திருப்புகழ் 124 ஒருவரை ஒருவர் (பழநி)
அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் இது இப்பாடலை தினமும் படித்தால் செல்வம் பெருகும்.
ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் மதவி சாரர்
ஒருகுண வழியு றாத …… பொறியாளர்
உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடி
உறநம னரகில் வீழ்வ …… ரதுபோய்பின்
வருமொரு வடிவ மேவி யிருவினை கடலு ளாடி
மறைவரி னனைய கோல …… மதுவாக
மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு
வடிவுற அருளி பாத …… மருள்வாயே
திரிபுர மெரிய வேழ சிலைமத னெரிய மூரல்
திருவிழி யருள்மெய்ஞ் ஞான …… குருநாதன்
திருசரஸ் வதிம யேசு வரியிவர் தலைவ ரோத
திருநட மருளு நாத …… னருள்பாலா
சுரர்பதி யயனு மாலு முறையிட அசுரர் கோடி
துகளெழ விடுமெய்ஞ் ஞான …… அயிலோனே
சுககுற மகள்ம ணாள னெனமறை பலவு மோதி
தொழமுது பழநி மேவு …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் … ஒருவர் சொல்வதை மற்றவர்
இன்னதென்று தெரிந்து அறியமாட்டாதவர்களாகிய
மத விசாரர் ஒருகுண வழியு றாத பொறியாளர் … மத
ஆராய்ச்சியாளர்களும், ஒரு கொள்கை வழியில் நிலைக்காத மனத்தை
உடையவர்களுமான மக்கள்
உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடி … இந்த
உடல் நீடித்து இருக்கும் என்று எண்ணி, களவும், பொய்யும், கொலையும்
செய்து கொண்டே வந்து,
உற நமன் நரகில் வீழ்வர் … இறுதியாக அனைவரும் யமனுடைய
நரகத்தில் சென்று வீழ்வர்.
அதுபோய்பின் வருமொரு வடிவ மேவி … அந்த நிலை
முடிந்தபின்பு கிடைக்கும் வேறு ஓர் உருவத்தை மறு பிறவியில் அடைந்து,
இருவினை கடலுள் ஆடி மறைவர் … நல்வினை, தீவினை என்ற
இருவினைக் கடலில் உளைந்து மறைவர்.
இனனைய கோலம் அதுவாக … இத்தகைய மனிதர்களின் கோலம்
அவ்வாறாக,
மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு … (யான் அவ்வாறு
அலையாமல்) பொருந்திய பரமஞானமாகிய சிவகதியைப் பெறுவதற்காக
திருநீற்றைத் தந்து,
வடிவுற அருளி பாதம் அருள்வாயே … நல்ல நிலையை நான்
அடைய எனக்கு அருளி, உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக.
திரிபுர மெரிய வேழ சிலைமதனெரிய … திரிபுரம் எரிந்து விழவும்,
கரும்பு வில்லைக் கொண்ட மன்மதன் எரிந்து விழவும்
மூரல் திருவிழி யருள்மெய்ஞ் ஞானகுருநாதன் … புன்சிரிப்பாலும்,
நெற்றியிலுள்ள திருக்கண்ணாலும் அருள் புரிந்த மெய்ஞ்ஞான
குருநாதனும்,
திருசரஸ்வதி மயேசுவரியிவர் தலைவர் ஓத … லக்ஷ்மி, ரஸ்வதி,
மஹேஸ்வரி ஆகியோரது தலைவர்களாகிய திருமால், பிரமன், ருத்திரன்
ஆகியோர் ஓதிப் போற்ற
திருநடம் அருளு நாதன்அருள்பாலா … திரு நடனம் ஆடி
அருளிய நாதன் சிவபிரான் அருளிய குழந்தையே,
சுரர்பதி யயனு மாலு முறையிட … தேவர்கள் தலைவன்
இந்திரனும், பிரமனும், திருமாலும் முறையிட்டு உன்னடி பணிய,
அசுரர் கோடி துகளெழ விடு … அசுர கோடிகள் தூளாகுமாறு
செலுத்திய
மெய்ஞ் ஞான அயிலோனே … மெய்ஞ்ஞான சக்தி வேலாயுதனே,
சுககுற மகள்ம ணாளனென மறை பலவு மோதி தொழ …
சுகம் பாலிக்கும் குறமகள் வள்ளியின் மணவாளன் என்று வேதங்கள்
பலவும் போற்றிப் புகழ,
முது பழநி மேவு பெருமாளே. … பழமை வாய்ந்த பழநிப்பதியில்
வீற்றிருக்கும் பெருமாளே.
மேலும் படிக்க ; சிவபுராண உபன்யாசம் வீட்டிலேயே கண்விழித்து பூஜைகள் செய்து வழிபட..!!