ஸ்பெஷல் செம்பருத்தி ரெசிபி..!
செம்பருத்தி இதில் மருத்துவ குணம் நிறைத்துள்ளாதால் இந்த ஜூஸ் செய்து கொடுக்க சிறுவர்களுக்கும், இதய நோயாளிகளுக்கு இந்த ஜூஸ் மிகவும் உகந்தது.
செம்பருத்தி பூ ஜூஸ்
தேவையானவை : சிவப்பு செம்பருத்தி ஒற்றை அடுக்கு இதழ் ஐந்து, தேங்காய் துருவல் அரை மூடி, காய்ச்சி ஆற வைத்த பால் 50 மில்லி, ஐஸ்கட்டி 2, தேன் ஒரு ஸ்பூன், சர்க்கரை ஒரு ஸ்பூன்.
செய்முறை : தேங்காய் துருவலை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி பாலை எடுத்து வைக்கவும். பின்னர் அதில் செம்பருத்தி இதழ், தேன், சர்க்கரை, ஐஸ் கட்டி, சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுக்கவும். இதனுடன் காய்ச்சி ஆற வைத்த பாலை கலந்து, தேங்காய் பாலுடன் சேர்த்து கலந்தால் சுவையான செம்பருத்தி ஜூஸ் ரெடி.
செம்பருத்தி எலுமிச்சை புதினா ஜூஸ்
தேவையானவை : சிவப்பு செம்பருத்தி இதழ்கள் ஒற்றை அடுக்கு 5, அரைக்கப் புதினா இலை அரை கப், இஞ்சி தோல் சீவி சிறு துண்டு, எலுமிச்சை சாறு இரண்டு ஸ்பூன், மிளகுத் தூள் அரை ஸ்பூன், ஐஸ்கட்டி 2 நறுக்கிய வெள்ளரிக் காய் கால் கப், உப்பு ஒரு சிட்டிகை, தண்ணி 150 மில்லி.
செய்முறை : வெள்ளரிக் காய், செம்பருத்தி, இதனுடன் புதினா, இஞ்சி, உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து வடிகட்டி எடுக்கவும். இதனுடன் 150 மில்லி தண்ணீர் சேர்த்து கலந்து வடிகட்டி எடுக்கவும். இதில் எலுமிச்சை சாறு, தேவையான தண்ணீர், ஐஸ் கட்டி சேர்த்து கலந்து, மிளகுத் தூள் தூவி பரிமாறலாம். இதய நோயாளிகளும், இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கும் இந்த ஜூஸ் ஏற்றதாக இருக்கும் அனைவரும் பருகலாம்.
உடலுக்கு குளிர்ச்சியை தரும் செம்பருத்தி, வெந்தயம், வைத்து தோசை எப்படி செய்யலாம் வாங்க பார்க்கலாம்.
செம்பருத்தி வெந்தய தோசை
தேவையானவை : செம்பருத்திப்பூ ஐந்து காம்புடன், முளைக்கட்டிய வெந்தயம் 25 கிராம், பச்சரிசி 100 கிராம், சிவப்பு அவல் 100 கிராம், பச்சை மிளகாய் 3, தேங்காய் துருவல் அரை மூடி, சீரகம் அல்லது சோம்பு ஒரு ஸ்பூன், உப்பு தேவையான அளவு. எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை : பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து, சிவப்பு அவளையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் உரிய பச்சரிசி, சிவப்பு அவல், பச்சை மிளகாய், சீரகம் அல்லது சோம்பு, தேங்காய் துருவல், முளைகட்டிய வெந்தயம், செம்பருத்தி, ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு, அரைத்துக் கொள்ளவும். இந்த மாவில் உப்பு சேர்த்து கலக்கி ஆறு மணி நேரம் புளிக்க வைத்து எடுத்து, தோசை தவாவை சூடு செய்து, தோசையாக ஊற்றி இரு புறமும் எண்ணெய் விட்டு, சுட்டு எடுத்தால் சுவையான செம்பருத்தி வெந்தய தோசை தயார்.