வாக்கு எண்ணிக்கையில் திமுக மோசடி செய்ய சதித்திட்டம்..? முன்னாள் முதல்வர் இபிஎஸ் குற்றச்சாட்டு..!!
வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் தவறு செய்தால் அதிமுக சார்பில் நீதிமன்றத்தை நாடி உரிய தண்டனையை பெற்று தருவோம் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், நாளை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கையின்போது திமுகவினர் அதிகாரிகளை வளைத்து மோசடியில் ஈடுபடலாம் என அதிமுகவினர் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில், சேலம் நெடுஞ்சாலை நகரில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தபோது, “அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் கள்ள ஓட்டு போட முயன்ற நபரை கையும் களவுமாக பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தார். குற்றவாளிகளைப் பிடித்துக் கொடுப்பது தவறா? இதை தமிழக முதல்வர் தவறு என்று கூறுகிறாரா?
முதல்வர் வெளியிட்ட செய்தி கண்டனத்துக்குரியது. நாட்டின் முதலமைச்சர் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அவசியம். கடந்த ஒன்பது மாத கால திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
நாளை வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அவர்கள் தோல்வியுற்றதாக அறிவிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மேலிடத்தில் இருந்து வாய்மொழி உத்தரவு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும். அதிகாரிகள் தவறு செய்தால் அதிமுக சார்பில் நீதிமன்றத்தை நாடி உரிய தண்டனையை பெற்று தருவோம்.” என்று எச்சரித்தார்.
மேலும், “திமுகவின் கோவை மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டதில் இருந்து அங்கு பிரச்சனை நீடித்து வருகிறது. அமைச்சர் செந்தில்பாலாஜி கோவையில் தங்கி அங்கு வன்முறையை தூண்டி வருகிறார். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற்றது. ஆனால் திமுக ஆட்சியில் தேர்தல் ஆணையத்தை கைக்குள் வைத்து கொண்டு திமுக வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க முயற்சி செய்கிறார்கள்.
தேர்தல் ஆணையம் ஆட்சியாளர்களின் கையில் உள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை சுயமாக செயல்படவில்லை.” என்றும் குற்றம் சாட்டினார்.