தை மாதம் சிறப்பு விசேஷங்கள்
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ நம்பிக்கை அளிக்கக் கூடிய தை மாதம் வரக்கூடிய சிறப்பு விசேஷங்கள். தை மாதத்தின் ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளில் அவ்வையார் பூஜை செய்யப்படும். ஆண்கள் இல்லாமல் பெண்கள் மட்டுமே வழிபடக்கூடிய வழிபாடு. இரவு 10 மணி தொடங்கி 1 மணிக்குள் இந்த வழிபாடு செய்வதால் நவகிரக பாதிப்பு நீங்கி, தடைகள் அகலும். பகை விலகும்.
தை வெள்ளிக்கிழமை அம்மனை வழிபாடு செய்வது விசேஷமானது. உத்தராயண காலம் தை மாதம் அம்மனை வழிபாடு செய்து, அபிராமி அந்தாதி போன்ற அம்மன் பாடல்களை பாடி வழிபடுவது சிறப்பு.
தை மாதத்தில் வருகின்ற வளர்பிறை திதியில் சப்தமி திதி அன்று ரதசப்தமி கொண்டாடப்படுகிறது. பகைவர்களை வெல்ல, நிலம், தானியம், வெற்றி, புண்ணியங்கள், நீண்ட ஆயுள், புத்திரப்பேறு, செல்வம் பெற, நோய் தீர, ஆரோக்கியம் பெற ரதசப்தமி அன்று சூரியனை வழிபட வேண்டும். வியாதி, மனக்கவலை போக்கும். வழி தெரியாமல் தவிப்பவர்களுக்கும் வழிகாட்டும். இந்த நாளில் விரதம் இருப்பவர்கள் இப்பலனை பெறுவார்கள்.
மேலும் படிக்கவும் : பிரச்சனைகளை தீர்வு காணும் மனப் பக்குவத்தை பெற
உலகெங்கிலும் தமிழர்களால் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படும். சிதம்பரத்தில் ஆடலரசன் ஆக இறைவன் உலக மக்களுக்கு பொன்னம்பலத்தில் காட்சி அளித்த நாள் தைப்பூசம். முருகனுக்கு உமையம்மை சக்திவேலை வழங்கிய நாள் பௌர்ணமியும், பூச நட்சத்திரமும் ஒன்றாக வரும் நாள் தைப்பூசம். இந்நாளில் முருகக் கடவுளையும், சிவபெருமானையும் வழிபடலாம்.
தை அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய, நீத்தார் கடன் வழிபாட்டை மேற்கொள்வார்கள். கடல், ஆறு போன்ற நீர் நிலைகளில் நீர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய தட்சியான காலத்தின் ஆடி மாதத்தில் வரும் அமாவாசையும், புரட்டாசியில் வருகின்ற மகாளய அமாவாசை மற்றும் உத்தராயண காலத்தின் தை அமாவாசையும் உகந்ததாக கூறப்படுகிறது. குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி, சுபிட்சம், குழந்தைப்பேறு, செய்த பாவங்கள் நீங்க முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதால் கிடைக்கப்பெறும் என கருதப்படுகிறது.
மேலும் படிக்க : வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா தைப்பூசம் ஸ்பெஷல்
இத்தனை சிறப்புகளைக் கொண்ட தமிழ் மாத வழிபாட்டு முறைகளை முன்னதாகவே அறிந்து கொண்டு பின்பற்றி இறையருளைப் பெற்று வளமாக வாழ்வோம்.