ஒவைசி மீது துப்பாக்கிச்சூடு:- அமித்ஷா விளக்கம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் திங்கள்கிழமை மாலை மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்க உள்ளார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
இதனையடுத்து உத்தரபிரதேசத்தில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் எம்.பி அசாதுதீன் ஒவைசியின் கார் மீது வியாழக்கிழமை மாலை மீரட்டின் கித்தூத் பகுதியில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டபோது நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்துள்ளார். அதில் சமபவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க முன்வந்ததாகவும், ஆனால் அவர் அதனை ஏற்க மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு மரியாதை செலுத்தும் வகையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் ராஜ்யசபா இன்று ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்றுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து மாநிலங்களவை நாளை காலை 10 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.