ஆன்மீகத்தில் சுற்றத்தாரின் பங்கு
சுற்றத்தாரின் இயல்பு
பெரும்பாலும் சுற்றத்தார் என்றாலே பொறாமை கொள்ளும் சுற்றத்தாரையும், முன் ஒன்று பேசி பின் ஒன்று பேசும் சுற்றத்தாரை மட்டுமே நினைவில் கொண்டு வருவோம். அதுவும் ஆன்மீக பாதையில் இருக்கும் நபர்களை பற்றி சுற்றத்தார் பேசும் புரளிகளுக்கு அளவே இல்லை என்பது நாம் அறிந்தது. ஒவ்வொருவரும் அவரவர் கற்பனையில் அந்த நபரை ஏதோ ஒரு வகையில் விமர்சனம் செய்து தொண்டு இருப்பது யுகங்களாக கடைபிடித்துக் கொண்டிருக்கும் வழக்கம்.
பொதுவான மக்களின் இயல்பு
பெரும்பாலும் சுற்றத்தாரை விட்டு விலகி இருக்கவே பெரும்பாலான மக்கள் விரும்புவர். இப்படி இருக்க இறைவன் ஏன் பந்த பாசங்களை உருவாக்கி, சுற்றத்தார்களை ஒவ்வொரு ஆன்மாவிற்தும் ஏற்படுத்தி தந்துள்ளார்? படைத்த அவன் முட்டாள் இல்லையே! படைக்கப்பட்ட நோக்கத்தை அறிந்து கொள்ளாமல் இருப்பது நம் அறியாமையே!
பல ஜென்மங்களின் தொடர்ச்சி
நம்மை சுற்றியுள்ள அனைத்து சுற்றத்தார்களும் பல பிறவிகளாக தொடர்ந்து கொண்டே வருபவர்கள். ஒவ்வொரு பிறவியிலும் உறவுகள் வேறுபடலாம் ஆனால் பிணைப்பு வேறுபடுவதில்லை.
சாவி இல்லா பூட்டு
இப்படி இருக்க எதற்காக இவ்வளவு பிறவியில் தொடர்ச்சியாக இந்த சுற்றங்கள் வர வேண்டும் என்ற கேள்வி எழலாம். இயற்கையின் இயல்பின் நோக்கத்தை ஆராய்ந்தால், நமக்கு வாய்த்த அத்துனை சுற்றங்களும் நம் ஆன்மாவின் மலங்களை அகற்றவே! நம் ஆன்ம மலங்களை அகற்றி தூய்மை நிலைக்கு செல்லும்வரை, இந்த சுற்றத்தாரிடம் இருந்து விலகிவிட முடியாது.
நம் ஆன்மாவை பக்குவப்படுத்தவே இறைவன் நம்மைசுற்றி பக்குவமில்லாத ஆன்மாக்களை படைத்திருப்பார். சுடும் தீக் கனலில் இரும்பை போட்டு பட்டை தீட்டுவது போல, நம் ஆன்மாவை பக்குவப்படுத்தவே பல பிறவிகளாக சுற்றத்தாரிடம் இறைவன் நம்மை அனுப்பி வைக்கிறார்.
கழிவுகளை அகற்றிய பிறகு தூக்கி எரி
இப்படிப்பட்ட பக்குவத்தை அந்த ஆன்மா அடைந்த பிறகு, அந்த பக்குவத்திற்கு உதவிகரமாக இருந்த சுற்றத்தாரின் மீது மீண்டும் பற்று எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம். உதாரணமாக ஏதோ ஒரு சவுக்காரத்தை கொண்டு குளியல் அறையில் நம் உடம்பை தூய்மை செய்கிறோம். அழுக்கு நீக்கிய பிறகு அந்த சவுக்காரத்தை கரைத்து அப்படியே கரைத்துவிட்டு வெளியே வர வேண்டுமே தவிர, இந்த சவுக்காரம்தான் என் அழுக்கை நீக்கியது, நான் இதை விட மாட்டேன் என்று குழந்தை தனமாக நடந்து கொள்ள கூடாது
எனவே எப்படிப்பட்ட சுற்றத்தார்கள் வாய்த்திருந்தாலும், நம்மை பக்குவப்படுத்த இறைவன் இவர்களை இங்கு அனுப்பி வைத்திருக்கிறார் என்பதை நினைவில் கொண்டு, எது நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதை நினைவில் கொள்வோம். அதுமட்டுமின்றி, பக்குவம் பெறும்வரை, சுற்றத்தாரிடம் இருந்து தப்ப இயலாது என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.