திருப்புகழ் 114 ஆறுமுகம் ஆறுமுகம் (பழநி)
அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது இப்பாடலை தினமும் படித்தால் அப்பன் முருகனின் ஆசி முழுவதும் கிடைக்கும்.
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் …… என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
யார்கள்பத மேதுணைய …… தென்றுநாளும்
ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
ஈசஎன மானமுன …… தென்றுமோதும்
ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
யேவர்புகழ் வார்மறையு …… மென்சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
நீலமயில் வாகவுமை …… தந்தவேளே
நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
நீடுதனி வேல்விடும …… டங்கல்வேலா
சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
தேவர்துணை வாசிகரி …… அண்டகூடஞ்
சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
தேவர்வர தாமுருக …… தம்பிரானே.
……… சொல் விளக்கம் ………
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம், ஆறுமுகம்
ஆறுமுகம் என்றுபூதி … ‘ஆறுமுகம் .. ஆறுமுகம்’ என்று ஆறுமுறை
சொல்லி திருநீற்றை
ஆகம் அணி மாதவர்கள் … உடலிலே பூசி அணியும் பெரும்
தவசிகள்தம்
பாதமலர் சூடும் அடியார்கள் … பாதமலர்களைச் சூடும்
அடியவர்களின்
பதமே துணைய தென்று … திருவடியே துணையென்று
கடைப்பிடித்தும்,
நாளும் ஏறுமயில் வாகன … தினந்தோறும், ‘ஏறுதற்கு அமைந்த
மயில் வாகனனே’,
குகா சரவணா எனது ஈச … ‘குகனே’, ‘சரவணனே’, ‘என்னுடைய
ஈசனே’,
எனமானம் உனதென்றும் ஓதும் … ‘என் பெருமை உனது பெருமை’
என்று கூறியும்
ஏழைகள் வியாகுலம் … ஏழையடியார்களின் மனத்துயர்
இதேதென வினாவில்உனை … ஏன் எப்படி வந்தது என்று
முறையிட்டுக் கேட்டும் (நீ கேளாதிருந்தால் பின்பு) உன்னை
யேவர் புகழ்வார் … யார்தாம் புகழ்வார்கள்?
மறையும் என்சொலாதோ … வேதம்தான் பின்பு உன்னை என்ன
சொல்லாதோ?
நீறுபடு மாழைபொரு மேனியவ … திருநீறு துலங்கும் பொன்னார்
மேனியுடையாய்
வேல, அணி நீலமயில் வாக … வேலனே அழகிய நீலமயில்
வாகனனே
உமை தந்தவேளே … உமையாள் பெற்ற முருகவேளே
நீசர்கள் த(ம்)மோடு … அசுரர்கள் அனைவருடனும்
(எ)னது தீவினையெலா மடிய … என்னுடைய தீவினையாவும்
மடிந்தொழிய
நீடு தனி வேல் விடு … நீண்ட ஒப்பற்ற வேலாயுதத்தைச்
செலுத்திய
மடங்கல்வேலா … வடவாக்கினி போன்ற உக்கிரமான வேலனே
சீறிவரு மாறவுணன் … கோபித்து வந்த பெரும் அசுரன்
(கஜமுகாசுரன்)
ஆவியுணும் ஆனைமுக தேவர் துணைவா … உயிரை உண்ட
ஆனைமுகத் தேவரின் தம்பியே
சிகரி அண்டகூடஞ்சேரும் … மலைச்சிகரம் வான்முகட்டைத்
தொடும்
அழகார் பழனி வாழ் குமரனே … அழகு நிறைந்த பழநிவாழும்
குமரனே
பிரம தேவர் வரதா … பிரம்ம தேவருக்கு வரம் தந்தவனே
முருக தம்பிரானே. … முருகனே, தம்பிரானே.