ஸ்பெஷல் கொழுக்கட்டை வாழைப்பழ ரெசிபி
ஸ்பெஷல் கொழுக்கட்டை வாழைப்பழ ரெசிபி. வித்தியாசமான இந்த ரெசிபி எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்களா? செஞ்சி பாருங்க. குழந்தைகள் விரும்பி உண்ணுவார்கள். வாழைப்பழம் நிறைய வகைகள் உண்டு. எல்லா வகைகள் கொண்ட வாழைப் பழங்களை தினமும் உட்கொள்வதில்லை.
அப்படியிருக்க வீட்டில் எந்த வகையான வாழைப் பழத்தை குழந்தைகள் உண்ணுவதற்கு மறுக்கிறார்கள் என்று தெரிந்து அந்த பழத்தை கொண்டு இந்த வகையான கொழுக்கட்டையை செய்யலாம். மேலும் சதுர்த்தி அன்று விநாயகருக்கு இக் கொழுக்கட்டை படைக்கலாம். ரெசிபியை பார்க்க போகலாமா. மேலும் தொடர்ந்து படிங்க.
வாழைப்பழ கொழுக்கட்டை
தேவையான பொருட்கள் : கனிந்த வாழைப்பழம் ஒன்று, தண்ணீர் ஒரு டம்ளர், ஏலக்காய் பவுடர் ஒரு ஸ்பூன், நெய் ஒரு ஸ்பூன், சர்க்கரை அரை கப், இடியாப்பம் மாவு ஒரு கப்.
செய்முறை விளக்கம் : அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கனிந்த வாழைப்பழத்தை மசித்து சேர்த்து, இத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி விடுங்க. நன்றாக கலந்த பிறகு அரிசி மாவு சேர்த்து மெதுவாக கிளற வேண்டும்.
அடிப்பிடிக்காமல் கட்டி சேராமல் மாவு ஒன்று சேர கிளறிவிட்டு கெட்டியானதும் இறக்கி விடவும். பிறகு மாவை நன்கு குளிர ஆற விடவும். பிறகு மாவு ஆறியதும் சிறு சிறு உருண்டையாக பிடித்து இட்லி தட்டில் வைத்து கொள்ளுங்கள்.
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அடுப்பில் சூடு செய்து கொழுக்கட்டை வைத்த தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு 10 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும். கொழுக்கட்டை நன்றாக வெந்து இருக்கும். சுவையான வாழைப்பழ கொழுக்கட்டை தயார்.
வீட்டில் வாழைப்பழம் கனிந்து விட்டாலோ அல்லது விசேஷ நேரங்களில் வாழைப்பழம் நிறைய வீட்டில் இருக்கும். அந்த நேரங்களில் இப்படி கொழுக்கட்டை செய்து கொடுக்கலாம். கனிந்த வாழைப்பழங்களை குழந்தைகளுக்கு கொடுக்க முடியாது. எனவே இப்படி கொழுக்கட்டை செய்து கொடுக்க விரும்பி உண்ணுவார்கள். இந்த கொழுக்கட்டையை வீட்டில் ட்ரை செய்து பாருங்க. கனிந்த வாழைப்பழத்தை வேஸ்ட் செய்யாமல் இப்படி உபயோகமாக பயன்படுத்தலாமே.