ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் 140 கறுத்த குழலணி (பழநி)

பழநியில் குடி கொண்டிருக்கும் அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் இது இப்பாடலை தினமும் படித்தால் குடும்பம் மேன்மை அடையும்.

கறுத்த குழலணி மலரணி பொங்கப்
     பதித்த சிலைநுத லணிதில தம்பொற்
          கணைக்கு நிகர்விழி சுழலெழு கஞ்சச் …… சிரமான

கழுத்தி லுறுமணி வளைகுழை மின்னக்
     குவட்டு முலையசை படஇடை யண்மைக்
          கமைத்த கலையிறு குறுதுவள் வஞ்சிக் …… கொடிபோலச்

சிறுத்த களமிகு மதமொழு கின்சொற்
     குயிற்க ளெனமட மயிலெகி னங்கட்
          டிருக்கு நடைபழ கிகள்கள பங்கச் …… சுடைமாதர்

திகைத்த தனமொடு பொருள்பறி யொண்கட்
     குவட்டி யவர்வலை யழலுறு பங்கத்
          திடக்கு தலைபுலை யவர்வழி யின்பைத் …… தவிர்வேனோ

பறித்த விழிதலை மழுவுழை செங்கைச்
     செழித்த சிவபர னிதழிநல் தும்பைப்
          படித்த மதியற லரவணி சம்புக் …… குருநாதா

பருத்த அசுரர்க ளுடன்மலை துஞ்சக்
     கொதித்த அலைகட லெரிபட செம்பொற்
          படைக்கை மணியயில் விடுநட னங்கொட் …… கதிர்வேலா

தெறித்து விழியர வுடல்நிமி ரம்பொற்
     குவட்டொ டிகைகிரி பொடிபட சண்டச்
          சிறப்பு மயில்மிசை பவுரிகொ ளும்பொற் …… றிருபாதா

சிறக்கு மழகிய திருமகள் வஞ்சிக்
     குறத்தி மகளுமை மருமகள் கொங்கைச்
          சிலைக்கு ளணைகுக சிவமலை கந்தப் …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

கறுத்த குழல் அணி மலர் அணி பொங்கப் பதித்த சிலை
நுதல் அணி திலதம் பொன் கணைக்கு நிகர் விழி சுழல்
எழு கஞ்சம்
 … கரிய கூந்தலில் அணியப்பட்ட மலர் வரிசை நன்கு
விளங்கவும், வில்லைப் போன்ற நெற்றியில் பதித்துள்ள அழகிய
பொட்டும், ஒளி பொருந்திய அம்புக்கு ஒத்த, சுழற்சி கொண்டு
எழும் தாமரை மலர் போன்ற, கண்களும்,

சிரம் ஆன கழுத்தில் உறு மணி வளை குழை மின்னக்
குவட்டு முலை அசை பட
 … கமுகுக்கு ஒத்த கழுத்தில் உள்ள
மணி மாலையும், வளைகளும், குண்டலங்களும் ஒளி விட்டு
வீசவும், மலை போன்ற மார்பகங்கள் அசையவும்,

இடை அண்மைக்கு அமைத்த கலை இறுகுறு துவள் வஞ்சிக்
கொடி போல
 … இடுப்பை ஒட்டினாற்போல அணிந்துள்ள சேலை
இறுகக் கட்டியபடியால் வஞ்சிக் கொடியைப் போல் இடை நெளியவும்,

சிறுத்த களம் மிகு மதம் ஒழுகு இன் சொல் குயில்கள் என
மட மயில் எகினங்கள் திருக்கு நடை பழகிகள்
 … மெல்லிய
கழுத்திலிருந்து பொங்கி எழும் இன்ப மதம் ஒழுகும் இனிய
சொற்கள் குயில்களின் குரலைப் போல் ஒலிக்க, அழகிய மயில்கள்
அன்னங்கள் இவைகளின் நடை போலக் காணப்படும் நடையைப்
பழகுபவரும்,

களபம் கச்சுடை மாதர் திகைத்த தனமொடு பொருள் பறி
ஒண் கண் குவட்டி அவர் வலை அழல் உறு பங்கத்
திடக்குதலை புலையவர் வழி இன்பைத் தவிர்வேனோ
 …
கலவைச் சாந்து படும் இறுகிய கச்சை அணிந்த விலைமாதர்கள்
ஆடவரைத் திகைக்கச் செய்கின்ற ஆற்றலோடு பொருளைப்
பறிக்கும் ஒளி பொருந்திய கண்களை வளைத்து தம்முடைய
வலையாகிய நெருப்பு ஒத்த துன்பத்தில் திடமாக வீழச் செய்யவல்ல
கீழானவருடைய வழியில் செல்வதால் கிடைக்கும் இன்பத்தை
நான் ஒழிக்க மாட்டேனோ?

பறித்த விழி தலை மழு உழை செம் கைச் செழித்த சிவ பரன்
இதழி நல் தும்பைப் படித்த மதி அறல் அரவு அணி சம்புக்
குரு நாதா
 … கண்களுடன் விளங்கும், பறிக்கப்பட்ட பிரம
கபாலத்தையும், மழுவாயுதம், மான் இவைகளை ஏந்திய திருக்கைகள்
இலங்கும் சிவபெருமான், புது கொன்றை தும்பை மலர்கள், பொருந்திய
சந்திரன், கங்கை நதி, பாம்பு இவைகளைச் சடையில் அணிந்த
சம்புவுக்கு குருநாதனே,

பருத்த அசுரர்கள் உடன் மலை துஞ்சக் கொதித்த அலை
கடல் எரி பட செம் பொன் படைக் கை மணி அயில் விடு
நடனம் கொள் கதிர் வேலா
 … பருத்த அசுரர்களின் கிரெளஞ்சம்,
ஏழு குலகிரிகள் ஆகிய மலைகள் மடியவும், கொதித்த அலை
வீசும் கடல் எரியவும், செவ்விய அழகிய படைகளை ஏந்தும் திருக்
கரத்தினின்று மணி கட்டிய வேலாயுதத்தைத் தெரிந்து செலுத்தி
வெற்றி நடனம் புரியும் கதிர்வேலனே,

தெறித்து விழி அர(வு) உடல் நிமிர அம் பொன் குவட்டு
ஒள் திகை கிரி பொடி பட சண்டச் சிறப்பு மயில் மிசை பவுரி
கொளும் பொன் திரு பாதா
 … கண் தெறித்து ஆதிசேஷனது
உடம்பு நிமிரவும், அழகிய ஒளி பொருந்திய சிகரங்களை உடைய
ஒள்ளிய திசைக் கிரிகளும் பொடியாகும்படியாக, வேகத்தில் சிறந்த
மயிலின் மீது ஏறி உலகை வலம் வந்த அழகிய பாதங்களை உடையவனே,

மேலும் படிக்க : திருப்புகழ் 119 இலகிய களப (பழநி)

சிறக்கும் அழகிய திரு மகள் வஞ்சிக் குறத்தி மகள் உமை
மருமகள் கொங்கைச் சிலைக்குள் அணை குக சிவ மலை
கந்தப் பெருமாளே.
 … சிறந்த அழகு பொருந்திய லக்ஷ்மியின்
புதல்வியும், வஞ்சிக் கொடி போன்ற குறமகளும், உமா தேவியின்
மருமகளுமாகிய வள்ளி நாயகியின் மார்பாகிய மலையைத் தழுவும்
குகனே, சிவ மலையில் (* பழநியில்) வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *