அதர்மத்தை அழித்த இராமேஸ்வரம்
தமிழ் நாட்டின் தென்கோடிக் கிழக்கு கடற்கரையான வங்க கடலோரம் இருக்கும் பாம்பன் தீவில் உள்ள மாவட்டம் இராமநாதபுரம் அங்கு அமந்துள்ளது இராமேஸ்வரமே நாம் காண இருக்கும் அடுத்த ஜோதிர்லிங்க ஸ்தலம்.
"கோடிமா தவங்கள்செய்து குன்றினார் தம்மையெல்லாம் வீடவே சக்கரத்தால் எறிந்துபின் அன்புக்கொண்டு தேடிமால் செய்த கோயில் திருஇராமேச்சுரத்தை நாடிவாழ் நெஞ்சமேநீ நன்னெறி யாகுமன்றே" -திருநாவுக்கரசர்
இராமேஸ்வரம்
இராமபிரான் இராவணனை கொன்ற பின் பாவம் தீர வழிப்பட்தாக சொல்லப்படும் கதை காலப்போக்கில் வந்தது. ஆதி காவியமான வால்மீகி இராமாயணத்தில் இலங்கையிலிருந்து புஷ்பக விமானத்தில் இராமரின் பட்டாளம் அயோத்திக்கு புறப்படுகிறது. பரதன், அண்ணனின் வருகை தாமதித்தால் உயிரை விட தயாராகயிருக்கும் சூழ்நிலையில் இப்பிரயாணமானது நிகழ்கிறது. ஆகையால் சீதா பிராட்டிக்கு இராமேஸ்வரத்தை சுட்டி காட்டி இங்கு தான் சிவ பூஜை செய்தேன் என்று தகவல் கூறப்படுவதாக காவியம் கூறுகிறது. நம் கம்பராமாயணத்தில் இராமேஸ்வரத்தை பற்றிய தகவலில்லை. கீழ்காணும் வரலாற்றை சிவமஹாபுராணத்திலிருந்து காண்போம்.
ஸ்தல வரலாறு
இராமபிரான் தம் பிராட்டியை ஏமாற்றி கடத்திக் கொண்டு சென்ற இராவணனை அழித்து சீதையை மீட்கும் பொருட்டு சேது பாலம் கட்டிய பிறகு அந்த கடற்கரையில் மண்ணால் லிங்க வடிவம் செய்து பூஜை செய்தார். அம்மை அப்பன் காட்சியளித்து “என்ன வரம் வேண்டும்?” என வினவ “உம் பக்தனான இராவணனை அழிக்க உமது உத்தரவு வேண்டுகிறேன். கடல் கடந்து செல்லும் பொழுது என் நித்யகர்மாக்களை செய்ய இயலாமல் போவதற்குமான பாவத்திலிருந்து காக்கவும் வேண்டுகிறேன்” என்றார் இராமபிரான். “அதர்மத்தை செய்தவன் என் பக்தனாயினும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது விதி அதற்கு என் அனுமதி தேவையில்லை திருமாலே” என்று கூறி “தர்மத்தை நிலைநாட்ட போரில் வெற்றி பெறுவீர்” என எம்பிரான் வாழ்த்துகிறார். இராமபிரான் எம்பிரானிடம் தாங்கள் இங்கே இருந்து அனைவருக்கும் அருளும் படி கூறுகிறார். அவ்வாறே ஜோதி வடிவமாக இராமபிரான் வழிபட்ட லிங்கத்தினுள் அம்மை அப்பன் ஐக்கியமாகினர்.
பெயர்காரணம்
முதலில் சேதுமாதவர் கோவில் இருந்ததால் ‘சேதுமாதவர்புரி’ என்று அழைக்கப்பட்டது. பின்னர் அகஸ்தியர் மற்றும் பல முனிவர்கள் தவம் செய்த ஸ்தலமாக திகழ்ந்ததால் ‘அகத்தியபுரம்’ (அ) ‘வேதபுரி’ என அழைத்தனர். இராமாயணக்காலத்தில் இராமர் ஈசனை பூஜித்த ஸ்தலமாக மாறியதால் இராமேஸ்வரம் ஆயிற்று.
சிறப்பம்சம்
சைவம் வைணவம் என இருவரும் ஒன்று கூடும் இடமாக திகழ்வதால் ‘சைவ வைணவம் சங்கமத் திருத்தலம்’ என்றும் சிறப்போடு அழைக்கின்றனர்.
கோவிலின் பிரகாரத்தில் இருக்கும் 22 புண்ணியம் தீர்த்தங்கள்:
- மஹாலஷ்மி தீர்த்தம்
- சாவித்திரி தீர்த்தம்
- காயத்திரி தீர்த்தம்
- ஸரஸ்வதி தீர்த்தம்
- சங்கு தீர்த்தம்
- சக்கர தீர்த்தம்
- சேதுமாதவ தீர்த்தம்
- நள தீர்த்தம்
- நீல தீர்த்தம்
- கவாய தீர்த்தம்
- கவாட்ச தீர்த்தம்
- கந்தமாதன தீர்த்தம்
- பிரமகத்தி விமோசன தீர்த்தம்
- சூரிய தீர்த்தம்
- சந்திர தீர்த்தம்
- சர்வ தீர்த்தம்
- சாத்தியாமிருத தீர்த்தம்
- சிவ தீர்த்தம்
- கங்கா தீர்த்தம்
- யமுனா தீர்த்தம்
- கயா தீர்த்தம்
- கோடி தீர்த்தம்
அவன் அருளாளே அவன் தாள் பணிவோம்!
ஜோதிர்லிங்க தரிசனங்கள் தொடரும்.
மேலும் படிக்க : திருப்புகழ் 44 கனங்கள் கொண்ட (திருச்செந்தூர்)