இதனால் பாதிப்பு உங்களுக்குத் தான்..!! ரஷ்யாவின் எச்சரிக்கை..!!
ரஷ்யா-உக்ரைன் போர் பதற்றத்துக்கு மத்தியில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. ஆனால் இந்த பொருளாதாரத் தடைகளால் பாதிப்பு மேற்குலக நாடுகளுக்குத் தான் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க உள்ளதாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் எச்சரித்து வந்தன. இந்நிலையில் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்துள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
மேலும், உக்ரைன் கிழக்கு பகுதியில் உள்ள ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதற்கு ஏற்ற வகையில், வெளிநாட்டிற்கு ரஷ்யாவின் ராணுவத்தை அனுப்ப அந்நாட்டு பாராளுமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா எந்நேரமும் போரைத் தொடங்கலாம் என்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில் ரஷ்யாவுடன் நடத்தப்பட்ட எந்த பேச்சுவார்த்தையிலும் அமைதித் தீர்வு எட்டப்படாததால் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகள் பொருளாதாரத் தடை விதித்து வருகின்றன. ஆனால் தங்கள் மீதான இந்த பொருளாதாரத்தடையால் உலகளாவிய மார்க்கெட்டில் கடும் பாதிப்பு ஏற்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர், ‘‘எங்களுக்கு எதிரான தடை, உலகளாவிய மார்க்கெட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனர்ஜி மார்க்கெட்டிலும் பாதிப்பு ஏற்படுத்தும். விலைவாசி உயர்வை மக்கள் உணர்வதை அமெரிக்கா எளிதாக புறந்தள்ளி விடாது’’ என்றார்.
மேலும், மேற்கத்திய நாடுகளின் எந்த தடையும் இல்லாமல் ரஷ்யா வாழ்ந்த ஒரு நாள் கூட தனக்கு நினைவில் இல்லை என்றும், இதுபோன்ற சூழ்நிலையில் எப்படி செயல்படுவது, எப்படி நாட்டை முன்னேற்றுவது என்பது குறித்து நாங்கள் நிறைய கற்றுக் கொண்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.