திருப்புகழ் 190 முருகுசெறி குழலவிழ பழநி பாடல்
முருகன் இருக்கும் பொழுது அவரையே நாம் உண்மையாக உணரும் பொழுது நம்முடைய வாழ்வை வழி நடத்திச் செல்வார். குல தெய்வ அருளை பெற தாமதமா முருகனை கூப்பிட்டு வாழ்ந்தால் போதும் நமது இலக்கை அடையலாம். கந்தன் கருணை இருக்கும் பொழுது வாழ்வை நிச்சயமாக வெல்லலாம்.
முருகு செறிகுழல் முகிலென நகில்நறு
முளரி முகையென இயலென மயிலென
முறுவல் தளவென நடைமட வனமென …… இருபார்வை
முளரி மடலென இடைதுடி யதுவென
அதர மிலவென அடியிணை மலரென
மொழியு மமுதென முகமெழில் மதியென …… மடமாதர்
உருவ மினையன எனவரு முருவக
வுரைசெய் தவர்தரு கலவியி னிலவிய
வுலையின் மெழுகென வுருகிய கசடனை …… யொழியாமல்
உவகை தருகலை பலவுணர் பிறவியி
னுவரி தனிலுறு மவலனை யசடனை
உனது பரிபுர கழலிணை பெறஅருள் …… புரிவாயே
அரவ மலிகடல் விடமமு துடனெழ
அரிய யனுநரை யிபன்முத லனைவரும்
அபய மிகவென அதையயி லிமையவ …… னருள்பாலா
அமர்செய் நிசிசர ருடலவை துணிபட
அவனி யிடிபட அலைகடல் பொடிபட
அமரர் சிறைவிட அடலயில் நொடியினில் …… விடுவோனே
பரவு புனமிசை யுறைதரு குறமகள்
பணைகொ ளணிமுலை முழுகுப னிருபுய
பணில சரவணை தனில்முள ரியின்வரு …… முருகோனே
பரம குருபர எனுமுரை பரசொடு
பரவி யடியவர் துதிசெய மதிதவழ்
பழநி மலைதனி லினிதுறை யமரர்கள் …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
முருகு செறி குழல் முகில் என நகில் நறு முளரி முகை என
இயல் என மயில் என முறுவல் தளவு என நடை மட
அ(ன்)னம் என … வாசனை மிகுந்த கூந்தல் மேகம் எனவும்,
மார்பகங்கள் நறுமணமுள்ள தாமரை எனவும், சாயல் மயில் எனவும்,
பற்கள் முல்லை எனவும், நடை மடப்பம் பொருந்திய அன்னத்தின் நடை
எனவும்,
இரு பார்வை முளரி மடல் என இடை துடி அது என அதரம்
இலவு என அடி இணை மலர் என மொழியும் அமுது என
முகம் எழில் மதி என மட மாதர் … இரண்டு கண்களும் தாமரை
இதழ்கள் எனவும், இடை உடுக்கையே எனவும், வாய் இதழ் இலவ
மலர் எனவும், இரண்டு அடிகளும் மலர் எனவும், பேச்சு அமுதம்
எனவும், முகம் அழகிய சந்திரன் எனவும், அழகிய (விலை) மாதர்களின்
உருவம் இனையன என வரும் உருவக உரை செய்து அவர்
தரு கலவியினில் அவிய உலையின் மெழுகு என உருகிய
கசடனை … உருவங்களை இவை இவை என்று உருவகப் படுத்திப்
புகழ்ந்து, அவர்கள் கொடுக்கும் புணர்ச்சி இன்பத்தில் பொருந்த,
உலையில் இடப்பட்ட மெழுகைப் போல் உருகிய குற்றவாளியாகிய
என்னை
ஒழியாமல் உவகை தரு கலை பல உணர் பிறவியில் உவரி
தனில் உறும் அவலனை அசடனை உனது பரிபுர கழல்
இணை பெற அருள் புரிவாயே … எப்போதும் இன்பம் தரும் பல
விதமான கலைகளையும் உணருதற்கு, பிறவிக் கடலில் கிடக்கும்
இந்தக் கீழானவனுக்கு, மூடனுக்கு உனது சிலம்பணிந்த திருவடி
இணைகளை பெறுவதற்கு அருள் புரிவாயாக.
அரவம் மலி கடல் விடம் அமுதுடன் எழ அரி அயனு(ம்)
நரை இபன் முதல் அனைவரும் அபயம் மிக என அதை
அயில் இமையவன் அருள்பாலா … ஒலி மிகுந்த கடலில்
அமுதத்துடன் விஷமும் தோன்ற, திருமாலும், பிரமனும், (ஐராவதம்
என்ற) வெள்ளை யானையை உடைய இந்திரன் முதலான எல்லாரும்
அடைக்கலம் என மிகவும் ஓலமிட, அந்த விஷத்தை உண்ட கயிலை
மலை தேவனாகிய சிவபெருமான் அருளிய குழந்தையே.
அமர் செய் நிசிசரர் உடல் அவை துணி பட அவனி இடி
பட அலை கடல் பொடி பட அமரர் சிறைவிட அடல்
அயில் நொடியினில் விடுவோனே … போர் செய்த அசுரர்களின்
உடல்கள் துணிக்கப்பட்டு விழ, பூமி இடியுண்ண, அலை கடல்
பொடிபட, தேவர்கள் சிறையினின்று மீள, சக்தி வேலை ஒரு நொடிப்
பொழுதில் செலுத்தியவனே,
பரவும் புனம் மிசை உறை தரு குற மகள் பணை கொள்
அணி முலை முழுகு பன்னிரு புய பணில சரவணை
தனில் முளரியில் வரு முருகோனே … போற்றிச் சென்ற
தினைப்புனத்தின் மீது இருந்த குறப் பெண்ணாகிய வள்ளியின்
பருத்த, அழகிய மார்பகங்களில் முழுகிய பன்னிரண்டு தோளனே,
சங்குகள் விளையும் சரவண மடுவில் தாமரையில் எழுந்தருளிய
முருகனே,
பரம குருபர எனும் உரை பரசொடு பரவி அடியவர்
துதி செய மதி தவழ் பழநி மலை தனில் இனிது உறை
அமரர்கள் பெருமாளே. … மேலானவனே குருபரனே என்னும்
புகழ் மொழிகளால் போற்றி செய்து வணங்கி அடியார்கள் துதிக்க,
திங்கள் தவழும் பழனி மலையில் இனிதாக உறைகின்றவனே,
தேவர்கள் பெருமாளே.