வாழ்வில் வளம் பெற அபிராமி அந்தாதி!
வாழ்வில் வளம் பெற தேவைப்படும் வளங்கள் பெற்று வளமுடன் வாழ அபிராமி அந்தாதி வழிகாட்டும். தினசரி முடிந்த அளவு அபிராமி அந்தாதி பாடல்கள் விளக்கத்துடன் படித்து வர அனைத்து வளங்களும் பெறலாம்.
4. உயர் பதவிகளை அடைய
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.
உரை:
மனிதர், தேவர், பெரும் தவமுனிவர் முதலியோர் தலை வைத்து வணங்கும் அழகிய சிவந்த பாதங்களுடைய கோமளவல்லியே! தன்னுடைய நீண்ட சடாமுடியில் கொன்றையும், குளிர்ச்சி தரும் இளம் சந்திரனையும், அரவையும், கங்கையையும் கொண்டு விளங்குகின்ற புனிதரான சிவபெருமானும் நீயும் இடையறாது என் மனத்திலே ஆட்சியருள வேண்டும்.
5. மனக்கவலை தீர
பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே.
உரை:
அபிராமி அன்னையே! உயிர்களிடத்திலே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூவகை நிலைகளிலும், நிறைந்து இருப்பவளே! மாணிக்க பூண் அணிந்த நெருக்கமான, அடர்ந்த தனங்களின் சுமையால் வருந்துகின்ற வஞ்சிக் கொடி போன்ற இடையை உடையவளே! மனோன்மணியானவளே! (அன்பர்களை ஞான நிலைக்கு கொண்டு செல்கின்றவள்) நீண்ட சடையை உடைய சிவபெருமான் அன்றொரு நாள் அருந்திய விஷத்தை அமுதமாக்கிய அழகிய தேவி! நீ வீற்றிருக்கும் தாமரையைக் காட்டிலும் மென்மையான நின் திருவடிகளையே, என் தலைமேல் கொண்டேன்.
6. மந்திர சித்தி பெற
சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே.
மேலும் படிக்க ; அபிராமி அந்தாதி பாடல் வரிகள் மற்றும் விளக்கம்
உரை:
செம்மையான திருமேனியுடைய அபிராமித் தாயே! என்றும் என் தலைமேல் இருக்கக்கூடியது, நின் அழகிய திருவடியே! என்றும் என் சிந்தையுள்ளே நிலை பெற்று இருக்கக் கூடியது, நின் திருமந்திரமே! செந்தூர நிறமுடைய அழகிய தேவி, நான் இனி என்றும் கலந்திருப்பது நின்னையே மறவாது தொழும் அடியார்களையே! நான் தினந்தோறும் பாராயணம் செய்வது, உன்னுடைய மேலான ஆகம நெறியையே!
மேலும் படிக்க ; ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் 108 போற்றி!