ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் 113 ஆலகாலம் என (பழநி)

அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது இப்பாடலை தினமும் படித்தால் தொழிலில் இருந்து வந்த பிரச்சனை நீங்கும்.

ஆல காலமெ னக்கொலை முற்றிய
     வேல தாமென மிக்கவி ழிக்கடை
          யாலு மோகம்வி ளைத்துவி தத்துட …… னிளைஞோரை

ஆர வாணைமெ யிட்டும றித்துவி
     கார மோகமெ ழுப்பிய தற்குற
          வான பேரைய கப்படு வித்ததி …… விதமாகச்

சால மாலைய ளித்தவர் கைப்பொருள்
     மாள வேசிலு கிட்டும ருட்டியெ
          சாதி பேதம றத்தழு வித்திரி …… மடமாதர்

தாக போகமொ ழித்துஉ னக்கடி
     யானென் வேள்விமு கத்தவ முற்றிரு
          தாளை நாளும்வ ழுத்திநி னைத்திட …… அருள்வாயே

வால மாமதி மத்தமெ ருக்கறு
     காறு பூளைத ரித்தச டைத்திரு
          வால வாயன ளித்தரு ளற்புத …… முருகோனே

மாய மானொட ரக்கரை வெற்றிகொள்
     வாலி மார்புதொ ளைத்திட விற்கொடு
          வாளி யேவிய மற்புய னச்சுதன் …… மருகோனே

நாலு வேதந விற்றுமு றைப்பயில்
     வீணை நாதனு ரைத்தவ னத்திடை
          நாடி யோடிகு றத்தித னைக்கொடு …… வருவோனே

நாளி கேரம்வ ருக்கைப ழுத்துதிர்
     சோலை சூழ்பழ நிப்பதி யிற்றிரு
          ஞான பூரண சத்தித ரித்தருள் …… பெருமாளே.

மேலும் படிக்க : திருப்புகழ் 139 களப முலையை (பழநி)

……… சொல் விளக்கம் ………

ஆலகாலம் எனக் கொலை முற்றிய வேல் அதாம் என மிக்க
விழிக் கடையாலும்
 … ஆலகால நஞ்சு என்னும்படியும், கொலைத்
தொழில் முதிர்ந்த வேற்படை என்று சொல்லும்படியும் உள்ள மிகக்
கொடிய கடைக் கண்ணாலும்

மோகம் விளைத்து விதத்துடன் இளைஞோரை ஆர ஆணை
மெ(ய்)யிட்டு மறித்து
 … மோகத்தை விளைவித்து பலவித வகையில்
இளைஞர்களை நிரம்ப ஆணைகளை உண்மை போலக் கூறி,
அவர்களை எங்கும் போக விடாமல் தடுத்து,

விகார மோகம் எழுப்பி அதற்கு உறவான பேரை
அகப்படுவித்து
 … பொல்லாத ஆசையை உண்டுபண்ணி, அதற்கு
வசப்பட்ட பேர்வழிகளை தங்கள் கைவசப்படுத்தி,

அதி விதமாக சால மாலை அளித்து அவர் கைப்பொருள்
மாளவே சிலுகிட்டு மருட்டியெ
 … அனேக விதங்களாக, மிகவும்
காம மயக்கத்தைத் தந்து, அவர்களுடைய கையில் உள்ள பொருள்
அத்தனையும் வற்றிப் போகும்படி சண்டை செய்தும், மயக்கியும்,

சாதி பேதம் அறத் தழுவித் திரி மடமாதர் தாக போகம்
ஒழித்து
 … சாதி வேற்றுமை இல்லாமல் மனிதர்களைத் தழுவித்
திரிகின்ற விலைமாதர்களின் மீதுள்ள காமவிடாயை நீக்கி,

உனக்கு அடியான் என் வேள்வி முகத் தவம் உற்று இரு
தாளை நாளும் வழுத்தி நினைத்திட அருள்வாயே
 …
உன்னுடைய அடியான் எனக் கொண்டு, ஆராதனையுடன் கூடிய
தவ ஒழுக்கத்தை மேற் கொண்டு, உனது இரண்டு திருவடிகளை
தினமும் போற்றி நினைக்கும்படி அருள்வாயாக.

வால மா மதி மத்தம் எருக்கு அறுகு ஆறு பூளை தரித்த …
முற்றாத இளம் பிறை, ஊமத்த மலர், எருக்கு, அறுகு, கங்கை ஆறு,
பூளைப்பூ ஆகியவற்றை அணிந்துள்ள

சடைத் திரு ஆல வாயன் அளித்தருள் அற்புத முருகோனே …
சடையைக் கொண்ட மதுரைப் பிரான் ஆகிய சொக்கேசர் ஈன்றருளிய
அற்புதமான முருகோனே,

மாய மான் ஒடு அரக்கரை வெற்றி கொள் வாலி மார்பு
தொளைத்திட வில் கொடு வாளி ஏவிய மல் புயன் அச்சுதன்
மருகோனே
 … மாய மானாக வந்த மாரீசனையும், அரக்கர்களையும்
வெற்றி கொண்டவரும், வாலியின் மார்பைத் தொளைக்கும் வண்ணம்
வில்லை ஏந்தி அம்பை எய்தவரும், மற்போருக்குப் பொருந்திய புயத்தை
உடையவருமான (ராமனாகிய) திருமாலின் மருகனே,

நாலு வேத(ம்) நவிற்று முறைப் பயில் வீணை நாதன்
உரைத்த வனத்திடை
 … நான்கு வேதங்களையும் சொல்லப்பட்ட
முறைப்படி பயின்று நவில்கின்ற, வீணை ஏந்திய நாரதர் குறிப்பிட்டு
உரைத்த (வள்ளி மலைக்) காட்டினிடையே

நாடி ஓடி குறத்தி தனைக் கொடு வருவோனே … தேடி ஓடிச்
சென்று குறத்தியாகிய வள்ளியைக் கொண்டு வந்தவனே,

நாளிகேரம் வருக்கை பழுத்து உதிர் சோலை சூழ் பழநி
பதியில்
 … தென்னையும் பலாவும் பழுத்து உதிர்க்கும் சோலைகள்
சூழ்ந்த பழனி என்னும் ஊரில்

திரு ஞான பூரண சத்தி தரித்து அருள் பெருமாளே. … சிறந்த
ஞான பூரண சக்தியாகிய வேலாயுதத்தைத் தரித்தருளும் பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *