சமையல் குறிப்புவாழ்க்கை முறை

சண்டே ஸ்பெஷல்..!!

உடலுக்கு சத்தான இடுப்புக்கு வலுவைக் கொடுக்கக் கூடிய உளுந்தங்களி, உளுந்தஞ்சோறு எப்படி செய்யலாம். இதனால பெண்களுக்கு 40 வயதிற்கு மேல் வரக்கூடிய இடுப்பு வலி தீரும். பெண் பிள்ளைகளுக்கு சிறு வயது முதல் இதை வாரம் இரண்டு முறை சேர்த்துக் கொண்டு வருவதால், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்பு வலி குறையும். இதை சிறு வயது முதல் குழந்தைகளுக்கு கொடுத்து பழக்குவது நல்லது.

உளுந்தங்களிக்கு தேவையான பொருட்கள்

உளுந்தங்களி : அரை கிலோ கருப்பு உளுந்து தோலுடன், 10 கிராம் ஏலக்காய், 50 கிராம் சுக்கு, அரை கிலோ பச்சரிசி, அனைத்தையும் சுத்தமானதாக டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் பார்த்து வாங்கி வைக்கவும்.

மாவு செய்முறை: அடுப்பில் ஒரு வாணலியை சூடு செய்து, உளுந்தை போட்டு வறுக்க வேண்டும். கருக விடாமல் அதன் பச்சை வாசனை போகும் வரை வறுத்தெடுக்கவும். ஏலக்காய், சுக்கு இளம் வறுப்பாக வறுத்து அதை ஒன்றிரண்டாக தட்டி, அந்த உளுந்தில் கலந்து அதனுடன் பச்சரிசி சேர்த்து, அனைத்தும் கலந்து ஆறவைத்து, மிஷினில் கொடுத்து நைஸாக அரைத்து வாங்கவும். இந்த மாவை ஆற வைத்து, காற்று புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும். தேவையான பொழுது இந்த மாவை எடுத்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

களி செய்முறை : ஒரு டம்ளர் மாவிற்கு, 3 டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். இதற்கு கருப்பட்டி, வெல்லம், உங்களுக்கு எது பிடித்தது அதை வாங்கிக் கொள்ளவும். ஒரு டம்ளர் மாவிற்கு ஒரு டம்ளர் வெல்லம் அல்லது ஒரு டம்ளர் கருப்பட்டி சேர்த்துக் கொள்கிறோம். இதில் கருப்பட்டி மிகவும் நல்லது.

முதலில் 3 டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் கருப்பட்டி சேர்த்து நன்றாக கரைந்தவுடன் 3 கொதி வரும் போது இந்த மாவை அதில் தூவி விட்டு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கும் போது கெட்டியாக வந்த உடன் அடுப்பை ஆஃப் செய்ய வேண்டும். தண்ணீர் தொட்டு கையை தொட்டால் கையில் ஒட்டக் கூடாது அது தான் பதம். இந்த பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். இந்த களியை உருண்டைகளாக பிடித்து நடுவில் குழி பறித்து நல்லெண்ணெய் விட்டு பரிமாறவும். சுவையான உளுந்தங்களி தயார்.

உளுந்து சோறு : புழுங்கல் அரிசிக்கு ஒரு டம்ளர், கருப்பு உளுந்து தோலை நீக்க கூடாது, ஊறவைத்து இரண்டையும் கழுவி ஊறவைத்து குக்கரில் ஐந்து டம்ளர் தண்ணீர் வைத்து, இதனுடன் ஜீரகம் ஒரு ஸ்பூன், பூண்டுப் பல் 8, உப்பு சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும். விசில் அடங்கியதும் சூடாக எடுத்துப் பரிமாறலாம். இதற்கு சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி செய்து பரிமாறுவது அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *