ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் 115 இத் தாரணிக்குள் (பழநி)

அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் இது இப்பாடலை தினமும் படித்தால் நல்ல செய்தி வந்து சேரும்.

இத்தா ரணிக்குள்மநு வித்தாய் முளைத்தழுது
  கேவிக் கிடந்துமடி மீதிற் றவழ்ந்தடிகள்
    தத்தா தனத்ததன இட்டே தெருத்தலையில்
      ஓடித் திரிந்துநவ கோடிப் ப்ரபந்தகலை
        யிச்சீர் பயிற்றவய தெட்டொ டுமெட்டுவர
          வாலக் குணங்கள்பயில் கோலப் பெதும்பையர்க …… ளுடனுறவாகி

இக்கார் சரத்துமத னுக்கே இளைத்துவெகு
  வாகக் கலம்பவகை பாடிப் புகழ்ந்துபல
    திக்கோ டுதிக்குவரை மட்டோ டிமிக்கபொருள்
      தேடிச் சுகந்தஅணை மீதிற் றுயின்றுசுக
        மிட்டா தரத்துருகி வட்டார் முலைக்குளிடை
          மூழ்கிக் கிடந்துமய லாகித் துளைந்துசில …… பிணியதுமூடிச்

சத்தா னபுத்தியது கெட்டே கிடக்கநம
  னோடித் தொடர்ந்துகயி றாடிக் கொளும்பொழுது
    பெற்றோர் கள்சுற்றியழ வுற்றார் கள்மெத்தஅழ
      ஊருக் கடங்கலிலர் காலற் கடங்கவுயிர்
        தக்கா திவர்க்குமய னிட்டான் விதிப்படியி
          னோலைப் பழம்படியி னாலிற் றிறந்ததென …… எடுமெனவோடிச்

சட்டா நவப்பறைகள் கொட்டா வரிச்சுடலை
  யேகிச் சடம்பெரிது வேகப் புடஞ்சமைய
    இட்டே யனற்குளெரி பட்டா ரெனத்தழுவி
      நீரிற் படிந்துவிடு பாசத் தகன்றுனது
        சற்போ தகப்பதும முற்றே தமிழ்க்கவிதை
          பேசிப் பணிந்துருகு நேசத் தையின்றுதர …… இனிவரவேணும்

தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத
  தாதத் தனந்ததன தானத் தனந்ததன
    செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு
      தாதத் தசெந்திகுத தீதத் தசெந்தரிக
        தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு
          தோதக் கணங்கணக கூகுக் கிணங்கிணென …… ஒருமயிலேறித்

திட்டே ரதத்தசுரர் பட்டே விழப்பொருது
  வேலைத் தொளைந்துவரை யேழைப் பிளந்துவரு
    சித்தா பரத்தமரர் கத்தா குறத்திமுலை
      மீதிற் புணர்ந்துசுக லீலைக் கதம்பமணி
        சுத்தா வுமைக்குமொரு முத்தாய் முளைத்தகுரு
          நாதக் குழந்தையென வோடிக் கடம்பமலர் …… அணிதிருமார்பா

மத்தா மதக்களிறு பிற்றா னுதித்தகுக
  னேதத் திலங்கையினி லாதிக்க முண்டதொரு
    முட்டா ளரக்கர்தலை யிற்றே விழக்கணைக
      ளேதொட் டகொண்டலுரு வாகிச் சுமந்ததிக
        மட்டார் மலர்க்கமல முற்றா சனத்திருவை
          மார்பிற் புணர்ந்தரகு ராமற் குமன்புடைய …… மருமகனாகி

வற்றா மதுக்கருணை யுற்றே மறைக்கலைக
  ளோதித் தெரிந்துதமிழ் சோதித் தலங்கலணி
    யத்தா பரத்தையறி வித்தா விசுற்றுமொளி
      யாகிப் ப்ரபந்தமணி வேல்தொட் டமைந்தபுய
        வர்க்கா மருப்புழுகு முட்டா திருப்பழநி
          வாழ்வுக் குகந்தடிய ராவிக் குள்நின்றுலவி …… வருபெருமாளே.

……… சொல் விளக்கம் ………

இத்தாரணிக்குள் மனு வித்தாய் முளைத்து அழுது கேவிக்
கிடந்து மடி மீதில் தவழ்ந்து
 … இந்தப் பூவுலகத்தில் மனித வித்தாகத்
தோன்றி, அழுது, பெரு மூச்சு விட்டுத் திணறித் (தாயின்) மடிமீது கிடந்து,
தவழ்ந்து,

அடிகள் தத்தா தனத்ததன இட்டே தெருத் தலையில் ஓடித்
திரிந்து நவ கோடிப் ப்ரபந்த கலை இச் சீர் பயிற்ற வயது
எட்டோடும் எட்டு வர
 … கால்களைத் தத்தித் தத்தித் தளர்
நடையிட்டு, தெருவில் ஓடித் திரிந்து, புதுமையான கோடிக்கணக்கான
நூல்களை இங்குச் சிறப்புப்படி கற்றுக் கொண்டு, பதினாறு
வயது ஆனதும்,

வாலக் குணங்கள் பயில் கோலப் பெதும்பையர்கள் உடன்
உறவாகி இக்கு ஆர் சரத்து மதனுக்கே இளைத்து வெகுவாகக்
கலம்ப வகை பாடிப் புகழ்ந்து
 … இளமைப் பருவத்துக்குரிய
குணங்களில் பயிற்சியுள்ள அழகிய பெண்களுடன் நட்பு கொண்டு,
கரும்பு வில்லினையும் அரிய மலர்களையுமுடைய மன்மத
சேஷ்டையால் சோர்வடைந்து, பல வகையாக கலம்பகம் முதலிய
நூல்களை (செல்வந்தர்கள் மீது) பாடி, அவர்களைப் புகழ்ந்து,

பல திக்கோடு திக்கு வரை மட்டு(ம்) ஓடி மிக்க பொருள் தேடி
சுகந்த அணை மீதில் துயின்று
 … பல திக்குகளிலும் திசை முடிவு
வரை சென்று அதிகமாகப் பொருள் தேடி, நல்ல வாசனை கமழும்
மலர்ப்படுக்கைகளில் உறங்கி,

சுகம் இட்டு ஆதரத்து உருகி வட்டார் முலைக்குள் இடை
மூழ்கிக் கிடந்து மயலாகித் துளைந்து சில பிணி அது மூடிச்
சத்தான புத்தி அது கெட்டே கிடக்க
 … (விலைமாதர்களது)
இன்பத்தை நல்கும் ஆசையில் உருகி, திரட்சியான மார்பகங்களின்
இடையே முழுகிக் கிடந்து, காம மயக்கத்தோடு அழுந்திக் கிடந்து,
சில நோய்கள் வந்து மூடி, நல்லறிவு கெட்டுக் கிடக்கும் போது,

நமன் ஓடித் தொடர்ந்து கயிறு ஆடிக் கொளும் பொழுது
பெற்றோர்கள் சுற்றி அழ உற்றார்கள் மெத்த அழ ஊருக்கு
அடங்கல் இலர் காலற்கு அடங்க உயிர் தக்காது
 … யமன்
(என்னைத்) தொடர்ந்து வந்து பாசக் கயிற்றால் கட்டி உயிரைக்
கொண்டு போகும் போது என்னைப் பெற்றவர்கள் சுற்றி நின்று
அழவும், சுற்றத்தார்கள் மிக அழவும், இவர் ஊராருக்கு ஒரு நாளும்
அடங்கியதில்லை, நமனுக்கு இன்று அடங்குமாறு இனி உயிர்
நிலை பெறாது,

இவர்க்கும் அயன் இட்டான் விதிப்படியின் ஓலைப் பழம்
படியினால் இற்று இறந்தது என எடும் என
 … இவருக்கு
பிரமன் இன்றோடு அழியும்படி விதித்திருக்கிறான், (முன் எழுதியது
போல்) யமன் ஓலை வர இன்று இறந்து விட்டார் என்று சிலர்
கூறவும், நாழிகை ஆயிற்று, சுடலைக்கு எடுங்கள் என்று சிலர்
சொல்லவும்,

ஓடிச் சட்டா நவப் பறைகள் கொட்டா வரிச்சுடலை ஏகிச்
சடம் பெரிது வேகப் புடம் சமைய இட்டே அனற்குள் எரி
பட்டார் எனத் தழுவி நீரில் படிந்து விடு பாசத்து அகன்று
 …
ஓடிச் சென்று திட்டமிட்டபடி புதிய பறைகள் ஆகிய வாத்தியங்களை
முழக்கவும், சுடுகாட்டுக்குச் சென்று, உடல் நன்கு வெந்து
நீறாவதற்கு வரட்டி முதலியவற்றை அடுக்கி, அந்த நெருப்பில்
எரிந்து போனார் என்று துயரத்தோடு ஒருவரை ஒருவர் கட்டி அழுது,
தண்ணீரில் முழுகி விடுபட்டுப் போகும் பாசத்தினின்றும் விலகி,

உனது சத் போதகப் பதுமம் உற்றே தமிழ்க் கவிதை பேசிப்
பணிந்து உருகு நேசத்தை இன்று தர இனி வரவேணும்
 …
உன்னுடைய உண்மை ஞானத்துக்கு உறைவிடமான திருவடித்
தாமரைகளைப் பற்றுக் கோடாக அடைந்து தமிழ்க் கவிதைகளை
ஓதிப் பணிந்து, உருகும்படியான அன்பை இன்று அடியேனுக்குத்
தர இனி வந்தருள வேண்டும்.

தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத
  தாதத் தனந்ததன தானத் தனந்ததன
    செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு
      தாதத் தசெந்திகுத தீதத் தசெந்தரிக
        தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு
          தோதக் கணங்கணக கூகுக் கிணங்கிணென
ஒரு மயில் ஏறி
 …
தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத
  தாதத் தனந்ததன தானத் தனந்ததன
    செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு
      தாதத் தசெந்திகுத தீதத் தசெந்தரிக
        தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு
          தோதக் கணங்கணக கூகுக் கிணங்கிண் என்று ஒலிக்கும்படி
ஒப்பற்ற மயிலின் மீது ஏறி வந்து,

திண் தேர் ரதத்து அசுரர் பட்டே விழப் பொருது வேலைத்
தொளைந்து வரை ஏழைப் பிளந்து வரு சித்தா பரத்து அமரர்
கத்தா
 … வலிமையில் தேர்ந்த ரதத்தின் மீது வந்த அரக்கர்கள் இறந்து
படுமாறு சண்டை செய்து, கடலை வற்றச் செய்து, ஏழு மலைகளையும்
பிளந்து நின்ற சித்த* மூர்த்தியே, தேவர்களுக்கு எல்லாம் மேலான
தலைவனே,

குறத்தி முலை மீதில் புணர்ந்து சுக லீலைக் கதம்பம் அணி
சுத்தா உமைக்கும் ஒரு முத்தாய் முளைத்த குரு நாதக்
குழந்தை என ஓடிக் கடம்ப மலர் அணி திரு மார்பா
 … குறப்
பெண்ணாகிய வள்ளியின் மார்பகங்களைச் சேர்ந்து இன்பத்
திருவிளையாடல்களைச் செய்து (உனது தோள்களில்) நறு மணம்
படிந்துள்ள தூய்மையானவனே, பார்வதிக்கு ஒரு முத்து
என்னும்படியாக முளைத்தும், குருநாதக் குழந்தை என்று பேர்
பெற்றும், ஓடி விளையாடிக் கடப்ப மலரை அணிந்தும் உள்ள
திருமார்பனே.

மத்தா மதக் களிறு பின் தான் உதித்த குகனே … மதங்களை
மிகவும் பொழிகின்ற யானை முகம் உடைய கணபதியின் பின்பு
உதித்த குக மூர்த்தியே

ஏதத்து இலங்கையினில் ஆதிக்கம் உண்டது ஒரு முட்டாள்
அரக்கர் தலை இற்றே விழக் கணைகளே தொட்ட கொண்டல்
உருவு ஆகி
 … குற்றம் பொருந்திய இலங்கையில் தலைமை கொண்ட
முட்டாளாகிய ராவணனுடைய தலை அறுந்து கீழே விழ அம்புகளை
ஏவியவரும், மேக நிறத்தை உடையவரும்,

சுமந்து அதிகம் மட்டு ஆர் மலர்க் கமலம் உற்றா சனத்
திருவை மார்பில் புணர்ந்த ரகுராமற்கும் அன்புடைய
மருமகன் ஆகி
 … மிகுந்த வாசனையை உடைய தாமரை மலர்
மணம் கொண்ட, ஜனகன் மகளாகிய சீதையை மார்பில் அணைத்த
ரகுராமனுக்கு அன்புடைய மருகனாகி,

வற்றா மதுக் கருணை உற்றே மறைக் கலைகள் ஓதித்
தெரிந்து தமிழ் சோதித்து அலங்கல் அணி அத்தா
 … வற்றாத
தேன் போலக் கருணையைப் பூண்டு, வேத நூல்களை ஓதி நன்கு
பயின்று தமிழை ஆராய்ந்து (தேவாரப்) பாமாலைகளைத் தந்தைக்குச்
சூட்டிய (திருஞானசம்பந்தாராக வந்த) ஐயனே,

பரத்தை அறிவித்து ஆவி சுற்றும் ஒளி ஆகிப் ப்ரபந்தம்
அணி வேல் தொட்டு அமைந்த புயவர்க்கா
 … பரம் பொருளை
இன்னது என்று (உலகத்தோர்க்கு) அறிவித்து, உயிரைச்
சூழ்ந்திருக்கும் அருட் பெருஞ் சோதியாக விளங்கி, துதி நூல்களைப்
பெற்றணிந்த, வேலாயுதத்தை ஏந்தி விளங்கும் தோள் கூட்டங்களை
உடையவனே,

மருப் புழுகு முட்டா திருப் பழநி வாழ்வுக்கு உகந்து
அடியர் ஆவிக்குள் நின்று உலவி வரு பெருமாளே.
 …
வாசனை உள்ள புனுகு எப்போதும் கமழும் பழநிப்பதியில்
வீற்றிருப்பதில் மகிழ்ந்து அடியார்களின் ஆவிக்குள் நின்று
உலவி வரும் பெருமாளே.

மேலும் படிக்க : மதுரையை ஆளுகின்ற மீனாட்சி அம்மன் 108 போற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *