செய்திகள்தேசியம்

வாக்குச் சாவடிக்குள் நுழைய முயற்சி..!! சோனு சூட்டின் காரை பறிமுதல் செய்த போலீசார்..!!

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில் வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்ற நடிகர் சோனு சூட்டின் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக 117 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்றது. களத்தில் 1,304 வேட்பாளர்கள் உள்ளனர்.

இதற்காக 24,689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 2,952 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம், பாஜக கூட்டணி, ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கொரோனா காலத்தில் தனது சேவை மூலம் மிகவும் புகழ் பெற்ற பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூத் மோகா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் இந்த ஆண்டு ஜனவரி 10ம் தேதி காங்கிரஸில் இணைந்த நிலையில் உடனடியாக போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் மோகா மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்ற சோனு சூட்டின் காரை பஞ்சாப் போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

இதுகுறித்து நடிகர் சோனு சூட் கூறுகையில், அகாலிதளம் உள்பட எதிர்க்கட்சிகளிடம் இருந்து பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு மிரட்டல் வந்தது. சில வாக்குச்சாவடிகளில் பணம் விநியோகிக்கப்படுவதாகவும் தகவல் வந்ததால் சோதனை செய்து நியாயமான தேர்தலை நடத்துவது எங்கள் கடமை. அதனால்தான் நாங்கள் வெளியே சென்றோம் எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *