Dindukal Thalappakkatti biriyani prepare : நம்மை கட்டி இழுத்த திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி செய்வது எப்படி???
பிரியாணி என்பது உணவல்ல அது எங்களின் உணர்வு என்று சொல்லும் அளவிற்கு பிரியாணி அனைவரின் மிக மிக விருப்பமான உணவாக மாறிவிட்டது . முன்பெல்லாம் ஏதாவது விசேஷங்களில் செய்யும் பிரியாணி தற்பொழுது எங்கும் கிடைக்கும் உணவாக மாறிவிட்டது. ஏனென்றால் அவ்வளவு அதிகமான பிரியாணி பிரியர்கள் உருவாகி விட்டனர். நடுராத்திரி 2 மணிக்கு எழுப்பி கொடுத்தாலும் பிரியாணி சாப்பிடும் நபர்கள் ஏராளமாக உள்ளனர். பிரியாணி என்பது பாரசீகத்தில் இருந்து தெற்காசியாவிற்கு வந்த ஒரு உணவாகும். தற்பொழுது இது இந்தியாவின் உணவு என்று சொல்லும் அளவிற்கு பட்டி தொட்டி எல்லாம் மணக்கும் உணவாக மாறிவிட்டது.
பிரியாணியில் பலவகை உண்டு கொல்கத்தா பிரியாணி, சீரக சம்பா பிரியாணி,ஹைதராபாத் பிரியாணி , செட்டிநாடு பிரியாணி, ஆம்பூர் பிரியாணி ,லக்னோ பிரியாணி என பலவகை பிரியாணிகள் உள்ளது. இந்த அனைத்து பிரியாணிக்கும் சமமாக என்றும் மக்களின் இதயத்தில் இடம் பிடித்த உணவாக இருப்பது தலப்பாக்கட்டு பிரியாணி தான். திண்டுக்கல் என்றால் முன்பெல்லாம் போட்டு தான் ஞாபகம் வரும் ஆனால் இப்பொழுது திண்டுக்கல் என்ற பெயரை கேட்டாலே நம் அனைவரின் நினைவிற்கு வருவது திண்டுக்கல் தலப்பாகட்டு பிரியாணி தான் அந்த பிரியாணியை நாம் வீட்டிலேயே எப்படி சுவையாக சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – 2 கப்
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 3
இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கெட்டியான தேங்காய் பால் – 1 கப்
கொத்தமல்லி , புதினா இலை – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
பிரியாணி மசாலா பொடி செய்ய தேவையான பொருட்கள்
சோம்பு – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் – 6
பட்டை -3
அன்னாச்சி பூ – 2
கிராம்பு – 6
ஊற வைப்பதற்கு தேவையான பொருட்கள்
சிக்கன் – 1 கிலோ
மிளகாய்த் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
புளிக்காத கெட்டி தயிர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
தலப்பாக்கட்டு பிரியாணி செய்முறை
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக தண்ணீரில் கழுவி ஓரளவிற்கு பெரிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். பின்பு வெட்டிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் நாம் எடுத்து வைத்த கெட்டி தயிர் ஒரு கப் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு பத்து நிமிடம் நன்றாக ஊற வைக்க வேண்டும்.
பின்னர் மேற்குறிப்பிட்ட அளவில் சோம்பு பட்டை ஏலக்காய் கிராம்பு அன்னாச்சி பூ ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி விட்டு சுத்தமான நீரில் 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் தேவையான அளவு ஊற்றி சூடானதும் அதில் நறுக்கி வைத்த வெங்காயம் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும் . வெங்காயம் பொன்னிறமாக வதக்கிய பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின்பு அதனுடன் மிளகாய் தூள் மஞ்சள் தூள் மற்றும் நாம் அரைத்து வைத்த பிரியாணி மசாலா பொடி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். இதில் நாம் நறுக்கி வைத்த புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் நாம் ஊறவைத்த சிக்கனை மசாலாவில் சேர்த்து நன்கு கிளறி விட்டு சிக்கனில் உள்ள நீர் வெளியேறி வற்றும் வரை ஒரு 15 நிமிடம் வைக்க வேண்டும். சிக்கனில் உள்ள நீர் வற்றிய பின்பு வானலியில் உள்ள சிக்கனை எடுத்து குக்கரில் போட்டுக்கொள்ள வேண்டும். அதனுடன் நாம் ஊறவைத்த பாஸ்மதி அரிசி மற்றும் தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் கொத்தமல்லி புதினா இலைகள் சிறிதளவு ஆகியவை சேர்த்து மூடி இரண்டு அல்லது மூன்று விசில் வரும் வரை வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
அவ்வளவுதான் நம் மனதில் சுவையால் நீங்கா இடம் பிடித்த திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி ரெடி.