மனசுல கருணை இருக்கும் கருணைக் கிழங்கு டிஷ்..!!
கிழங்குகளில் பல வகை இருந்தாலும் அதில் ஒவ்வொரு வகை கிழங்குகளும் தனித் தன்மை வாய்ந்தவை. ஒரே கிழங்கு வகைகளை அடிக்கடி உண்ணாமல் எல்லா கிழங்குகளும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மூலம் பிரச்சனையை தீர்க்க கருணைக்கிழங்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். கருணைக்கிழங்கை வைத்து கருணைக்கிழங்கு கறி, கருணைக்கிழங்கு வறுவல் எப்படி செய்யலாம் வாங்க பார்க்கலாம்.
கருணைக்கிழங்கு கறி
தேவையான பொருட்கள் : கால் கிலோ கருணைக்கிழங்கு, சிறிது புளி, ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள், இரண்டு ஸ்பூன் எண்ணெய், மஞ்சள் பொடி கால் ஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை : கருணைக்கிழங்கை மேல் தோலை நீக்கி பெரிய அளவில் மெல்லிய வில்லைகளாக நறுக்கி வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கும் போது கருணை கிழங்கு துண்டுகளை போட்டு சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும். வெந்த பின் வடித்து ஆறவைத்து சிறிதளவு புளியை கெட்டியாக கரைத்து, மிளகாய், மஞ்சள் பொடி சேர்த்து கலக்கி கருணை கிழங்கு துண்டுகளை போட்டு வைக்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு கருணைக் கிழங்கை போட்டு வறுக்கவும். புளி தண்ணீர் வற்றியவுடன் எடுக்கவும். பொன்னிறமாக வந்ததும் சுவைத்துப் பாருங்கள். சுவையான கருணைக்கிழங்கு கறி தயார்.
கருணைக்கிழங்கு வறுவல்
தேவையான பொருட்கள் : கருணை கிழங்கு அரை கிலோ, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் தலா அரை ஸ்பூன், எண்ணெய், உப்பு தேவையான அளவு.
செய்முறை : கருணைக் கிழங்கு தோல் சீவி வேக வைக்க வேண்டும். நீளமாக வெட்டிக் கொண்டு அத்துடன், மிளகாய்த் தூள், சீரகத்தூள், உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக வைக்க வேண்டும். தோசை கல்லில் போட்டு பொரித்து எடுக்கவும். இதே மாதிரி வாழைக்காய் செய்து சாப்பிடலாம்.