இந்தியாவின் ஆதரவு வேண்டும்..!! ரஷ்யா கோரிக்கை..!!
உக்ரைன் மீது ரஷ்யா எடுத்து வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டால், இந்தியா தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என ரஷ்யா கேட்டுக் கொண்டுள்ளது.
நேட்டோ கூட்டமைப்பில் இணைய உக்ரைன் முடிவெடுத்ததால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதையடுத்து உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன்- ரஷ்யா விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தின. மேலும் உக்ரைன் மீது போர் தொடுத்ததற்காக ரஷ்யா மீது நடவடிக்கை எடுப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில், முக்கியமான நடவடிக்கை கோரி தீர்மானம் எதுவும் கொண்டு வந்தால், தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என இந்திய அரசுக்கு ரஷ்ய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த தீர்மானம் குறித்து, டெல்லியில் உள்ள மூத்த ரஷ்ய தூதரான பாபுஷ்கின், “எங்கள் இந்திய கூட்டாளிகள் ரஷ்யாவை ஆதரிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையில், “வரைவு தீர்மானத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். இந்த தீர்மானம் எப்படி இறுதி வடிவம் பெறுகிறது என்பதைப் பொருத்து, இந்தியா தனது நிலைப்பாட்டை முடிவு செய்யும்.” என நேற்று வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் ஷிரிங்லா தெரிவித்தார்.