சமையல் குறிப்புவாழ்க்கை முறை

சண்டே ஸ்பெஷல் இறால் பிரியாணி

இறாலை மக்கள் அதிகமாக விரும்பாவிட்டாலும் இப்போது அதற்கான மவுசே தனிதாங்க. ஒரு முறை இறாலை ருசி பார்த்தவர்கள் அதனை கண்டிப்பாக அடிக்கடி உண்ண விரும்புவார்கள் மட்டும் தானா என்று இல்லை.

இறால் உங்களுக்கு தெரியாத பல உடல் நல நன்மைகள் அடங்கியுள்ளது. நம் விரல் அளவுக்குக் கூட இல்லாத இந்த சிறிய உயிரினத்தில் அப்படி என்ன பயன் என்று தெரிந்து கொள்வோம் அடுத்த பதிவில்.

இறால் பிரியாணி

தேவையான பொருட்கள் : பாஸ்மதி அரிசி கால் கிலோ, இறால் அரை கிலோ, வெங்காயம் 3, தக்காளி 2, பிரியாணி இலை 2, எண்ணெய் தேவையான அளவு.

மராத்தி மொக்கு 2, இலவங்கம் 4, சோம்பு தூள் அரை தேக்கரண்டி, கொத்தமல்லி தழை, புதினா ஒரு கைப்பிடி. கறி மசாலா தூள் ஒரு தேக்கரண்டி, இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி, தயிர் ரெண்டு ஸ்பூன்.

பட்டை இரண்டு துண்டு, மிளகாய் தூள் அரை ஸ்பூன், பச்சை மிளகாய் 3, மஞ்சள் தூள் கால் ஸ்பூன், பிரியாணி மசாலா ஒரு ஸ்பூன், அன்னாசிப்பூ சிறிது, ஏலக்காய் 3.

செய்முறை : இறாலை சுத்தம் செய்து அதில் மஞ்சள்தூள், உப்பு, தயிர் சிறிது, மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை, பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, சோம்புத்தூள், லவங்கம், மராத்தி மொக்கு, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பிறகு வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.

வெங்காயம் நன்றாக வதக்க வேண்டும். பிறகு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பிறகு பிரியாணி மசாலா, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கறி மசாலா தூள், சேர்த்து வதக்கிய பின்னர் தக்காளி, கொத்தமல்லி, புதினாவை சேர்த்து வதக்க வேண்டும்.

தக்காளி குழைய வெந்ததும் எண்ணெய் பிரியும் போது இறாலை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி வதக்கவும். ரொம்ப நேரம் வதக்க வேண்டாம். இறாலை போட்டு சிறிது வதக்கியதும் கால் கிலோ அரிசிக்கு (ஒரு டம்ளர் அரிசிக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் வீதம் அளந்து விடவும்) சிறிது உப்பு போட்டு கொதிக்க விடவும்.

நன்றாக கொதி வந்த பிறகு கழுவிய அரிசியை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விட்டு, பின் மூடி அடுப்பை மிதமான தீயில் வைத்து முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போடவும்.

சுவையான இறால் பிரியாணி தயார். தம்க்கு பதிலாக குக்கரிலும் வைக்கலாம். இதே அளவை குக்கரில் வைத்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *