திருப்புகழ் 149 குறித்தமணி (பழநி)
அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் இது இப்பாடலை தினமும் படித்தால் தொழிலில் இருந்து வந்த பிரச்சனை நீங்கும்.
குறித்தமணிப் பணித்துகிலைத்
திருத்தியுடுத் திருட்குழலைக்
குலைத்துமுடித் திலைச்சுருளைப் …… பிளவோடே
குதட்டியதுப் புதட்டைமடித்
தயிற்பயிலிட் டழைத்துமருட்
கொடுத்துணர்வைக் கெடுத்துநகக் …… குறியாலே
பொறித்ததனத் தணைத்துமனச்
செருக்கினர்கைப் பொருட்கவரப்
புணர்ச்சிதனிற் பிணிப்படுவித் …… திடுமாதர்
புலத்தலையிற் செலுத்துமனப்
ப்ரமத்தையறப் ப்ரசித்தமுறப்
புரித்தருளித் திருக்கழலைத் …… தருவாயே
பறித்ததலைத் திருட்டமணக்
குருக்களசட் டுருக்களிடைப்
பழுக்களுகக் கழுக்கள்புகத் …… திருநீறு
பரப்பியதத் திருப்பதிபுக்
கனற்புனலிற் கனத்தசொலைப்
பதித்தெழுதிப் புகட்டதிறற் …… கவிராசா
செறித்தசடைச் சசித்தரியத்
தகப்பன்மதித் துகப்பனெனச்
சிறக்கவெழுத் தருட்கருணைப் …… பெருவாழ்வே
திகழ்ப்படுசெய்ப் பதிக்குளெனைத்
தடுத்தடிமைப் படுத்தஅருட்
டிருப்பழநிக் கிரிக்குமரப் …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
குறித்த மணிப் பணித் துகிலைத் திருத்தி உடுத்து இருள்
குழலைக் குலைத்து முடித்து … சிறந்ததென்று கருதிய ரத்தின
மணிகள் பதித்த ஆபரணங்களையும் ஆடைகளையும் முறையே
சரிப்படுத்தி உடுத்து, கரிய கூந்தலை கலைத்து முடித்து,
இலைச் சுருளைப் பிளவோடே குதட்டிய துப்பு உதட்டை
மடித்து அயில் பயிலிட்டு அழைத்து மருள் கொடுத்து
உணர்வைக் கெடுத்து … வெற்றிலையைப் பாக்குப் பிளவுடன்
மெல்லுகின்ற பவளம் போன்ற இதழ்களை மடித்து, வேல் போன்ற
கண்களால் நெருக்கி அருகே அழைத்து, காம மயக்கத்தைக்
கொடுத்து நல்லுணர்வைக் கெடுத்து,
நகக் குறியாலே பொறித்து அத்தனத்து அணைத்து மனச்
செருக்கினர் கைப்பொருள் கவரப் புணர்ச்சி தனில்
பிணிப்படுவித்திடு மாதர் … நகக் குறியால் அடையாளம்
இடப்பட்ட மார்பகத்தில் அணைத்து, மனம் கர்வம் கொண்டவராய்,
(தம்மிடம் வந்தவர்களிடம்) கைப் பொருளைக் கவரும் பொருட்டு
கலவியில் கட்டுப்படுத்துகின்ற விலைமாதர்கள்.
புலம் தலையில் செலுத்தும் மனப் ப்ரமத்தை அறப்
ப்ரசித்தம் உறப் புரித்து அருளித் திருக் கழலைத்
தருவாயே … அவர்களிடத்தில் செலுத்துகின்ற மயக்கம்
அற்றுப் போக நான் பெரும் புகழ் பெற அன்பு கூர்ந்து அருள்
புரிந்து உனது அழகிய திருவடியைத் தருவாயாக.
பறித்த தலைத் திருட்டு அமணக் குருக்கள் அசட்டு
உருக்கள் இடைப் பழுக்கள் உகக் கழுக்கள் புகத் திரு நீறு
பரப்பிய தத் திருப்பதி புக்கு … ரோமத்தை விலக்கிய தலையையும்
கள்ள நெஞ்சத்தையும் உடைய சமணக் குருக்களாகிய
அறிவில்லாதவர்களின் விலா எலும்புகள் முறிந்து விழ, (அவர்கள்)
கழு மரங்கள் ஏறும்படி விபூதியைப் பரவ வைத்த அந்த
மதுரையம்பதிக்குச் சென்று,
அனல் புனலில் கனத்த சொ(ல்)லைப் பதித்து எழுதிப்
புக(வி)ட்ட திறல் கவி ராசா … நெருப்பிலும் நீரிலும் பெருமை
வாய்ந்த (தேவாரத்) திருப் பதிகத்தைப் பொறித்து எழுதப்பட்ட
ஏடுகளைப் புகவிட்ட ஞான வலிமையுடைய (சம்பந்தராக வந்த)
கவியரசனே,
செறித்த சடைச் சசித் தரி அத் தகப்பன் மதித்து உகப்பன்
எனச் சிறக்க எழுத்து அருள் கருணைப் பெருவாழ்வே …
நெருங்கி அடர்ந்த சடையில் சந்திரனைத் தரித்த அந்தத்
தந்தையாகிய சிவ பெருமான் பாராட்டி மகிழ்வான் என்று சிறப்புறும்
வகையில் பிரணவத்தின் பொருளை உபதேசித்து அருளிய
கருணைச் செல்வமே,
திகழ்ப் படு செய்ப்பதிக்குள் எனைத் தடுத்து அடிமைப்
படுத்த அருள் திரு பழநிக் கிரிக் குமரப் பெருமாளே. …
விளக்கமுறும் வயலூரில் என்னைத் தடுத்து ஆட்கொண்டு
அடிமை ஆக்கிய அருளாளனே, அழகிய பழனி மலையில்
உறையும் குமரப் பெருமாளே.