ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் 105 அணிபட்டு அணுகி (பழநி)

அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது இப்பாடலை தினமும் படித்தால் புதிய தொழில் தொடங்குவீர்கள்,

அணிபட் டணுகித் திணிபட் டமனத்
     தவர்விட் டவிழிக் …… கணையாலும்

அரிசுற் றுகழைத் தவர்பெற் றவளத்
     தவன்விட் டமலர்க் …… கணையாலும்

பிணிபட் டுணர்வற் றவமுற் றியமற்
     பெறுமக் குணமுற் …… றுயிர்மாளும்

பிறவிக் கடல்விட் டுயர்நற் கதியைப்
     பெறுதற் கருளைத் …… தரவேணும்

கணிநற் சொருபத் தையெடுத் துமலைக்
     கனியைக் கணியுற் …… றிடுவோனே

கமலத் தயனைப் ப்ரணவத் துரையைக்
     கருதிச் சிறைவைத் …… திடுவோனே

பணியப் பணியப் பரமர்ப் பரவப்
     பரிவுற் றொருசொற் …… பகர்வோனே

பவளத் தவளக் கனகப் புரிசைப்
     பழநிக் குமரப் …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

அணிபட்டு அணுகித் திணிபட்ட மனத்தவர் … வரிசையாக நின்று,
அருகில் வந்து, கல்நெஞ்சுடைய பொதுமாதர்

விட் டவிழிக் கணையாலும் … என்னை மயக்கச் செலுத்தும்
விழிகளாகிய அம்புகளினாலும்,

அரிசுற் று கழைத் தவர்பெற்ற வளத்தவன் … வண்டுகள் சுற்றி
மொய்க்கும் கரும்பு வில்லை உடைய செல்வந்தனாகிய மன்மதன்

விட்டமலர்க் கணையாலும் … விடுத்த மலர் அம்புகளினாலும்,

பிணிபட்டு உணர்வற்று அவமுற்று … மன நோய் அடைந்து,
அறிவு நீங்கி, கேடுற்று,

இயமற் பெறும் அக் குணமுற்று உயிர்மாளும் … யமனையே
அடையச் செய்திடும் தீய குணங்கள் நிறைந்து, இந்த உயிரானது
மாண்டு போகும்

பிறவிக் கடல்விட்டு … பிறவியாகிய சமுத்திரத்தை விடுத்து நீங்கி,

உயர்நற் கதியைப் பெறுதற்கு அருளைத் தரவேணும் …
உயர்ந்த நன்முக்தியை நான் பெறுவதற்கு, நீ திருவருள் தந்தருள
வேண்டும்.

கணிநற் சொருபத்தை யெடுத்து … வேங்கை மரத்தின் நல்ல
உருவை எடுத்து

மலைக் கனியைக் கணியுற்றிடுவோனே … மலைக்கன்னியாகிய
வள்ளியை அடையக் கருதி அவளிடம் சென்றவனே,

கமலத்து அயனைப் ப்ரணவத்து உரையைக் கருதி …
தாமரையில் அமரும் பிரமனை, பிரணவத்தின் உரையைச்
சொல்லமாட்டாத காரணத்திற்காக

சிறைவைத்திடுவோனே … சிறைச்சாலையில் அடைத்தவனே,

பணி அப்பு அணி அப் பரமர்ப் பரவ … பாம்பையும் கங்கை
நதியையும் சடையில் அணியும் அந்த சிவபிரான் துதிசெய்ய,

பரிவுற்று ஒருசொற் பகர்வோனே … அவரிடம் அன்பு கொண்டு
ஒப்பற்ற பிரணவத்தின் பொருளை உபதேசம் செய்தவனே,

பவளத் தவளக் கனகப் புரிசை … பவள நிறம், வெண்ணிறம்,
பொன்னிறம் உள்ள மதில்கள் சூழ்ந்த

பழநிக் குமரப் பெருமாளே. … பழநியில் எழுந்தருளியுள்ள
குமரப் பெருமாளே.

மேலும் படிக்க : திருப்புகழ் 104 அகல்வினை (பழநி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *