பூதாகரமான பிரச்சினை மக்காத குப்பை…அறப்போர் இயக்கம்
மக்காத குப்பையை முழுமையாக வகை பிரிப்பதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பே சென்னையில் கிடையாது என அறப்போர் இயக்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது, மக்காத குப்பையில் (Dry Waste) காகிதம், மரம், உலோக வகைகள், கண்ணாடி, பிளாஸ்டிக் வகைகள், டிஸ்யூ பேப்பர், டெட்ரா பேக், தேங்காய் சிரட்டை போன்ற 25 வகைகளுக்கும் மேல் உள்ளது. இவை முழுமையாக வகை பிரிக்கப்பட வேண்டும். அதாவது ஒரு கிலோ மக்காத குப்பை எடுத்தால் அதன் 25க்கும் மேற்பட்ட வகைகளை தனி தனியாக பிரிக்க வேண்டும். அப்படி முழுமையாக பிரிக்காமல், ஏதாவது 2 வகை பிரிக்கப்படாமல் ஒன்றாக கலந்திருந்தால் கூட அதை மறுசுழற்சி செய்ய முடியாது. உதாரணமாக ஒரு LDPE கவர் மற்றும் HDPE கவர் , அல்லது ஒரு PC பிளாஸ்டிக் மற்றும் ஒரு PP பிளாஸ்டிக், இது போல வெறும் 2 வகையை பிரிக்காமல் மொத்தமாக போட்டாலே அதை எந்த மறுசுழற்சியாளரும் எடுக்க மாட்டார். அதை பல்லாண்டு காலத்திற்கு எங்காவது ஒரு நிலத்தில் கொட்டி நிரப்பி வைப்பதை தவிர வேறு வழியில்லை. இது அந்த நிலத்தை கொல்வதற்கு சமம். இப்படியே அந்த குப்பை மலை மலையாக சேர்ந்து விடும்.
இவ்வளவு முக்கிய தேவையான வகை பிரிப்பு மையம், அரசால் ஒன்று கூட சென்னையில் இன்னும் உருவாக்க படவில்லை என்பதே வலிக்கும் உண்மை. இதற்காக தனியாக இடமும் ஒதுக்கப்படவில்லை. மக்காத குப்பையை கையாளுவதற்கு என்று சென்னை மாநகராட்சி வைத்து இருக்கும் இடத்தில், அவற்றை வகை பிரிப்பது சாத்தியமே இல்லை என்பதை கீழ்க்கண்ட புகைப்படங்களை பார்த்தாலே தெரியும். இந்த இடத்தில் இருந்து ஒரு தொழிலாளி எப்படி மக்காத குப்பையை ஒவ்வொன்றாக வகை பிரிக்க முடியும்? அப்படியே பிரித்தாலும் ஒரு நாளில் எத்தனை கிலோ பிரித்து விட முடியும்? ஆனால் தினமும் 15 லட்சம் கிலோவுக்கு மேல் மக்காத குப்பையை சென்னையில் நாம் உருவாக்குகிறோம்.
வார்டு 179 , தரமணி சுடுகாட்டில் ஓரமாக இதோ ஒரு கண்துடைப்பு தகர டப்பா.
இது போல ஆங்காங்கே உள்ள தகர டப்பாக்கிளில் 15 லட்சம் கிலோ குப்பையை தினமும் வகை பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்ப முடியும் என்று மாநகராட்சி நம்புகிறதா? புதிய ஆட்சி, இது போன்ற முட்டாள்தனத்தை தொடராமல், முழுமையான, மக்காத குப்பை வகை பிரிப்பு மையங்களை முழு குப்பை அளவையும் அன்றன்று பிரிக்கும் படியான ஸ்திரமான கட்டமைப்பை ஏற்படுத்துமா? என தெரிவித்துள்ளனர்.