திருப்புகழ் 111 அறமிலா நிலை (பழநி)
அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது இப்பாடலை தினமும் படித்தால் கடன் பிரச்சினை நீங்கும்.

அறமிலா நிலைகற்று கொடியவேல் விழிவிட்டு
ளறிவுதா னறவைத்து …… விலைபேசி
அமளிமீ தினில்வைத்து பவளவா யமுதத்தை
யதிகமா வுதவிக்கை …… வளையாலே
உறவினா லுடலத்தை யிறுகவே தழுவிக்கொ
ளுலையிலே மெழுகொத்த …… மடவாரோ
டுருகியே வருபெற்றி மதனநா டகபித்து
ஒழியுமா றொருமுத்தி …… தரவேணும்
மறவர்மா தொருரத்ந விமலகோ கநகத்தி
மயிலனாள் புணர்செச்சை …… மணிமார்பா
மருள்நிசா சரன்வெற்பி லுருகிவீழ் வுறமிக்க
மயிலிலே றியவுக்ர …… வடிவேலா
பறைகள்பே ணியருத்ரி கரியகா ரளகத்தி
பரமர்பா லுறைசத்தி …… யெமதாயி
பழையபார் வதிகொற்றி பெரியநா யகிபெற்ற
பழநிமா மலையுற்ற …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
அறம் இலா நிலை கற்று கொடிய வேல் விழி விட்டு … அறவழி
இல்லாத தொழிலைக் கற்று, கொடுமை பூண்ட வேலைப் போல் கூரிய
கண்ணைச் செலுத்தி,
உள் அறிவு தான் அற வைத்து விலை பேசி … உள்ளத்தில்
அறிவு என்பதை நீக்கி, விலை பேசி,
அமளி மீதினில் வைத்து பவள வாய் அமுதத்தை அதிகமா(க)
உதவி … படுக்கையின் மேல் சேர்த்து, தமது பவளம் போன்ற சிவந்த
வாய் அமுதத்தை அதிகமாகத் தந்து,
கை வளையாலே உறவினால் உடலத்தை இறுகவே தழுவிக்
கொள் … உறவு கூறிக் கொண்டு, வளைக் கையாலே உடலை இறுகத்
தழுவிக் கொண்டு,
உலையிலே மெழுகு ஒத்த மடவாரோடு உருகியே வரு பெற்றி
மதன நாடக பித்து ஒழியுமாறு ஒரு முத்தி தர வேணும் …
உலையில் இட்ட மெழுகு போல் உருக்கம் காட்டும் விலைமாதர்களோடு
கூடி உருகி வருகின்ற ஒழுக்கம், காம நாடகம் என்கின்ற பித்த மயக்கம்
என்னை விட்டுத் தொலையுமாறு ஒப்பற்ற முக்தி இன்பத்தைத்
தரவேண்டும்.
மறவர் மாது ஒரு ரத்ந விமல கோ கநகத்தி மயில் அ(ன்)னாள்
புணர் செச்சை மணி மார்பா … வேடர் குலத்து மாது, ஒப்பற்ற
பரிசுத்தமான, தாமரையில் வாழும் லக்ஷ்மியாகிய மயில் போன்றவளாம்
வள்ளியைத் தழுவுகின்ற வெட்சி மாலை புனைந்த அழகிய மார்பனே,
மருள் நிசாசரன் வெற்பில் உருகி வீழ்வு உற மிக்க மயிலில்
ஏறிய உக்ர வடிவேலா … திகைத்து மயங்கி நின்ற அசுரன் மலை
போல உருகி விழும்படி, சிறந்த மயில் மீது ஏறிய கொடுமையான
வடிவேலனே,
பறைகள் பேணிய ருத்ரி கரிய கார் அளகத்தி பரமர் பால்
உறை சத்தி எமது ஆயி … பறைகளை விரும்பும் ருத்ரி, கரிய மேகம்
போன்ற கூந்தலை உடையவள், பரமராகிய சிவபெருமான் பக்கத்தில்
உறைகின்ற சக்தி, எமது தாய்,
பழைய பார்வதி கொற்றி பெரிய நாயகி பெற்ற பழநி மா மலை
உற்ற பெருமாளே. … பழம்பொருளாக நிற்கும் பார்வதி, துர்க்கை,
பெரிய நாயகி* என்னும் பெயரை உடையவள் ஈன்ற, பழனி மா
மலையில் வீற்றிருக்கும், பெருமாளே.