Jallikattu bullsஆன்மிகம்ஆலோசனை

ஆற்றல் தரும் அபிராமி அந்தாதி பாடல் தொகுப்பு 4-6

ஆற்றல் தரும் அபிராமி அந்தாதிப் பாடல் தினசரி பாடிவர நமது துன்பம் விலகும். கவலைகள் போகும். அபிராமி பட்டர் இயற்றிய அபிராமி அந்தாதியின் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு சிறப்பு பலன் தாயவள் நமக்கு வழங்குகிறாள்.

தாயை மனதாரா ஆத்மாத்மாக பூஜித்து அன்னையவள் அருள் கிடைக்கப் பெறலாம். அபிராமி அந்தாதி பாடல்களுடன் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் உரையும் இணைத்துக் கொடுத்துள்ளோம். பொருள் புரிந்து படிக்கும் பாடலுக்கு அர்த்தங்கள் கிடைக்கும்.

4. உயர் பதவிகளை அடைய

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.

உரை விளக்கம்:

மனிதர், தேவர், பெரும் தவமுனிவர் முதலியோர் தலை வைத்து வணங்கும் அழகிய சிவந்த பாதங்களுடைய கோமளவல்லியே! தன்னுடைய நீண்ட சடாமுடியில் கொன்றையும், குளிர்ச்சி தரும் இளம் சந்திரனையும், அரவையும், கங்கையையும் கொண்டு விளங்குகின்ற புனிதரான சிவபெருமானும் நீயும் இடையறாது என் மனத்திலே ஆட்சியருள வேண்டும்.

5. மனக்கவலை தீர

பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே.

உரைவிளக்கம்:

அபிராமி அன்னையே! உயிர்களிடத்திலே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூவகை நிலைகளிலும், நிறைந்து இருப்பவளே! மாணிக்க பூண் அணிந்த நெருக்கமான, அடர்ந்த தனங்களின் சுமையால் வருந்துகின்ற வஞ்சிக் கொடி போன்ற இடையை உடையவளே! மனோன்மணியானவளே! (அன்பர்களை ஞான நிலைக்கு கொண்டு செல்கின்றவள்) நீண்ட சடையை உடைய சிவபெருமான் அன்றொரு நாள் அருந்திய விஷத்தை அமுதமாக்கிய அழகிய தேவி! நீ வீற்றிருக்கும் தாமரையைக் காட்டிலும் மென்மையான நின் திருவடிகளையே, என் தலைமேல் கொண்டேன்.

6. மந்திர சித்தி பெற

சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே.

மேலும் படிக்க : அபிராமி அந்தாதி பாடல் வரிகள் மற்றும் விளக்கம்

உரை விளக்கம்:

செம்மையான திருமேனியுடைய அபிராமித் தாயே! என்றும் என் தலைமேல் இருக்கக்கூடியது, நின் அழகிய திருவடியே! என்றும் என் சிந்தையுள்ளே நிலை பெற்று இருக்கக் கூடியது, நின் திருமந்திரமே! செந்தூர நிறமுடைய அழகிய தேவி, நான் இனி என்றும் கலந்திருப்பது நின்னையே மறவாது தொழும் அடியார்களையே! நான் தினந்தோறும் பாராயணம் செய்வது, உன்னுடைய மேலான ஆகம நெறியையே!

மேலும் படிக்க : திருப்புகழ் 60 தகரநறை (திருச்செந்தூர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *