திருப்புகழ் 126 கடலைச் சிறை (பழநி)
அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் இது இப்பாடலை தினமும் படித்தால் நோய்கள் குணமாகும்.
கடலைச் சிறைவைத் துமலர்ப் பொழிலிற்
ப்ரமரத் தையுடற் பொறியிட் டுமடுக்
கமலத் தைமலர்த் திவிடத் தையிரப் …… பவனூணாக்
கருதிச் சருவிக் கயலைக் கயமுட்
படுவித் துழையைக் கவனத் தடைசிக்
கணையைக் கடைவித் துவடுத் தனையுப் …… பினின்மேவி
அடலைச் செயல்சத் தியையக் கினியிற்
புகுவித் துயமப் ப்ரபுவைத் துகைவித்
தரிகட் கம்விதிர்த் துமுறித் துமதித் …… தசகோரம்
அலறப் பணிரத் நமணிக் குழையைச்
சிலுகிட் டுமையிட் டொளிவிட் டுமருட்
டுதலுற் றபொறிச் சியர்கட் கடையிற் …… படுவேனோ
சடிலத் தவனிட் டவிசிட் டகுலத்
தொருசெட் டியிடத் தினுதித் தருள்வித்
தகருத் ரஜன்மப் பெயர்செப் பியிடப் …… பரிவாலே
சநகர்க் குமகஸ்த் யபுலஸ்த் யசநற்
குமரர்க் குமநுக் க்ரகமெய்ப் பலகைச்
சதுபத் துநவப் புலவர்க் கும்விபத் …… தியில்ஞான
படலத் துறுலக் கணலக் யதமிழ்த்
த்ரயமத் திலகப் பொருள்வ்ருத் தியினைப்
பழுதற் றுணர்வித் தருள்வித் தகசற் …… குருநாதா
பவளக் கொடிசுற் றியபொற் கமுகிற்
றலையிற் குலையிற் பலமுத் துதிர்செய்ப்
பழநிப் பதிவெற் பினில்நிற் குமரப் …… பெருமாளே.
மேலும் படிக்க : திருப்புகழ் 64 தரிக்குங்கலை (திருச்செந்தூர்)
……… சொல் விளக்கம் ………
கடலைச் சிறை வைத்து மலர்ப் பொழிலில் ப்ரமரத்தை உடல்
பொறி இட்டு மடுக் கமலத்தை மலர்த்தி … சமுத்திரத்தை ஒரு
எல்லையைத் தாண்டாதபடி சிறையில் வைத்து, மலர்ச் சோலையில் உள்ள
வண்டை உடலில் வரி ரேகைகளை அமைத்து ஒடுக்கி, மடுவில் உள்ள
தாமரை மலரை வாடச் செய்து,
விடத்தை இரப்பவன் ஊணாக் கருதிச் சருவிக் கயலைக் கயம்
உள் படுவித்து உழையைக் கவனத்து அடைசிக் கணையைக்
கடைவித்து வடுத்தனை உப்பினின் மேவி … ஆலகால விஷத்தை
பலி ஏந்தி இரப்பவனாகிய சிவ பெருமானுக்கு உணவாகக் கருதிவைத்து,
போராடும் கயல் மீனை குளத்தில் புக வைத்து, மானை காட்டில் அடையச்
செய்து, பாணத்தை உலையில் கடைய வைத்து, மாவடுவை உப்பினில்
ஊறவைத்து,
அடலைச் செயல் சத்தியை அக்கினியில் புகுவித்து யம
ப்ரபுவைத் துகைவித்து அரி கட்கம் விதிர்த்து முறித்து மதித்த
சகோரம் அலறப் ப(ண்)ணி … வெற்றிச் செயல் கொண்ட
வேற்படையை தீயினில் புக வைத்து, யமனை உதைத்திட்டு, ஒளி
பொருந்திய வாளை ஆட்டமுற்று முறிய வைத்து, மதிக்கப்படும் சகோரப்
பட்சியை (வெட்கத்தால்) அலறும்படிச் செய்து,
ரத்ந மணிக் குழையைச் சிலுகிட்டு மை இட்டு ஒளி விட்டு
மருட்டுதல் உற்ற பொறிச்சியர்கள் கடையில் படுவேனோ …
ரத்தினத்தால் செய்யப்பட்ட மணிக்குழையோடு போராடுவதும்,
மயக்கும் மை அணிந்ததும், ஒளி வீசுவதும், மருட்டுதல் செய்யும்
மனத்தை உடைய விலைமாதர்களின் கடைக்கண்களில்
அகப்படுவேனோ?
சடிலத்தவன் இட்ட சிட்ட குலத்து ஒரு செட்டியிடத்தின்
உதித்து அருள் வித்தக ருத்ர ஜன்மப் பெயர் செப்பி இட
பரிவாலே சநகர்க்கும் அகஸ்த்ய புலஸ்த்ய சனக் குமரர்க்கும்
அநுக்ரக … சடை மகுடத்தவனாகிய சிவபெருமானின் ஆணையின்படி
மேன்மையான குலத்தில் ஒரு செட்டி இடத்தே தோன்றி, அருளும்
ஞானமும் கொண்ட ருத்ர ஜன்மன்* என்னும் பெயருடன் திகழ்ந்து,
அன்புடனே சநகர், அகஸ்தியர், புலஸ்தியர், சநற்குமரர்
ஆகியோர்களுக்கு அருள் பாலித்தவனே,
மெய்ப் பலகைச் சது பத்து நவப் புலவர்க்கும் விபத்து இல்
ஞான படலத்து உறு லக்கண லக்ய தமிழ்த் த்ரயம் அத்தில்
அகப் பொருள் வ்ருத்தியினைப் பழுது அற்று உணர்வித்து
அருள்வித்த வித்தக சற்குருநாதா … சங்கப்பலகையில்
வீற்றிருந்த நாற்பத்தொன்பது புலவர்களுக்கும் வேறுபாடு இல்லாத
முறையில் ஞானப் பகுதியில் உள்ள இலக்கண இலக்கிய (இயல்,
இசை, நாடகம் ஆகிய) முத்தமிழில் (சிவபெருமான் இயற்றிய)
அகப்பொருள் விளக்கத்தை குற்றமின்றி உணர்வித்து அருளிய
வித்தகனே, சற்குரு நாதனே,
பவளக் கொடி சுற்றிய பொன் கமுகின் தலையில் குலையில்
பல முத்து உதிர் செய்ப் பழநிப்பதி வெற்பினில் நில் குமரப்
பெருமாளே. … பவளக் கொடி சுற்றிய அழகிய கமுகு மரத்தின்
உச்சிக் குலையினின்றும் பல முத்துக்கள் உதிர்கின்ற பழநிப் பதி
மலையில் நின்றருளும் பெருமாளே.