சினிமா

சில்லுக்கருப்பட்டி இயக்குனருக்கு இன்று பிறந்த நாள்

ஹலிதா ஷமீம்-க்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

ஹலிதா ஷமீம்

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் பெண் இயக்குனர் ஹலிதா ஷமீம் தாராபுரத்தில் பிறந்து பள்ளிப்படிப்பை அங்கேயும் உதகமண்டலத்திலும் முடித்து சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பை முடித்துள்ளார்.

தனித்துவ இயக்குனர்களான புஷ்கர் காயத்ரிக்கும் மிஷ்கினுக்கும் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். இவர் துணை இயக்குனராக பணிபுரிந்த ஒரு படம் ஓரம் போ. தனித்துவமான இயக்குனர்களிடம் பணிபுரிந்ததாலோ இவரும் தனித்துவமான படங்களை இயக்க ஆரம்பித்தார்.

2014ல் பூவரசம் பீப்பி படம் மூலம் இயக்குனராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் ஹலிதா சமீம். இவர் தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமே பணிபுரிகிறார். ஐந்து வருட இடைவேளைக்கு பிறகு தொகுப்பு படமான சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்கினார். நல்ல விமர்சனங்கள் பெற்று ரசிகர்களிடையே வரவேற்கப்பட்டது. அந்தப் படத்தின் ஒரு பாடலை பிறந்தநாள் பரிசாக உருவாக்கியுள்ளது திங்க் மியூசிக்.

திரைப்படத்தின் கதையை தாமே எழுதி இயக்குபவர் ஹலிதா சமீம். தற்போது ஏலே என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் உள்ளது.

தனித்துவமான இயக்குனராக இவரை குறிப்பிடக் காரணம் இதோ. மின்மினி என்ற படத்தில் இருக்கும் நடிகர்களின் கதாபாத்திரம் சிறு வயது மற்றும் பெரிய வயது என இரு காலத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. சிறுவயதில் அவர்களை படம் பிடித்து வைத்து அவர்களின் வளர்ச்சிக்காக கால அவகாசம் கொடுத்து காத்திருக்கிறார் ஹலிதா சமீம்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தப் படத்தை பற்றி ட்வீட் செய்துள்ளார்.
“உயிர் பிழைத்தவரின் குற்றம் எவ்வளவு உண்மையானது? உங்கள் அன்புக்குரியவர்களின் கனவுகளை வாழ நீங்கள் எவ்வளவு தூரம் செல்வீர்கள்? அன்பிற்கும் வெறுப்பிற்கும் இடையிலான அந்த மெல்லிய கோடு? பதின்ம வயதினர் ஏன் பெரியவர்களை விட உணர்ச்சிவசப்படுகிறார்கள்?! மின்மினி என்பது ஒரு அமைதியான மேகம், அது என் மீது இறங்கியது, அதற்கு நியாயம் செய்ய நான் இத்தனை ஆண்டுகளில் உழைத்து வருகிறேன்.”

மின்மினி படம் அடுத்த வருடம் ரிலீஸாக உள்ளது என்ற செய்திகள் பரவி வருகிறது. இன்று இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறி இவரிகளின் படத்திற்காக காத்திருப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *