வாழ்வில் துன்பங்கள் நீங்க வேண்டுமா..!!
வியாழக்கிழமை 18/6/20 அன்று பிரதோஷம், கிருத்திகை இரண்டும் ஒரே நாளில் வருகிறது. கிருத்திகை வியாழன் காலை 9 மணிக்கு மேல் துவங்கி வெள்ளிகிழமை காலை வரை உள்ளது. பிரதோஷம் விரதம் இருப்பவர்கள் காலை எழுந்தவுடன் குளித்து விட்டு அன்று முழுவதும் ஆகாரம் எடுத்துக்கொள்ளாமல் மாலை வரை விரதம் இருக்க வேண்டும்.
பிரதோஷம் விரதம் வழிபடுவதால் நம் தோஷம் பாவங்கள் நீங்கும். எல்லாம் வல்ல சிவபெருமானின் அருள் கிடைக்க பெரும். வாழ்வில் பலவித நன்மைகளை வழங்கி நம்மை காப்பவர் சிவபெருமான்.
நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை
சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து குளித்து விட்டு விரதத்தை தொடங்க வேண்டும். அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை பூஜைகள் நடைபெறும். இன்றைய சூழலில் கோவிலுக்கு செல்ல முடியாத காரணத்தால் வீட்டிலேயே பூஜையை செய்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
அன்று மாலை 4 முதல் 6 க்குள் வீட்டில் உள்ள பூஜை அறையில் நந்தீஸ்வரர், சிவபெருமான் தெய்வ படங்களுக்கு மாலை சாற்றி, உங்களால் முடிந்த நெய்வேத்திய பிரசாதங்களை வைத்து, சிவன் பாடல்களை, நந்தீஸ்வரர் பாடல்களை பாராயணம் செய்யலாம்.
வில்வ இலை, செவ்வரளி பூ
பிரதோஷ காலங்களில் சிவபெருமானுக்கும், நந்தி ஈஸ்வரனுக்கும் செவ்வரளி பூ, உதிரிப் பூ வாங்கி உங்கள் கைகளால் கட்டி சிவபெருமானுக்கு படையுங்கள். வில்வ இலை கிடைத்தால் அதில் அர்ச்சனை செய்யலாம். இது மிகவும் விசேஷமானது. உங்கள் வேண்டுதல் விரைவில் நிறைவேறும்.
பொதுவாக விரதம் இருக்கும் போது மாலை அபிஷேக பூஜை கலந்து அபிஷேக பாலை குடித்து விட்டு தான் விரதம் முடிக்க வேண்டும். இன்றைய நிலையில் கோவிலுக்கு செல்ல முடியாது. அதனால் வீட்டில் சிவபெருமானுக்கு பால் படைத்து வழிபட்டு வழிபாடு முடிந்ததும், அந்தப் பாலை அருந்தி உங்கள் விரதத்தை முடித்துக் கொள்ளலாம். பிறகு விரதத்தை முடித்துக் கொண்டு அன்னம், ஆதாரங்களை எடுத்துக் கொள்ளலாம்.