திருப்புகழ் 139 களப முலையை (பழநி)
அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் இது இத்திருநாமத்தை தினமும் படித்தால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
களபமுலை யைத்தி றந்து தளவநகை யைக்கொ ணர்ந்து
கயலொடுப கைத்த கண்கள் …… குழைதாவக்
கரியகுழ லைப்ப கிர்ந்து மலர்சொருகு கொப்ப விழ்ந்து
கடியிருளு டுக்கு லங்க …… ளெனவீழ
முழுமதியெ னச்சி றந்த நகைமுகமி னுக்கி யின்ப
முருகிதழ்சி வப்ப நின்று …… விலைகூறி
முதலுளது கைப்பு குந்து அழகுதுகி லைத்தி றந்து
முடுகுமவ ருக்கி ரங்கி …… மெலிவேனோ
இளமதிக டுக்கை தும்பை அரவணிப வர்க்கி சைந்து
இனியபொரு ளைப்ப கர்ந்த …… குருநாதா
இபமுகவ னுக்கு கந்த இளையவம ருக்க டம்ப
எனதுதலை யிற்ப தங்க …… ளருள்வோனே
குழகெனஎ டுத்து கந்த உமைமுலைபி டித்த ருந்து
குமரசிவ வெற்ப மர்ந்த …… குகவேலா
குடிலொடுமி கச்செ றிந்த இதணுளபு னத்தி ருந்த
குறவர்மக ளைப்பு ணர்ந்த …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
களப முலையைத் திறந்து தளவ நகையைக் கொணர்ந்து
கயலொடு பகைத்த கண்கள் குழை தாவ … கலவைச் சந்தனம்
அணிந்த மார்பகத்தைத் திறந்து, முல்லை போன்ற பற்களைக் காட்டி,
கயல் மீனோடு மாறுபட்ட கண்கள் (செவிகளிலுள்ள) தோடுகளின்
மீது தாவவும்,
கரிய குழலைப் பகிர்ந்து மலர் சொருகு கொப்பு அவிழ்ந்து
கடி இருள் உடுக் குலங்கள் என வீழ … கருத்த கூந்தலை வாரி
ஒழுங்கு படுத்தி, (மலர்கள்) சொருகப்பட்ட கொண்டை கலைவதால்,
இருளை நீக்குகின்ற நட்சத்திரக் கூட்டங்களைப் போல் உதிரவும்,
முழு மதி எனச் சிறந்த நகை முக(ம்) மினுக்கி இன்ப
முருகு இதழ் சிவப்ப நின்று விலை கூறி … பூரணச் சந்திரனைப்
போல சிறந்த ஒளி பொருந்திய முகத்தை மினுக்கி, இன்பம் தரும்
வாசனையுள்ள இதழ்கள் சிவக்கும்படி (வாயிற்படியில்) நின்று
விலை பேசி,
முதல் உளது கைப் புகுந்து அழகு துகிலைத் திறந்து முடுகும்
அவருக்கு இரங்கி மெலிவேனோ … (வந்தவருடைய) பொருள்
யாவும் தமது கையில் வந்த பின் அழகிய புடவையைத் திறந்து
நெருங்கி உறவாடும் வேசியர்களுக்கு (ஈடுபட்டு) இரங்கி மெலிந்து
நிற்பேனோ?
இள மதி கடுக்கை தும்பை அரவு அணிபவர்க்கு இசைந்து
இனிய பொருளைப் பகர்ந்த குரு நாதா … பிறைச் சந்திரனையும்,
கொன்றை மலரையும், தும்பையையும், பாம்பையும் அணிந்துள்ள
சிவபெருமானுக்கு இணங்கி, இனிமை வாய்ந்த (பிரணவமாகிய)
மூலப் பொருளை உபதேசித்த குரு நாதனே,
இப முகவனுக்கு உகந்த இளையவ மருக் கடம்ப எனது
தலையில் பதங்கள் அருள்வோனே … யானை முகக் கணபதிக்குப்
பிரியமான தம்பியே, நறுமணமுடைய கடப்ப மாலையை அணிபவனே,
எனது தலையில் உனது திருவடியைச் சூட்டியவனே,
குழகு என எடுத்து உகந்த உமை முலை பிடித்து அருந்து
குமர சிவ வெற்பில் அமர்ந்த குக வேலா … குழந்தை என்று
எடுத்து மகிழ்ந்த உமா தேவியின் திருமுலைகளைப் பற்றி (ஞானப்)
பாலை உண்ட குமரனே, சிவ மலையில் (பழநி மலையில்) வீற்றிருக்கும்
குகனே, வேலனே,
மேலும் படிக்க ; திருப்புகழ் 130 கரிய மேகமதோ (பழநி)
குடிலொடு மிகச் செறிந்த இதண் உ(ள்)ள புனத்து இருந்த
குறவர் மகளைப் புணர்ந்த பெருமாளே. … சிறு குடிசைக்கு
அருகில் நெருங்கியிருந்த பரண் அமைந்த தினைப் புனத்திலிருந்த
குறப்பெண்ணாகிய வள்ளியை மணந்த பெருமாளே.