ஆன்மிகம்

ஆசை இல்லையா? ஆன்மீகம் தேவையில்லை

ஞானிகளின் பொன்மொழிகள்

‘ஆசையே உன் அனைத்து துன்பத்திற்கும் காரணம்’

‘ஆசையே மனிதனை மீண்டும் மீண்டும் பிறக்கச் செய்யும்’

‘ஆசையை குறைத்துக்கொள்’

‘ஆசை அறுமின் ஆசை அறுமின் ஈசனோடாயினும் ஆசை அறுமின்’

என்பன போன்ற “ஆசை” பற்றி பல ஞானிகளின் உபதேசங்களை கேட்டிருப்போம். இதில் எது சரி? என்று கேட்டால், அனைத்தும் சரியே?

அப்படியென்றால் ஆசையே பட கூடாதா?
ஆசையே அனைத்து துன்பங்களுக்கு காரணமாய் இருந்தாலும், நாம் இந்த நொடி உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்பதற்கும் நம் ஆசைகளே காரணம். ஆசைகளை துறக்காமல் மனித பிறவியின் சுழற்சியில் இருந்து தப்ப எவராலும் இயலாது. அப்படியென்றால் நான் ஆசைப்பட்ட விசயங்களை மறந்து துறந்தாவிட வேண்டுமா என்று கேட்டால், அப்படியும் எந்த மனிதராலும் துறக்க இயலாது. எப்படிப்பட்ட ஆசையாக இருந்தாலும், அதை முறையாக அனுபவித்து, போதும் என்ற மனப்பாங்கு வந்த பிறகே ஒருவனால் ஆசையை துறக்க முடியும்.

கவனித்தீர்களா?

மேற்கண்ட வரிகளில் ‘முறையான’ என்னும் வார்த்தையை பயன்படுத்தி உள்ளோம். அதென்ன முறையான வழி என்று கேட்டால்,

யார் துன்பப்பட்டாலும் அதைபற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை, எனக்கு என் ஆசைகள் நிறைவேற வேண்டும் என்பது முறையற்ற வழியில் சென்று ஆசைகளை நிறைவேற்றும் ஒரு வழி. மனதளவில்கூட ஒருவரை துன்பப் படுத்தாமல் தன் ஆசைகளை தானே நிறைவேற்றிக் கொள்வது என்பது முறையான வழி.

இதில் ஆன்மீகம் எங்கு வருகிறது?

பெரும்பாலான மக்கள், ஆன்மீகத்திற்கு வந்தாலே ஆசைகளை துறந்துவிட வேண்டுமா என்று கேட்கிறார்கள். அப்படி பார்த்தால் செல்வ செழிப்பாக வாழ்ந்து, ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்து, சமாதி நிலையை அடைந்த ஞானிகளும் நம் பூமியிலேயே இருக்கிறார்கள். அப்பொழுது நம் ஆசைகளில் ஆன்மீகத்தின் பங்கென்ன? என்று கேட்டால்,
நம் முறையற்ற ஆசைகளில் இருந்து தடம் மாறி, முறையான வழியில் நம் ஆசைகளை அனுபவித்து, பிறகு போதும் என்ற மனப்பாங்கு வந்தபிறகு அதிலிருந்து விடுபட்டு, உயர்ந்த நிலை நோக்கி பயனிப்பதே ஆன்மீகத்தின் பங்களிப்பு. எவரையும் ஆண்டியாக்கி, ஆசைகளை கட்டுப்படுத்துவது ஆன்மீகத்தின் செயல் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

ஆசையில்லா மனிதனுக்கு ஆன்மீகம் தேவையில்லை

ஆசைகளே இல்லாத நிலைக்குச் செல்லும்பொழுது ஆன்மீக வாழ்வும் தேவைப்படுவதில்லை. இது முரன்பாடாக சிலருக்கு இருக்கலாம். இதற்கு ஓர் உதாரணம் கூற வேண்டும் என்றால், மருத்துவர் ஆகும்வரையே ஒருவருக்கு மருத்துவக் கல்வி என்னும் MBBS, MD போன்ற கல்லூரி படிப்புகள் தேவைப்படும். மருத்துவர் ஆன பிறகும் நான் கல்லூரிக்குச் செல்வேன் என்று அடம்பிடித்தால் என்ன அர்த்தம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *