திருப்புகழ் 136 கலகக் கயல்விழி (பழநி)
பழநியில் குடிகொண்டிருக்கும் அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் இது இப்பாடலை தினமும் படித்தால் புதிய தொழில் தொடங்குவீர்கள்.
கலகக் கயல்விழி போர்செய வேள்படை
நடுவிற் புடைவரு பாபிகள் கோபிகள்
கனியக் கனியவு மேமொழி பேசிய …… விலைமாதர்
கலவித் தொழினல மேயினி தாமென
மனமிப் படிதின மேயுழ லாவகை
கருணைப் படியெனை யாளவு மேயருள் …… தரவேணும்
இலவுக் கிளையெனும் வாய்வளி நாயகி
குழையத் தழுவிய மேன்மையி னாலுயர்
இசைபெற் றருளிய காமுக னாகிய …… வடிவோனே
இதமிக் கருமறை வேதிய ரானவர்
புகலத் தயவுட னேயருள் மேன்மைகள்
இசையத் தருமநு கூலவ சீகர …… முதல்வோனே
நிலவைச் சடைமிசை யேபுனை காரணர்
செவியிற் பிரணவ மோதிய தேசிக
நிருதர்க் கொருபகை யாளியு மாகிய …… சுடர்வேலா
நிமலக் குருபர ஆறிரு பார்வையும்
அருளைத் தரஅடி யார்தமை நாடொறும்
நிகரற் றவரென வேமகிழ் கூர்தரு …… முரியோனே
பலவிற் கனிபணை மீறிய மாமர
முருகிற் கனியுட னேநெடு வாளைகள்
பரவித் தனியுதிர் சோலைகள் மேவிய …… வகையாலே
பழனத் துழவர்க ளேரிட வேவிளை
கழனிப் புரவுகள் போதவு மீறிய
பழநிச் சிவகிரி மீதினி லேவளர் …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
கலகக் கயல் விழி போர் செய வேள் படை நடுவில் புடை
வரு பாபிகள் கோபிகள் … கலகத்தைத் தரும் மீன் போன்ற கண்கள்
போர் புரிய, மன்மதனுடைய சேனையாகிய பெண்கள் கூட்டத்தின்
நடுவிலும் பக்கங்களிலும் வரும் பாவிகளும், கோபத்தை உடையவர்களும்,
கனியக் கனியவுமே மொழி பேசிய விலைமாதர் … இனிக்க
இனிக்கப் பேச்சுக்களைப் பேசுபவர்களும் ஆகிய வேசியருடன்
கலவித் தொழில் நலமே இனிது ஆம் என மனம் இப்படியே
தினமே உழலா வகை … சேர்ந்திருக்கும் தொழிலே நன்மையானது,
இவ்வுலகில் இனிது என்று எனது மனம் இப்படி தினந்தோறும்
அலையாதவாறு,
கருணைப் படி எனை ஆளவுமே அருள் தர வேணும் … உனது
கருணை வழியே என்னை ஆண்டு அருள் புரிவாயாக.
இலவுக் கிளை எனும் வாய் வ(ள்)ளி நாயகி குழையத் தழுவிய
மேன்மையினால் … இலவ மலருக்கு உறவு என்னும்படி சிவந்த
அதரத்தை உடைய வள்ளி நாயகி உள்ளம் குழையுமாறு மனம்
உருகித் தழுவிய சிறப்பினால்,
உயர் இசை பெற்று அருளிய காமுகனாகிய வடிவோனே …
உயர்ந்த புகழைப் பெற்று உயிர்களுக்கு அருள் புரிந்த காதலன்
என வேடம் கொண்ட அழகனே,
இதம் மிக்க அரு மறை வேதியர் ஆனவர் புகலத் தயவுடனே
அருள் மேன்மைகள் இசையத் தரும் அநுகூல வசீகர
முதல்வோனே … நன்மை மிகுந்த, அரிய வேதங்களைக் கற்ற
மறையோர் வேதங்களைச் சொல்ல, அன்புடனே அவர்களுக்கு
அருட் செல்வங்களை இசைந்து தருகின்ற அனுகூலனே, மனதைக்
கவர்பவனே, முதல்வனே,
நிலவைச் சடை மிசையே புனை காரணர் செவியில்
பிரணவம் ஓதிய தேசிக … மதியைச் சடையின் மீது அணிந்துள்ள
மூலப் பொருளாகிய சிவபெருமானுடைய காதில் பிரணவப்
பொருளை ஓதிய குரு மூர்த்தியே,
நிருதர்க்கு ஒரு பகையாளியும் ஆகிய சுடர்வேலா …
அசுரர்களுக்கு ஓர் ஒப்பற்ற பகைவனாய் வந்த, ஒளி வீசும் வேலனே,
நிமலக் குருபர ஆறு இரு பார்வையும் அருளைத் தர
அடியார் தமை நாள் தொறும் … பரிசுத்தமான குரு மூர்த்தியே,
பன்னிரு திருக்கண்களும் அருளைப் பொழிய அடியார்களை நாள்
தோறும்
நிகர் அற்றவர் எனவே மகிழ் கூர் தரும் உரியோனே …
ஒப்பில்லாதவர் என்னும்படி உள்ளம் மிகவும் மகிழும் உரிமை
உடையவனே,
பலவின் கனி பணை மீறிய மா மர முருகின் கனியுடனே
நெடு வாளைகள் பரவித் தனி உதிர் சோலைகள் மேவிய
வகையாலே … பலாப்பழங்கள், கிளைகள் மிகுந்த மாமரங்களின்
வாசனையுடன் பழுத்த பழங்களுடன், நீண்ட வாளை மீன்கள்
பாய்வதால் தனித் தனியே உதிர்கின்ற சோலைகள் பொருந்தி
உள்ள தன்மையாலே,
பழனத்து உழவர்கள் ஏரிடவே விளை கழனிப் புரவிகள்
போதவும் மீறிய … வயலில் உழவர்கள் ஏரிட்டு விளைகின்ற
வயல்களின் செழுமைகள் மிகவும் மேம்படுகின்ற
பழனிச் சிவகிரி மீதினிலே வளர் பெருமாளே. … பழனிச்
சிவகிரியின் மீது வீற்றிருந்து அருளும் பெருமாளே.