திருப்புகழ் 128 கதியை விலக்கு (பழநி)
அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் இது இப்பாடலை தினமும் படித்தால் செல்வம் பெருகும்.

கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண
கனத னவெற்பு மேல்மிகு …… மயலான
கவலை மனத்த னாகிலும் உனது ப்ரசித்த மாகிய
கனதன மொத்த மேனியு …… முகமாறும்
அதிப லவஜ்ர வாகுவும் அயில்நு னைவெற்றி வேலதும்
அரவு பிடித்த தோகையு …… முலகேழும்
அதிர வரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும்
அபிந வபத்ம பாதமு …… மறவேனே
இரவி குலத்தி ராசத மருவி யெதிர்த்து வீழ்கடு
ரணமு கசுத்த வீரிய …… குணமான
இளைய வனுக்கு நீண்முடி அரச துபெற்று வாழ்வுற
இதமொ டளித்த ராகவன் …… மருகோனே
பதினொ ருருத்தி ராதிகள் தபனம் விளக்கு மாளிகை
பரிவொ டுநிற்கு மீசுர …… சுரலோக
பரிம ளகற்ப காடவி அரிய ளிசுற்று பூவுதிர்
பழநி மலைக்குள் மேவிய …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
கதியை விலக்கு மாதர்கள் … நற்கதியை அடையமுடியாதபடி
தடுக்கின்ற பொதுமகளிரின்
புதிய இரத்ன பூஷண … புதிய ரத்னாபரணங்களை அனிந்துள்ள
கனதன வெற்பு மேல்மிகு மயலான … பெருமார்பாகிய மலைமேல்
மோகம் மிக்க கொண்டதனால்
கவலை மனத்தனாகிலும் … கவலை கொண்ட மனத்தினனாக
நான் இருந்த போதிலும்,
உனது ப்ரசித்த மாகிய … உனது சிறப்பான புகழ்பெற்ற
கனதன மொத்த மேனியும் முகமாறும் … தங்கநிதி போன்ற
திருமேனியையும் (1), ஆறு திருமுகங்களையும் (2)
அதிபல வஜ்ர வாகுவும் … மிகுந்த வலிமை பொருந்திய
தோள்களையும் (3)
அயில்நுனை வெற்றி வேலதும் … கூரிய நுனியை உடைய
வெற்றி வேலினையும் (4)
அரவு பிடித்த தோகையும் … பாம்பினைக் கால்களில் பிடித்துள்ள
கலாப மயிலையும் (5)
உலகேழும் அதிர அரற்று கோழியும் … ஏழுலகங்களும்
அதிரும்படியாக கொக்கரிக்கும் கோழியையும் (6)
அடியர் வழுத்தி வாழ்வுறும் அபிநவ பத்ம பாதமும் …
உன்னடியார்கள் வாழ்த்தி வணங்கி வாழ்வு பெறும் புதிய தாமரை
மலர் போன்ற திருவடிகளையும் (7)
மறவேனே … ஒருபோதும் மறக்கமாட்டேன்.
இரவி குலத்தி ராசத மருவி … சூரிய அம்சமாக வந்த
சுக்ரீவன் ரஜோகுணத்தை மேற்கொண்டு
எதிர்த்து வீழ்கடு ரணமுக … (வாலியை) எதிர்த்து, தோற்று
நின்ற கொடிய போர்க்களத்தில்,
சுத்த வீரிய குணமான இளையவ னுக்கு … சுத்த வீரியம்
வாய்ந்த குணத்தினனாகிய தம்பி சுக்ரீவனுக்கு உதவி,
நீண்முடி அரசது பெற்று வாழ்வுற … அவன் பெரிய
அரசாட்சியைப் பெற்று வாழுமாறு
இதமொடளித்த ராகவன் மருகோனே … அன்புடன் அருளிய
ராகவனின் மருமகனே,
பதினொரு ருத்திராதிகள் தபனம் விளக்கு மாளிகை …
பதினோரு ருத்திரர்களின்* பிரகாசம் விளங்கும் கோவிலில்
பரிவொடு நிற்கும் ஈசுர … அன்போடு எழுந்தருளியிருக்கும்
ஈஸ்வரனே,
சுரலோக பரிமள கற்ப காடவி … தேவலோகத்தில் உள்ள
வாசம் மிகு கற்பக விருட்சங்கள் இருக்கும் காட்டில்
அரியளி சுற்று பூவுதிர் … வரிகளை உடைய வண்டுகள்
மொய்ப்பதால் கற்பக மலர்கள் உதிர்கின்ற
மேலும் படிக்க : அம்மனுக்கு உகந்த வெள்ளிக்கிழமையில் சந்திர தரிசனம்
பழநி மலைக்குள் மேவிய பெருமாளே. … பழநி மலையில்
வீற்றிருக்கும் பெருமாளே.