரக்கக் கஞ்சைமன் … காக்கும் தொழிலைச் செய்வதற்குத் தாமரையாள்
மணாளன் திருமால்

பணியாகப் பணித்து … என்று தத்தம் தொழில்களை நியமித்து அளித்து,

தம்பயந் தணித்து … அவரவர் பயங்களைப் போக்கி,

சந்ததம் பரத்தைக் கொண்டிடும் … எப்போதும் பராகாசத்தில்
மேலான நிலையிலே நிற்கும்

தனிவேலா … ஒப்பற்ற வேலாயுதக் கடவுளே,

குடக்குத் தென்பரம் பொருப்பில் தங்கும் … மதுரைக்கு மேற்கே
திருப்பரங்குன்றத்தில் தங்கும்,

அங்குலத்திற் கங்கைதன் சிறியோனே … உயர்குல நதியாம்
கங்கையின் குழந்தாய்,

குறப்பொற் கொம்பைமுன் … குறக்குலத்து அழகிய கொடியாம்
வள்ளியை முன்பு

புனத்திற் செங்கரங் குவித்துக் கும்பிடும் பெருமாளே. …
தினைப்புனத்தில் நின் செவ்விய கரங்களைக் கூப்பிக் கும்பிட்ட
பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *