ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்

சனி பிரதோஷத்தன்று ஸர்ப்ப தோஷ பரிகார ஸ்தலம்-திரியம்பகேஸ்வரம்

சனிப்பிரதோஷமான இன்று அனைத்து பாவங்களையும் தீர்க்கும் திரியம்பகேஸ்வரம் பற்றி காண்போம். மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் திரியம்பகேஸ்வரம் அமைந்துள்ளது.

"வாவிங்கே நீகுயிற் பிள்ளாய்
மாலொடு நான்முகன் தேடி
ஓவி யவர் உன்னி நிற்ப
ஒண்டழல் விண்பிளந் தோங்கி
மேவிஅன் றண்டங் கடந்து
விரிசுட ராய்நின்ற மெய்யன்
தாவி வரும்பரிப் பாகன்
தாழ்சடை யோன்வரக் கூவாய்"
-திருவாசகம்

திரியம்பகேஸ்வரம்

மகா மிருத்தியுஞ்சய மந்திரம்

“ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்ட்டிவர்த்தனம்
உருவாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்”

ஸ்தல வரலாறு

பிரம்மகிரி என்ற மலைக் காட்டில் சிறந்த தவசீலரான கௌதம மகரிஷி அகல்யை தம்பதியர் மிகுந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தவங்களைச் செய்து வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தவர்கள். மழை இல்லாமையால் மிகுந்த பஞ்சத்துக்கு தள்ளப்பட்ட சமயத்தில் கௌதம மகரிஷி வருண பகவானை குறித்து தவம் செய்து அவர் கருணையால் தனது ஆசிரமத்தில் பக்கத்தில் உள்ள குளத்தில் தண்ணீர் எப்போதும் நிரம்பி வழியும் வரம் பெற்றார். இதைக் கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தில் இருந்த முனிவர்கள் தங்கள் குடும்பத்துடன் கௌதம மகரிஷி ஆசிரமம் பகுதியிலேயே வாழத் தொடங்கினார்‌. அச்சமயத்தில் கௌதம மகரிஷி பூஜைக்காக தண்ணீர் எடுத்து வரும்படி மனைவியிடம் கூறினார் மற்ற வேலைகளில் ஈடுபட்டிருந்ததால் குருகுலத்தில் இருந்த சீடர்களை அனுப்பி தண்ணீர் கொண்டு வரும்படி கூறினாள்.

ஆற்றங்கரைக்கு சென்ற மாணவர்களை, அங்கிருந்த மற்ற முனிவர்களின் மனைவிமார்கள் காத்திருக்கும்படி கூறிவிட்டனர். நேரம் கடந்து கொண்டே இருக்கவே அகலிகை ஆற்றங்கரைக் செல்ல அங்கு மற்றவர்களிடம் நீங்கள் செய்வது தவறு என்று சுட்டிக் காட்டிவிட்டாள்.‌ அதை அவர்கள் தன் கணவர்மாரான மற்ற முனிவர்களிடம் கூறினார்கள். அனைவரும் சேர்ந்து கௌதமரை அவ்விடத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று நினைத்தனர் ஆகையால் அனைவரும் ஒன்றுகூடி விநாயகரை உபாசித்தனர். விநாயகரும் அவர்களின் பூஜைக்கு செவிசாய்த்து கண்முன்னே காட்சியளித்தார். முனிவர்கள் அவர்களின் எண்ணத்தை கூறினர். இவர்களின் கொடிய எண்ணத்தை தெரிந்த விநாயகர் அவர்களின் மத்தியில் கௌதமரின் புகழை களங்கப்படுத்துவதை விட இவர்களை விட்டு தள்ளி இருப்பதே மேல் என்று நினைத்தார். ‘சரி தங்கள் திட்டம் யாது?’ என விநாயகர் வினவ ‘நீங்கள் வயது முதிர்ந்த பசுவாக கௌதமரின் வயலில் மேய அவர் உங்களை துரத்தினாலும் செல்லாமல் அங்கு இருக்க, ஏதேனும் ஒரு தருணத்தில் அவர் உங்களை தாக்க நீங்கள் மாய்ந்து விடுவது போல் நடிக்க வேண்டும்’ என கூட்டுக் குழுவாக தீட்டிய திட்டத்தை வெளியிட்டனர்.

விநாயகரும் இவர்கள் சொல்லியது போல் நடிக்க கௌதமர் அடித்த நெற்கதிரால் தாக்கப்பட்டு இறந்தது போல் நடித்தது கிழட்டுப் பசு. அத்தருணத்தில் முனிவர் கூட்டம் கூடியது, கௌதமரை சாடியது, அவர் மனம் குலைந்து போனார். இதை சாக்காக கொண்ட முனிவர்கள் பசுவைக் கொன்ற குற்றம் நீங்க ‘தாங்கள் கோஹத்தி செய்தீர்கள் என்று கூறிக்கொண்டு இவ்வுலகத்தை மும்முறை சுற்றி வந்த பிறகு ஒரு திங்கள் கடும் விரதமிருந்து பிரம்மகிரி 101 முறை வலம் வந்து கங்கையை வரவழைத்து நீராடி ஒரு கோடி லிங்கங்களை பிரதிஷ்டை செய்து பூஜித்து மறுபடியும் கங்கையில் நீராடி பிரம்ம கிரியை பதினோரு முறை வலம் வந்து பின் ஒரே ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து அதற்கு நூறு குடங்கள் கங்கை நீரால் அபிஷேகம் செய்து ஆராதிக்க வேண்டும்’.

பூஜை, தவம் என்று வந்தால் பாரபட்சம் பார்க்காமல் அளிக்கும் தயாபரன் ஆயிற்றே அவர்! கௌதம மகரிஷி இவை அனைத்தையும் நிறைவேற்ற ரிஷப நாதராக பார்வதி சமேதராக எம்பிரான் கௌதமரின் முன் தோன்றி ‘வேண்டும் வரம் கேள் கௌதமா’ என்றார். ‘ஈசனே என் பாவத்தை நீக்கு. பசுவதை செய்ததால் என் பாவம் நீங்க கங்கையை வர வைக்கும் படி வேண்டுகிறேன்’ கௌதம மகரிஷி மனம் மகிழ கேட்டார். ‘கௌதமா! அகல்யை சாடியது முதல் உன்னை சாடியது தொடர்ந்து நடந்த அனைத்துமே மற்ற முனிவர்களின் சூழ்ச்சி. நீ எந்த பாவத்தையும் செய்யவில்லை’ என்று எம்பிரான் கூற கௌதமரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ‘சூழ்ச்சியில் நடந்த நன்மை தங்களின் தரிசனம் ஆகையால் அவர்களுக்கும் எந்த வித பாவமும் இல்லாமல் இருக்க வேண்டுகிறேன்’ என்று பதிலளித்த கௌதமரின் விருப்பத்தை நிறைவேற்றும் படி கங்கையை வரவழைத்தார் எம்பிரான். கங்கை பெண்ணாக காட்சியளிக்க கௌதமர் அவளை வலம் வந்து வணங்கி தூய்மைப்படுத்துமாறு கேட்டார். ஈசனும் கங்கைக்கு இசைக்க கௌதமரை தூய்மைப்படுத்திய பின் புறப்பட இருந்தாள் அப்பொழுது ‘கலியுகத்தில் பலர் பாவத்துடன் இங்கு நீராடு வருகையில் தூய்மைப்படுத்த “கௌதமி” என்ற நதியாக இங்கே இருப்பாயாக என்றார். அதுவே பிற்காலத்தில் “கோதாவரி” ஆயிற்று.

கங்காதேவி எம்பிரானிடம் ‘தாங்கள் எழுந்தருளியுள்ள இத்திருத்தலத்தில் நித்யவாசமாக இருக்கும்’ படி வேண்டினார். த்ரி மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் இங்கே மூன்று பானமாக காட்சியளிக்கின்றனர்.

பெயர்க்காரணம்

மும்மூர்த்திகளும் ஜோதிர்லிங்க வடிவில் இங்கு காட்சியளிப்பதால் ‘திரியம்பகேஸ்வரர்’ என பெயர் பூண்டு அங்கே இன்றும் தன்னை நாடுபவர்களுக்கு அபயம் அளித்து வருகிறதால் ‘திரயம்பகம் (அ) திரியம்பகேஸ்வர்’ என்ற ஸ்தலம் ஆயிற்று.

சிறப்பம்சம்

பிரம்மா விஷ்ணு ருத்ரன் மும்மூர்த்திகள் மொட்டுகள் போல் காட்சி அளிக்க, அந்த மூர்த்தியின் கீழ் வற்றாத நீரூற்று இருப்பது இன்றும் வியப்புக்கு உள்ளாக்குகிறது.

குருபகவான் சிம்ம ராசியில் பெயர்ச்சியாகும் பொழுது இத்தளத்தில் புஷ்கரம் நடைபெறுகிறது.

தேவர்களும் கூட இங்கே வந்து அவர்கள் செய்த பாவங்களை போக்கி தூய்மை பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது. மாசி மாதம் தசமி அன்று தேவர்கள் நிலவில் தோன்றி கோதாவரி வாழ்த்துகின்றனர் என நம்பப்படுகிறது.

இராமபிரானும் இலக்குவனும் இங்கே தந்தை தசரதருக்கு இத்தீர்த்தத்தில் சிராத்தம் செய்து அவரது ஆத்மா சாந்தியடைய செய்துள்ளனர்.இங்கே இறந்த முன்னோர்களுக்கு சிராத்தம் செய்தால் அவர்கள் சொர்க்கம் அடைவார்கள் என்று நம்புகின்றனர்.

சர்ப்ப தோஷத்திற்கு பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.

அவன் அருளாளே அவன் தாள் பணிவோம்!
ஜோதிர்லிங்க தரிசனங்கள் தொடரும்.

மேலும் படிக்க : திருக்குறள் வாழ்வியல் விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *