உங்கள் குழந்தைகளுக்கு கற்று கொடுங்கள்…!
குழந்தைகளுக்கு பரீட்சை முடிந்து வீட்டில் இருப்பதால், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நம் பாரம்பரிய விளையாட்டுகளை சொல்லி கொடுத்து விளையாட வைக்கலாம். இதிலும் நடப்பில் கொரோன பிரச்சனையால் வெளியில் போக முடியாமால் வீட்டிற்குள் முடங்கி இருப்பதால் அவர்கள் விடுமுறையை மகிழ்ச்சியாக போக இந்த மாதிரி விளையாட விடலாம்.
மன அழுத்தத்தை நீக்குவதில் இந்த விளையாட்டுகள் ஓர் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் நீங்கள் வீட்டில் இருக்கும் இந்த நாட்களை பயனுடையதாகவும் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு பாரம்பரிய விளையாட்டை கற்று கொடுத்த மனநிறைவுடனும் உங்கள் நேரத்தை செலவழிக்கலாம்.
பல்லாங்குழி:
காலத்தால் மறந்து போன விளையாட்டு… குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கலாமே..!! இன்றைய காலக்கட்டத்தில் பொழுதுப்போக்கு என்றாலே திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் மொபைல்போன் என்றாகிவிட்டது. இவையெல்லாம் நம்மை ஆக்கிரமித்து கொண்டதால், நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகள் அனைத்தையும் நாம் மறந்துவிட்டோம். அதை பற்றி இன்று நாம் காண்போம்.
நாம் மறந்து போன நமது தமிழ் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றுதான் பல்லாங்குழி விளையாட்டு. மற்ற விளையாட்டுகளை காட்டிலும் இந்த விளையாட்டு சற்றே வித்தியாசமானது. இந்த விளையாட்டை இருவர் மட்டுமே விளையாட முடியும்.
பல்லாங்குழி விளையாடுவதற்கு வட்டமாக குழி செதுக்கிய பலகை அல்லது நிலத்தில் இருவரிசையில் ஏழு ஏழு சிறு குழிகளைக் கிண்டி புளியங்கொட்டையோ, சோழியோ அல்லது சிறு கற்களையோ நிரப்பி ஒவ்வொன்றாக எடுத்து விளையாடும் விளையாட்டு இது. பலகையில் குழி செதுக்கவோ அல்லது நிலத்தில் குழி கிண்ட முடியாதவர்கள், தரையில் சுண்ணாம்பு கட்டிகளால் வட்டமிட்டும் இந்த விளையாட்டை விளையாடலாம்.
பல்லாகுழியின் விதிமுறைகள்:
முதலில் ஒரு குழியில் ஐந்து ஐந்து கற்களை போட்டு கொள்ள வேண்டும். முதலில் யாரோ ஒருவர் தனது பக்கத்தில் உள்ள ஏதேனும் ஒரு குழியில் உள்ள கற்களை எடுத்து ஒவ்வொன்றாக அடுத்த அடுத்த குழிகளுக்குள் வரிசையாக போட வேண்டும். கையில் இருக்கும் கற்கள் முடிந்தவுடன் அதற்கடுத்த குழியில் உள்ள கற்களை எடுத்து மீண்டும் ஒவ்வொரு கற்களாக தொடர்ந்து போட வேண்டும். இவ்வாறு 14 குழிகளிலும் ஒவ்வொரு கற்களாக போட வேண்டும். இவ்வாறு விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு வெறுங்குழி வருமாயின் அதைத் தொட்டு அடுத்த குழியில் இருக்கும் கற்களை தனக்குரியதாக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து விளையாடும் பொழுது ஒரு குழியில் நான்கு கற்கள் இருந்தால் அதை ‘பசு” எனச் சொல்லி தனதாக்கிக் கொள்ள வேண்டும். ஆட்டத்தின் முடிவில் அதிகமாக கற்களை வைத்திருப்பவர்களே வெற்றியாளர் ஆவார். இதில் கடைசி முத்து தீரும் வரை ஆட்டத்தை நீடிக்க வேண்டும்.
பல்லாங்குழியின் பயன்கள் :
தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். மனக் கணக்கு போட எளிதாக கற்றுக் கொடுக்கிறது. குழந்தைகள் இந்த விளையாட்டை விளையாடுவதால் அவர்களுக்கு கணிதப்பாடம் எளிதாகிறது. எதிரில் இருப்பவரின் மன ஓட்டத்தை படிக்க கற்று கொள்ளலாம். கால்குலேட்டடு ரிஸ்க் என்று சொல்கிறார்களே அதைப் புரிந்து கொள்ள முடியும்.