ஆசிரியர் தினத்தை திரைப்படத்துடன் கொண்டாடுங்கள்
ஆசிரியர் தினம்.
ஆசிரியர் என்ற உடன் மலர் டீச்சர் நினைவுக்கு வருவது சகஜம்தான் ஏனென்றால் நம்மை திரையுலகம் அந்த அளவிற்கு ஆக்கிரமித்துள்ளது. சற்று வரலாற்றைத் புரட்டி பார்த்த பின் திரையுலகத்திற்கு வருவோம்.
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
5 செப்டம்பர் 1888 பிறந்தார் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். இவரின் பிறந்த நாளையே நாம் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். தமிழகத்தை சேர்ந்த இவர் இந்திய தனித்துவஞானி, கல்வியாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். முதல் இந்திய துணை ஜனாதிபதியாகவும் (1952-1962), இரண்டாவது ஜனாதிபதியாக (1962-1967) பணிபுரிந்தவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.
திரைப்படம்
பள்ளி கல்லூரி காட்சிகள் இல்லாத படங்களே இல்லை என்பது போல் பெரும்பாலான படங்களில் ஆசிரியர் கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் திரைப்படங்களில் இருந்து கற்றுக் கொள்ளலாம். அதே சமயத்தில் எவ்வாறு இருக்கக் கூடாது என்பதையும் தெரிந்துகொண்டு அதனை பொதுவாழ்க்கையில் அறவே தவிர்க்கலாம்.
திரைப்படங்களில் வரும் ஆசிரியர்களுக்கு மத்தியில் உதாரணம் காட்டக் கூடிய நல்ல ஆசிரியரை கண்டெடுப்பது எளிது. இதோ உங்களுக்கான சில எடுத்துக்காட்டு திரைப்படங்கள்.
சாட்டை
இத்திரைப்படத்தில் சமுத்திரக்கனியின் ஆசிரியர் கதாபாத்திரம் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் நமக்கு இப்படி ஒரு ஆசிரியர் இல்லையே என்ற ஏக்கத்தை தரும் வகையில் இருந்தது.
ராட்சசி
‘தலை சரியாக இருந்தால் தான் வால் சரியாக இருக்கும்’ என்பதற்கிணங்க தலைமை ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்த ஜோதிகா நல்ல ஆசிரியராக சித்தரிக்கப்பட்டு அந்தப் பள்ளியில் பணிபுரிந்த சற்று கெட்ட குணம் பொருந்திய ஆசிரியர்களை நல்வழிப்படுத்தி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வாழ்க்கை கருத்தான ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பொருத்தே மாணவர்கள் கற்று அவர்களின் வாழ்க்கை அமைகிறது என்று கூறுகிறார்.
பசங்க
பாண்டியராஜனின் பசங்க படம் இரண்டு பகுதிகளாக வெளியானது. ஒரு ஆசிரியரின் மகன் அவரின் வகுப்பில் படித்தாலும் அனைத்து மாணவர்களையும் பாரபட்சம் பார்க்காமல் ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். மாணவர்களுக்கு பாடம் புகட்டும் வழி அவர்களுடைய பாணியிலேயே மகிழும் விதமாக கற்பித்தால் நீண்டகாலம் அவர்களின் மனதில் பசுமரத்தாணி போல் நின்றிருக்கும் என பல தேவையான கருத்துக்களை இப்படங்களின் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்த ஜெயப்பிரகாஷ் அமலாபால் சூர்யா வாயிலாக கூறியிருப்பார் இயக்குனர்.
மக்களே இதெல்லாம் படிக்கும்போது உங்களோட ஆசிரியரோட ஞாபகம் வந்திருக்கும். நீங்க படிச்ச பள்ளி கிட்டயே இன்னும் நீங்க வாழ்ந்துட்டு இருக்கிங்கனா உடனே ஆசிரியரை பார்த்து வாழ்த்து சொல்லிட்டு வணங்கிட்டு வாங்க. அப்படி இல்லையா கைப்பேசிய எடுத்து அவங்களுக்கு ஒரு போனை போட்டு நலம் விசாரிச்சு வாழ்த்து சொல்லி வணங்குங்க கண்டிப்பா அவங்க ரொம்பவே மகிழ்ச்சியா இருப்பாங்க. என்னிக்குமே இல்லாம இன்னிக்கு போன் பண்ணிப் பேசறது கொஞ்சம் கூச்சமான கஷ்டமான விஷயமா இருந்தா குறுந்தகவல தட்டி விடுங்க.
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.