உத்வேகத்துடனும் உற்சாகத்துடன் வரும் வாரத்தை தொடங்குங்கள்
ஞாயிற்றுக்கிழமை என்ற சொல் கேட்டவுடன் மனம் பிரியாணிக்கும் ஓய்விற்கும் தான் ஓடிவிடும். நம் வாழ்க்கையில் ஒரு வாரம் கடந்து மற்றொரு வாரம் பிறக்கிறது என்ற தோன்றல் வராது.
அதெல்லாம் நினைஞ்சு இருந்தா எப்பயோ அம்பானி டாடா பிர்லா ரேஞ்சுக்கு போயிருக்க மாட்டோம்!நம்மை ஏங்க மத்தவங்க மாதிரி ஆகணும்?
லட்சியம்
நம் லட்சியத்தை அலட்சியப்படுத்தாமல் முன்னேறிக் கொண்டு போவதையே நாம் நம் கவனத்தில் கொண்டு பயணிக்கவும். அதற்கு மனமும் உடலும் ஒன்றுபட்டு பொருந்தி செயல்பட வேண்டும். மனதிற்கு ஏற்ற வேகத்தில் உடல் ஓட வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமைக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் ஒவ்வொருவரும் நம் கடந்த காலத்திலிருந்து பாடத்தை பயின்று எதிர்காலத்திற்கு தயாராக வேண்டும். சென்ற வாரத்தில் நாம் செய்தப் பிழைகளை இழக்காமல் புதிய முன்னேற்றத்திற்காக செயல்பட்டு புதிய வாரத்திற்காக தயாராக வேண்டும்.
பயிற்சி
நம்முடைய முன்னேற்றத்திற்குரிய முயற்சி அகத்திலிருந்து வந்தால் சிறப்பாக அமையும். உடலுக்கு உடற் பயிற்சிகள் அவசியம். உயிர் உள்ளவரை எந்தவித நோய் நொடியும் இல்லாமல் இருப்பதற்கு உடற்பயிற்சி அத்யாவசியம்.
புறம்
உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று தான் பயிற்சியை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பணத்தை சம்பாதித்து உடலை வளர்த்து மறுபடியும் உடலை குறைக்க பணத்தை செலவிட வேண்டும் என்ற அவசியம் இல்லை.
பணத்திற்காக செலவிடும் 10 மணி நேரத்தை ஒப்பிடுகையில் நம் உடலிற்காக ஒரு மணி நேரம் செலவிட முடியாதா! அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை சாதாரணமான நடைப்பயிற்சியே மிகுந்த சக்தி வாய்ந்தது.
நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் நமக்கே அறியாமல் நாம் வாழ காரணமாக இருக்கும் அத்தியாவசிய பொருள் என்று மட்டுமே நமக்குத் தெரியும். ஆனால் அது செய்யக்கூடிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டால் அதை துச்சமாக நினைக்க மாட்டோம்.
பயிற்சிகள் நாம் வாழ்நாள் முழுவதும் நோய் நொடியற்ற சீரும் சிறப்புமாக வாழ்வதற்கே ஆகும். ஆரோக்கியமான வாழ்வே வளமான வாழ்வு. புறத்திற்கு மட்டும் பயிற்சி கொடுத்தால் போதாது, மனதிற்கும் பயிற்சி தேவைப்படுகிறது.
அகம்
தியானம் செய்வது மனதிற்கு கொடுக்கும் முக்கியமான பயிற்சி. தியானத்தில் ஈடுபட்டால் நம் உடல் முழுவதும் சாந்தி அடைகிறது. புதிய உத்வேகத்தை அளிக்கிறது.
எந்தவித சிந்தனையுமின்றி நம் சுவாசத்தை ரசிக்கும் 30 நிமிடம் முதல் 45 நிமிடம் செய்யும் தியானம் நமக்கு நாமே கொடுக்கும் பெரிய பொக்கிஷம். அன்று முழுவதும் நம் உடல் ஆற்றல் மிகுந்ததாக இருப்பதை நாம் அனுபவப் பூர்வமாக உணரலாம்.
திட்டம்
ஞாயிற்றுக்கிழமைகளில் சிகை அலங்காரம், ஆடை, ஆபரணம், ஹோட்டல், திரையரங்கில் படம், ஷாப்பிங் மால் என பல திட்டங்களுடன் காத்திருக்கும் நாம் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை நம் அகத்திற்கும் புறத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து நம் முன்னேற்றத்திற்கு நாம் விதை விதைப்போமா!
நன்றே செய், அதை இன்றே செய்.