கல்வித்துறையில் கொரனாவின் தாக்கம்..!!
மாதக் கணக்கில் பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டு கிடக்கின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தேர்வுகள் நடைபெறவில்லை. பத்தாம் வகுப்பு மாணவர்கள் பாடங்களைத் திரும்பத் திரும்பப் படித்துச் சோர்ந்து விட்டனர். நீட் தேர்வு ஜுலையில் நடக்கும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பள்ளி மாணவர்கள் கொரனாவால் படாத பாடுபடுகிறார்கள். வழக்கமான விடுமுறையைப் போல கொரனா விடுமுறையைக் கொண்டாட முடியவில்லை. மைதானங்கள் வெறிச் சோடி விடக் கூடாதே என்று போனால் டிரோன் கேமரா விரட்டுகிறது. டி.வி. முன்பு எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பது. ஆடிய கால்கள் வீட்டைத் தாண்டாமல் கட்டப்பட்டுக் கிடக்கிறது. அவர்கள் தனக்கு வில்லனாகக் கருதும் அப்பாவும் வீட்டிலேயே இருப்பதால் நரகத்தைப் பற்றிய முன்னோட்டம் அவர்கள் மூளைக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. கல்லூரி மாணவர்களோ முகத்தில் சோகத்தை நிரந்தரமாக அப்பி வைத்துக் கொண்டு அலைகிறார்கள். கேர்ள் பெஸ்டிகளைக் காண முடியாமல் கண்களும் உள்ளமும் வறண்டு கிடக்கிறார்கள். பைக்கில் உலா போக முடியாமல் கட்டிலைக் கட்டிக் கொண்டு படுத்திருக்கிறார்கள். ஆசிரியர்களுக்கும் இந்த மிதமிஞ்சிய விடுமுறை ருசிக்கவில்லை. தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் டிஜிட்டல் மோடுக்கு மாறிவிட்டன. ஆசிரியர்கள் கூகுள் மீட்டில் தோன்றி மாணவர்களுக்கு வகுப்பெடுக்கத் தொடங்கி விட்டனர். ஆரம்பத்தில் இருந்த உற்சாகம் போகப் போகக் குறைவதாகப் புலம்புகின்றனர். தனியாகப் பேசுவது இன்னும் எத்தனை காலமோ என்பதுதான் அவர்கள் பிரச்சினை. சில மாணவர்களும் ஆசிரியர்களும் இதை உற்சாகமாகவும் எதிர்கொள்வதைப் பார்க்கமுடிகிறது. செமஸ்டர் தேர்வுகள் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெறும் என்றும் மற்றவர்கள் இண்டர்னல் மார்க் அடிப்படையில் தேர்ச்சி பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. பல தேர்வுகள் ஆன்லைன் மூலமும் நடத்தப்பட்டு வருகிறது. இது போன்ற டிஜிட்டல் மோடுக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் பழக்கமும் பயிற்சியும் பெற்று விட்டால் கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு வசதிகளின் தேவை என்னவாகும்? . ரெசிடன்சியல் ஸ்கூல் கான்செப்டின் எதிர்காலம் என்னவாகும்?. ஆசிரியர்களின் முக்கியத்துவம் குறையுமா? வகுப்பறையில் இனி கற்றல்,கற்பித்தல் தொடருமா? இப்படி பல கேள்விகளைக் கொரனா எழுப்பிவிட்டது. இந்தக் கொரனா கால விடுமுறையால் கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்பதிலும் வசூலிப்பதிலும் சிக்கல்கள் எழுகின்றன.
கல்விக் கட்டணம் இல்லாமல் தனியார் கல்லூரிகள் ஊதியம் உள்ளிட்ட செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் திணறுகின்றன. இதனால் தனியார் கல்வி நிறுவனங்களை நம்பி வாழும் ஆசிரியர்கள் கலக்கத்தில் தவிக்கிறார்கள். அட்மிசன் நேரத்தில் கொரனா குறுக்கிட்டு விட்டதால் அட்மிசன் வியூகங்கள் பலனளிக்காமல் போனது. பிளஸ் டூ மாணவர்களுக்கு மறுதேர்வு வேறு நடத்த வேண்டிய நிலையில் கல்லூரியில் இந்தக் கல்வியாண்டு எப்போது தொடங்கும் எனக் கணிக்கமுடியவில்லை. புதிய ஆசிரியர்களை நியமிக்கக் காலதாமதம் ஆகும். ஆசிரியர்களைக் குறைக்கும் நடவடிக்கையால் பெரிய அளவில் வேலை இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. மாணவர்கள், ஆசிரியர்கள் , கல்வி நிறுவன அதிபர்கள், பெற்றோர்கள் என பலதரப்பினரின் இயல்பான வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை கொரானா ஏற்படுத்தியிருக்கிறது. இதை சரியான திசையில் கொண்டு செலுத்த வேண்டியது அனைவரின் கடமையாகும்.