Thirupugazh song 276: திருப்புகழ் பாடல் வரிகள் 276 தொடத்துளக்கிகள்( திருத்தணிகை)
முருகப்பெருமானின் மீது பற்று கொண்ட பக்தர்கள் அவரைப் புகழ்ந்து பாட உதவும் இறை நூலாகவும், கந்தனின் பெருமைகளையும், வீர செயல்களையும் மக்கள் அறிய உதவும் பக்தி நூலாகவும் விளங்குகிறது திருப்புகழ். அருணகிரிநாதர் அருளிய திருப்புகழை படிக்கும் ஒவ்வொரு பாடலிலும் முருகனின் பெருமைகளையும் அவரின் திருவருளையும் நாம் முழுமையாக பெற முடியும்.
பாடல் வரிகள்
தொடத்து ளக்கிகள் அபகட நினைவிகள்
குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள்
சுதைச்சி றுக்கிகள் குசலிக ளிசலிகள் …… முழுமோசந்
துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள்
முழுப்பு ரட்டிகள் நழுவிகள் மழுவிகள்
துமித்த மித்திரர் விலைமுலை யினவலை …… புகுதாமல்
அடைத்த வர்க்கியல் சரசிகள் விரசிகள்
தரித்த வித்ரும நிறமென வரவுட
னழைத்து சக்கிர கிரிவளை படிகொடு …… விளையாடி
அவத்தை தத்துவ மழிபட இருளறை
விலக்கு வித்தொரு சுடரொளி பரவந
லருட்பு கட்டியு னடியிணை யருளுவ …… தொருநாளே
படைத்த னைத்தையும் வினையுற நடனொடு
துடைத்த பத்தினி மரகத சொருபியொர்
பரத்தி னுச்சியி னடநவி லுமையரு …… ளிளையோனே
பகைத்த ரக்கர்கள் யமனுல குறஅமர்
தொடுத்த சக்கிர வளைகர மழகியர்
படிக்க டத்தையும் வயிறடை நெடியவர் …… மருகோனே
திடுக்கி டக்கட லசுரர்கள் முறிபட
கொளுத்தி சைக்கிரி பொடிபட சுடரயில்
திருத்தி விட்டொரு நொடியினில் வலம்வரு …… மயில்வீரா
தினைப்பு னத்திரு தனகிரி குமரிநல்
குறத்தி முத்தொடு சசிமக ளொடுபுகழ்
திருத்த ணிப்பதி மலைமிசை நிலைபெறு …… பெருமாளே
பாடல் விளக்கம்
தொட்டால் கூச்சம் அடைபவர்
போல அசைபவர்கள். அந்த வஞ்சக நினைவு கொண்டவர்கள். அறிவுக் கண் இல்லாத மூடர்கள். இள மகளிர். குற்றம் உள்ளவர்கள்.நிலப் பிளப்பில் பிறரை
ஆழ்த்துபவர்கள் இன்பச் சுவையைச் சிறுகச் செய்பவர்கள். தந்திரவாதிகள், எளிதில் பிணக்கம் கொள்பவர்கள்,முழு மோசம் நிரம்பியுள்ள பயனிலிகள்,மூடர்கள், துர்க்குணிகள். முழுதும் மாறுபட்ட பேச்சுக்
காரிகள், பிடிபடாது நழுவுகிறவர்கள், தங்கள் சூது வெளியாகாமல் மழுப்புவோர்கள்,(வருபவரின் பொருளை நண்பர்கள் போல நடித்துப் பறிக்கின்றவர்கள், மார்பகத்தை விலைக்கு விற்பவர்கள் ஆகிய பொது
மகளிரின் வலையில் நான் புகாமல்,
(நற்கதிக்குப் போகும் வழியைத் தடுத்து அடைத்த விலைமாதர்களுக்குச் , இன்பத்தைக் காட்டுபவர்களும் துன்பத்தை ஊட்டுபவர்களும் ஆகிய சித்துக்களைக் காட்டி மோசம் செய்யும் சிலரை, அணிந்துள்ள பவளம் போன்ற ஒளி போல மதித்து, அவர்களை உடன் வரும்படி அழைத்துச் சென்று, சக்கிவாள கிரியால் சூழப்பட்ட இப்பூமியில் அவர்களுடன் வீண் பொழுது போக்கி விளையாடும் என்னுடைய ஜாக்கிராதி மல அவஸ்தைகளும், தத்துவ சேஷ்டைகளும் ஒடுங்க எனது
அஞ்ஞானத்தை நீக்கி, என் உள்ளே ஞானப் பேரொளி பரவ, நல்ல உனது திருவருளை ஊட்டி, உன் திருவடிகளை அருளுகின்ற ஒரு
நாளும் எனக்குக் கிட்டுமோ?
படைத்து எல்லாவற்றையும் செயற்படச் செய்து காப்பாற்றி, நடராஜப் பெருமானோடு அழித்த
கற்புடையாள், மரகத நிறத்தினள், ஒப்பற்ற பர வெளிக்கு மேலே நடனம் செய்கின்ற உமா தேவியார் ஈன்ற இளையோனே, பகைத்து வந்து அசுரர்கள் யம லோகத்தை அடையும்படி போர் செய்தவரும், சக்கரம், சங்கு ஏந்திய திருக்கரத்து
அழகரும், பூமியாகிய பாண்டத்தை வயிற்றில் அடக்கியவருமாகிய நெடியோன் திருமாலின் மருகனே,
கடல் திடுக்கிடவும், அசுரர்கள் முறிபட்டு
ஓடவும், சேர்ந்துள்ள அஷ்ட திக்குகளில் உள்ள மலைகள் பொடியாகும்படியும் ஒளி வேலைச் சீராகச் செலுத்தி விட்டு, ஒரு நொடியில் மயில் மீதேறி உலகை வலம் வந்த வீரனே, தினைப் புனத்தில் இருந்த, இரண்டு மலை போன்ற மார்பகங்களைக் கொண்ட குமரி, நல்ல குறச்
சாதியினள், முத்தாகிய வள்ளியுடனும், இந்திராணியின் மகளான தேவயானையுடனும், புகழ் கொண்ட திருத்தணிகை மலையில்
நிலைத்து வீற்றிருக்கும் பெருமாளே.