ஊட்டச்சத்து மிக்க வெஜ் புலாவ்
ருசியான ரெசிபி என்றாலே பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவோம். மேலும் ஈஸியான மற்றும் காலை அவசர நேரங்களில் விரைவாக தயாரிக்க முடியும் என்றால் அது இன்னும் சுலபம் தானே.
உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை தேர்வு செய்து ஊட்டச்சத்து மிக்க ஒரு எளிய உணவு வெஜ் புலாவ். இதனுடன் தயிர் பச்சடி சேர்த்து சாப்பிட இன்னும் சுவை அதிகரிக்கும். 250 கலோரி கொண்ட இந்த புலாவ் செய்ய 15 நிமிடங்களில் தயார் செய்து விடலாம். எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வெஜ் புலாவ்
தேவையான பொருட்கள்
ஒரு கப் நறுக்கிய காலிஃப்ளவர், கேரட் நறுக்கியது ஒரு கப், பச்சை பீன்ஸ் நறுக்கியது ஒரு கப், பட்டாணி கால் கப், பச்சை மிளகாய் இரண்டு, கருப்பு ஏலக்காய் ஒன்று, பட்டை குச்சி ஒன்று, சீரகம் ஒரு ஸ்பூன், இலவங்கப்பட்டை இலை இரண்டு, எண்ணெய், உப்பு தேவையான அளவு, பாஸ்மதி அரிசி ஒரு கப், நெய் ஒரு ஸ்பூன் தண்ணீர் தேவையான அளவு.
செய்முறை விளக்கம்
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை சேர்த்து வதங்க விடவும். பிறகு காலிஃப்ளவர், கேரட், பீன்ஸ், பட்டாணி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.
காய்கறிகள் நன்றாக வதங்கியதும் வடித்து வைத்துள்ள பாஸ்மதி சாதத்தை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு மிதமான தீயில் கிளறவும். சிறிது நேரத்தில் அடுப்பை அணைத்து இறக்கவும். தேவையான அளவு எண்ணெய், கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கி சூடாக பரிமாறவும். தயிர் பச்சடி உங்களுக்கு விருப்பமான கிரேவி உடனும் சேர்த்து பரிமாறவும்.