திருப்புகழ் 108 அரிசன வாடை (பழநி)
பழநியில் குடிகொண்டிருக்கும் அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது இப்பாடலை தினமும் படித்தால் நன்மைகள் நடைபெரும்.
அரிசன வாடைச் சேர்வை குளித்துப்
பலவித கோலச் சேலை யுடுத்திட்
டலர்குழ லோதிக் கோதி முடித்துச் …… சுருளோடே
அமர்பொரு காதுக் கோலை திருத்தித்
திருநுதல் நீவிப் பாளி தபொட்டிட்
டகில்புழு காரச் சேறு தனத்திட் …… டலர்வேளின்
சுரதவி நோதப் பார்வை மையிட்டுத்
தருணக லாரத் தோடை தரித்துத்
தொழிலிடு தோளுக் கேற வரித்திட் …… டிளைஞோர்மார்
துறவினர் சோரச் சோர நகைத்துப்
பொருள்கவர் மாதர்க் காசை யளித்தற்
றுயரற வேபொற் பாத மெனக்குத் …… தருவாயே
கிரியலை வாரிச் சூர ரிரத்தப்
புணரியின் மூழ்கிக் கூளி களிக்கக்
கிரணவை வேல்புத் தேளிர் பிழைக்கத் …… தொடுவோனே
கெருவித கோலப் பார தனத்துக்
குறமகள் பாதச் சேக ரசொர்க்கக்
கிளிதெய்வ யானைக் கேபு யவெற்பைத் …… தருவோனே
பரிமள நீபத் தாரொ டுவெட்சித்
தொடைபுனை சேவற் கேத னதுத்திப்
பணியகல் பீடத் தோகை மயிற்பொற் …… பரியோனே
பனிமல ரோடைச் சேலு களித்துக்
ககனம ளாவிப் போய்வ ருவெற்றிப்
பழநியில் வாழ்பொற் கோம ளசத்திப் …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
அரிசன வாடைச் சேர்வை குளித்துப் பலவித கோலச் சேலை
உடுத்திட்டு … மஞ்சள் வாசனை சேர்ந்த நீரில் குளித்து, பலவிதமான
வண்ணச் சேலைகளை உடுத்து,
அலர் குழல் ஓதிக் கோதி முடித்துச் சுருளோடே அமர் பொரு
காதுக்கு ஓலை திருத்தித் திரு நுதல் நீவிப் பாளித பொட்டு
இட்டு … மலரணிந்த கூந்தல் மயிரை சிக்கெடுத்துச் சீவி முடித்து,
சுருண்டுள்ள (அந்தக் குழலுடன்) நெருங்கிப் போர் புரிகின்ற
காதணியைத் தரித்து, அழகிய நெற்றியைச் சீர்படத் துடைத்து,
பச்சைக் கற்பூரம் கலந்த பொட்டை இட்டு,
அகில் புழுகு ஆரச் சேறு தனத்து இட்டு அலர் வேளின் சுரத
விநோதப் பார்வை மை இட்டுத் தருண கலாரத் தோடை
தரித்து … அகில், புனுகு இவை நிரம்பிய குழம்பை மார்பில் பூசி,
மலர்க்கணை ஏந்திய மன்மதனின் காம சாஸ்திரத்தில் கூறியவாறு
காமத்தை எழுப்பி விநோதங்களைக் காட்டும் கண்களில் மையைப்
பூசி, அப்போது அலர்ந்த செங்கழு நீர் மாலையைச் சூடி,
தொழிலிடு தோளுக்கு ஏற வரித்திட்டு இளைஞோர்மார்
துறவினர் சோரச் சோர நகைத்து … வேசைத் தொழில் செய்யும்
தோளுக்குப் பொருந்தும் வகையில் நிரம்ப அலங்கரித்து, இளைஞர்கள்
முதல் துறவிகள் வரை அனைவரும் தளரத் தளரச் சிரித்து,
பொருள் கவர் மாதர்க்கு ஆசை அளித்தல் துயர் அறவே
பொன் பாதம் எனக்குத் தருவாயே … பொருளைக் கவர்கின்ற
விலைமாதர் மேல் ஆசை வைத்தலாகிய துன்பம் நீங்கவே, உனது
அழகிய திருவடிகளை அருள்வாயாக.
கிரி அலை வாரிச் சூரர் இரத்தப் புணரியின் மூழ்கிக் கூளி
களிக்கக் கிரண வை வேல் புத்தேளிர் பிழைக்கத்
தொடுவோனே … மலைகளிலும், அலைகளுடன் கூடிய கடலிலும்
இருந்த அசுரர்களுடைய ரத்தக் கடலில் முழுகி, பேய்கள் (உடல்களைத்
துய்த்து) இன்புறுமாறும், தேவர்கள் பிழைத்து உய்யுமாறும், ஒளி வீசும்
கூரிய வேலாயுதத்தைச் செலுத்தியவனே,
கெருவித கோலப் பார தனத்தக் குறமகள் பாதச் சேகர
சொர்க்கக் கிளி தெய்வ யானைக்கே புய வெற்பைத்
தருவோனே … செருக்கு உறத் தக்க, அழகிய, கனமான மார்பகத்தை
உடைய குறமகளாம் வள்ளி நாயகியின் திருவடியைத் தலை மேல்
சூடியவனே, விண் உலகில் வளர்ந்த கிளி போன்ற தேவயானைக்கே
மலை போன்ற தோள்களைக் கொடுப்பவனே,
பரிமள நீபத் தாரொடு வெட்சித் தொடை புனை சேவல்
கேதன துத்திப் பணி அகல் பீடத் தோகை மயில் பொன்
பரியோனே … நறுமணம் உள்ள கடப்ப மாலையோடு, வெட்சி
மாலையை அணிந்துள்ள சேவல் கொடியோனே, படத்தில்
பொறிகளை உடைய பாம்பு அஞ்சி அகல்கின்ற, ஆசனம் போல்
விளங்கும் கலாப மயில் என்கின்ற அழகிய குதிரை போன்ற
வாகனத்தைக் கொண்டவனே,
பனி மலர் ஓடைச் சேல் உகளித்துக் ககனம் அளாவிப்
போய் வரு(ம்) வெற்றிப் பழநியில் வாழ் பொன் கோமள
சத்திப் பெருமாளே. … குளிர்ந்த மலர் ஓடையில் சேல் மீன்கள்
களிப்புடன் ஆகாயம் வரை எட்டிப் பார்த்துத் திரும்பி வரும்
வெற்றிப் பழனி மலையில் வாழ்கின்ற, ஒளியும் அழகும் பூண்ட
ஞான சக்திப் பெருமாளே.