இனி வீடியோ எடுப்ப..!! வாகன ஓட்டியை தெறிக்கவிட்ட காட்டு யானை..!!
சத்தியமங்கலம் அடுத்த தலமலை வனச்சாலையில் கூட்டமாக சாலையை கடந்த யானைகளை செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்த வாகன ஓட்டி ஒருவரை புதர் மறைவில் மறைந்திருந்த யானை திடீரென துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் அதிக அளவில் யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது உணவு மற்றும் நீர் தேடி சாலையோரம் நடமாடுவதுடன் குட்டிகளுடன் சாலையைக் கடப்பதும் வாடிக்கையான ஒன்று தான்.
இந்நிலையில், திம்பம் வன சோதனைச் சாவடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் உள்ள நெய்தாலபுரம் என்ற பகுதியில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானைகள் கூட்டமாக சாலையை கடந்து சென்றதை அவ்வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் ஆர்வமாக தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.
அப்போது புதர் மறைவில் மறைந்திருந்த காட்டு யானை ஒன்று திடீரென ஆக்ரோஷத்துடன் அந்த வாகன ஓட்டியை துரத்தி உள்ளது. இதை கண்ட வாகன ஓட்டுனர் சாமர்த்தியமாக வாகனத்தை பின்னோக்கி நகர்த்தி உயிர் தப்பியுள்ளார்.
இது அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள வன சாலை என்பதால் யானைகள் அவ்வப்போது சாலையை கடக்கும் எனவும் அவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் வன விலங்குகளை தொந்தரவு செய்யும் வகையில் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுக்கக்கூடாது எனவும் வனத்துறையினர் எச்சரித்தாலும், ஆர்வக் கோளாறில் வாகன ஓட்டிகள் இதுபோல் செய்து சிக்கலில் மாட்டிக்கொண்டுதான் உள்ளனர்.

