திருப்புகழ் 119 இலகிய களப (பழநி)
அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் இது இப்பாடலை தினமும் மன கஷ்டங்கள் நீங்கும்
இலகிய களபசு கந்த வாடையின்
ம்ருகமத மதனைம கிழ்ந்து பூசியெ
இலைசுருள் பிளவைய ருந்தி யேயதை …… யிதமாகக்
கலவியி லவரவர் தங்கள் வாய்தனி
லிடுபவர் பலபல சிந்தை மாதர்கள்
கசனையை விடுவது மெந்த நாளது …… பகர்வாயே
சிலைதரு குறவர்ம டந்தை நாயகி
தினைவன மதனிலு கந்த நாயகி
திரள்தன மதனில ணைந்த நாயக …… சிவலோகா
கொலைபுரி யசுரர்கு லங்கள் மாளவெ
அயிலயி லதனையு கந்த நாயக
குருபர பழநியி லென்று மேவிய …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
இலகிய களப சுகந்த வாடையின் ம்ருகமதம் அதனை
மகிழ்ந்து பூசியெ … விளங்குகின்ற சந்தனக் கலவைகளின் நறுமணம்
வீச, கஸ்தூரியை (தம் மார்பில்) மகிழ்ச்சியுடன் பூசியும்,
இலை சுருள் பிளவை அருந்தியே அதை இதமாகக் கலவியில்
அவர் அவர் தங்கள் வாய் தனில் இடுபவர் … வெற்றிலைச்
சுருளையும் பாக்கின் பிளவையும் உண்டு, அதை இன்பகரமான பேச்சுடன்
புணர்ச்சியின் போது (தங்களிடம்) வந்துள்ள அவரவருடைய வாயில்
இடுபவரும்,
பல பல சிந்தை மாதர்கள் கசனையை விடுவதும் எந்த நாள்
அது பகர்வாயே … பற்பல எண்ணங்களை உடைய விலைமாதர்கள்
மீதுள்ள பற்றினை நான் விட்டு விடும் அந்த நாள் எது என்று
சொல்லுவாயாக.
சிலை தரு குறவர் மடந்தை நாயகி தினை வனம் அதனில்
உகந்த நாயகி திரள் தனம் அதில் அணைந்த நாயக
சிவலோகா … (வள்ளி) மலை தந்த குறவர் மகளான வள்ளி நாயகி,
தினைப் புனத்தில் நீ விருப்பம் கொண்ட நாயகியின் திரண்ட
மார்பகங்களைத் தழுவிய நாயகனே, சிவலோகனே.
கொலைபுரி அசுரர் குலங்கள் மாளவே அயில் அயில் அதனை
உகந்த நாயக … கொலைத் தொழிலைச் செய்யும் அசுரர் கூட்டத்தினர்
மாண்டு அழியும்படி கூரிய வேலாயுதத்தை மகிழ்ந்து தோளில் ஏந்தும்
நாயகனே,
குருபர பழநியில் என்றும் மேவிய பெருமாளே. … குரு மூர்த்தியே,
பழனி மலையில் என்றும் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே