சமையல் குறிப்புவாழ்க்கை முறை

டேஸ்டியான வரைட்டீஸ் சாம்பார்..!

உணவில் ஒரே சாம்பாரை வைத்து போர் அடித்து விட்டதா? இந்த வகையில் ஒவ்வொரு முறையும் சாம்பார் வைத்து அசத்துங்கள்.

சின்ன வெங்காயம் சாம்பார்

தேவையானவை : துவரம் பருப்பு 100 கிராம், சின்ன வெங்காயம் கால் கப் தோல் உரித்தது, சாம்பார் பொடி-2 ஸ்பூன், மஞ்சள் தூள் கால் ஸ்பூன், வெந்தயம் கால் ஸ்பூன், சீரகம் கால் ஸ்பூன், பெருங்காயத் தூள் இரண்டு சிட்டிகை. நறுக்கிய கொத்தமல்லி, எண்ணெய், உப்பு தேவைக்கு ஏற்ப.

தாளிக்க : கடுகு, உளுத்தம் பருப்பு தலா கால் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை : துவரம் பருப்புடன் வெந்தயம், பெருங்காயத் தூள், சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் நன்கு வேக விட்டு இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், சின்ன வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, புளிக் கரைசல் சேர்த்து, கொதிக்க வைத்து உப்பு சேர்த்து, வேக வைத்த பருப்பையும் கலந்து, கொதிக்க விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, இறக்கினால் சின்ன வெங்காய சாம்பார் தயார். கடைசியாக கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.

இட்லி, தோசை, சாதம் எல்லாவற்றுக்கும் ஏற்ற சாம்பார் இது. வெந்தயம், சீரகம், தனியா சம அளவு எடுத்து அரைத்து சேர்த்தால் சாம்பார் வாசனை ஊரைத் தூக்கும்.

பாசிப்பருப்பு சாம்பார்

தேவையானவை: பாசிப்பருப்பு 100 கிராம், முருங்கைக் காய், கத்தரிக்காய் தலா 1, சின்ன வெங்காயம் அரை கப் நறுக்கியது, அரை கப் புளிச்சாறு, சாம்பார் பொடி ஒரு ஸ்பூன், மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், தேங்காய் துருவல் 2 ஸ்பூன், மஞ்சள் தூள் கால் ஸ்பூன், பெருங்காயத் தூள் 2 சிட்டிகை, நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு, எண்ணெய், உப்பு தேவைக்கு ஏற்ப.

தாளிக்க : உளுத்தம் பருப்பு, கடுகு, கறிவேப்பிலை தேவையான அளவு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை : பாசிப்பருப்பை பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்க வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பிறகு தாளிக்கக் கொடுத்துள்ள வற்றை ஒன்றாக சேர்த்து தாளித்து, நறுக்கிய காய்கறிகளையும் ஒவ்வொன்றாக வதக்கி, சின்ன வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். வெந்த பருப்பை இதனுடன் சேர்த்து கூடவே சாம்பார் பொடி, மிளகாய் பொடி, உப்பு, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விட்டு கொதி வந்ததும் கொத்தமல்லி தேங்காய் துருவலை சேர்த்து இறக்கினால் சுவையான பாசிப்பருப்பு சாம்பார் தயார்.

பச்சைமிளகாய் சாம்பார்

தேவையானவை : துவரம் பருப்பு 100 கிராம், சின்ன வெங்காயம் கால் கப், நறுக்கிய கத்தரிக்காய், தக்காளி தலா அரை கப், பச்சை மிளகாய் ஐந்து முதல் ஆறு வரை, புளி நெல்லிக்காய் அளவு கரைத்து எடுத்து வைக்கவும். சாம்பார் பொடி ஒரு ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு, எண்ணெய், உப்பு தேவைக்கு ஏற்ப.

தாளிக்க : உளுந்தம் பருப்பு, வெந்தயம், கடுகு தலா கால் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை : துவரம் பருப்பை தனியே வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சிறிது எண்ணெயில், சின்ன வெங்காயம், நறுக்கிய கத்தரிக்காய், நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை, வதக்கி சாம்பார் பொடி, மிளகாய் பொடி, உப்பு சேர்த்து புளிக்கரைசலை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். கொதி வந்ததும் உப்பு, காரம் பார்த்துக் கொள்ளுங்கள். தேவை என்றால் சேர்த்துக் கொள்ளலாம். வெந்த பருப்பையும் சேர்த்து, சிறிது எண்ணெயில் தாளிக்க வேண்டிய பொருட்களை எல்லாம் தாளித்து இதில் கலந்து, ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும். விருப்பப்பட்டால் தேங்காய் துருவல், சீரகம் சிறிது ஒன்றிரண்டாக தட்டி சேர்த்துக் கொள்ள வாசனை தூக்கலாக இருக்கும். வித்தியாசமான இந்த பச்சை மிளகாய், சாம்பார் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *