Jallikattu bullsஆன்மிகம்ஆலோசனைதேசியம்

திருப்புகழ் 135 கலக வாள்விழி (பழநி)

அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் இது இப்பாடலை தினமும் படித்தால் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

கலக வாள்விழி வேலோ சேலோ
     மதுர வாய்மொழி தேனோ பாலோ
          கரிய வார்குழல் காரோ கானோ …… துவரோவாய்

களமு நீள்கமு கோதோள் வேயோ
     உதர மானது மாலேர் பாயோ
          களப வார்முலை மேரோ கோடோ …… இடைதானும்

இழைய தோமலர் வேதா வானோ
     னெழுதி னானிலை யோவாய் பேசீ
          ரிதென மோனமி னாரே பாரீ …… ரெனமாதர்

இருகண் மாயையி லேமூழ் காதே
     யுனது காவிய நூலா ராய்வே
          னிடர்ப டாதருள் வாழ்வே நீயே …… தரவேணும்

அலைவி லாதுயர் வானோ ரானோர்
     நிலைமை யேகுறி வேலா சீலா
          அடியர் பாலரு ளீவாய் நீபார் …… மணிமார்பா

அழகு லாவுவி சாகா வாகா
     ரிபமி னாள்மகிழ் கேள்வா தாழ்வா
          ரயலு லாவிய சீலா கோலா …… கலவீரா

வலபை கேள்வர்பி னானாய் கானார்
     குறவர் மாதும ணாளா நாளார்
          வனச மேல்வரு தேவா மூவா …… மயில்வாழ்வே

மதுர ஞானவி நோதா நாதா
     பழநி மேவுகு மாரா தீரா
          மயுர வாகன தேவா வானோர் …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

கலக வாள் விழி வேலோ சேலோ … கலகத்தை விளைவிக்கின்ற
ஒளி பெற்ற கண்கள் வேலாயுதமோ, சேல் மீனோ?

மதுர வாய் மொழி தேனோ பாலோ … இனிய வாய்ச் சொல்
தேனோ, பாலோ?

கரிய வார் குழல் காரோ கானோ துவரோ வாய் … கரு நிறமான
நீண்ட கூந்தல் மேகமோ, காடோ? வாய் பவளமோ?

களமும் நீள் கமுகோ தோள் வேயோ … கழுத்து நீண்ட பாக்கு
மரமோ? தோள் மூங்கிலோ?

உதரமானது மால் ஏர் பாயோ … வயிறானது திருமால் பள்ளி
கொண்ட அழகிய ஆல் இலையோ?

களப வார் முலை மேரோ கோடோ … சந்தனக் கலவை பூசிய
கச்சணிந்த மார்பகம் மேரு மலையோ, யானைத் தந்தமோ?

இடை தானும் இழையதோ மலர் வேதாவானோன்
எழுதினான் இலையோ வாய் பேசீர்
 … இடைதான் நூலோ,
தாமரை மேல் வீற்றிருக்கும் பிரம தேவன் இடையை
எழுதவில்லையோ? வாய் திறந்து பேசுங்கள்.

இது என மோனம் மினாரே பாரீர் என மாதர் … இது என்ன
மெளனம் சாதிக்கின்றீர்கள், மின் போன்ற பெண்மணிகளே
பாருங்கள், என்று பேசி விலைமாதர்களுடைய

இரு கண் மாயையிலே மூழ்காதே உனது காவிய நூல்
ஆராய்வேன்
 … இரண்டு கண்கள் என்னும் மாயைக் கடலில்
முழுகாமல், உன்னுடைய பிரபந்த நூல்களை ஆராய்வேன்.

இடர் படாது அருள் வாழ்வே நீயே தர வேணும் … இடர்கள்
எவையும் என்னைப் பீடிக்காத வகையில் உனது திருவருள்
நிறைந்த வாழ்வைத் தந்தருள வேண்டும்.

அலைவு இலாது உயர் வானோர் ஆனோர் நிலைமையே
குறி வேலா சீலா
 … அலைச்சல் இல்லாத வண்ணம், உயர்வு
பெற்ற தேவர்களின் நிலைமையைக் கண்காணிக்கும் வேலனே,
ஒழுக்கம் நிறைந்தவனே,

அடியவர் பால் அருள் ஈவாய் நீப ஆர் மணி மார்பா …
அடியார்களுக்குத் திருவருள் பாலிப்பவனே, கடப்ப மாலை
அணிந்த அழகிய மார்பனே,

அழகு உலாவு விசாகா வாகு ஆர் இப மினாள் மகிழ்
கேள்வா
 … அழகு பொலியும் முருகக் கடவுளே, கம்பீரம்
நிறைந்த (ஐராவதம் என்ற) யானையால் வளர்க்கப்பட்ட
மின்னலை ஒத்த தேவயானை மகிழ்கின்ற கணவனே,

தாழ்வார் அயல் உலாவிய சீலா கோலாகல வீரா …
உன்னைப் பணிந்து தாழ்பவர்களுடைய அருகிலே உலாவும்
சீலனே, ஆடம்பர வீரனே,

வலபை கேள்வர் பின் ஆனாய் கான் ஆர் குறவர் மாது
மணாளா
 … வல்லபையின் கணவராகிய விநாயகருடைய
தம்பியே, காட்டில் வசிக்கும் குறப் பெண்ணாகிய வள்ளியின்
கணவனே,

நாள் ஆர் வனச மேல் வரு தேவா மூவா மயில் வாழ்வே …
புதிய தாமரை மீது எழுந்தருளி உள்ள தேவனே*, முதுமை
இல்லாத மயிலின் செல்வமே,

மதுர ஞான வினோதா நாதா பழநி மேவு குமாரா தீரா …
இனிய ஞான வழிகளில் பொழுது போக்கும் நாதனே, பழனி
மலையில் வீற்றிருக்கும் குமாரனே, தீரனே,

மயுர வாகன தேவா வானோர் பெருமாளே. … மயில் வாகன
தேவனே, தேவர்களின் பெருமாளே.

மேலும் படிக்க : ஆலயத்துக்கு உள்ளேயே நடைபெறவிருக்கும் ஆனித்திருமஞ்சன வைபவம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *