“டூப்” ஸ்டாலினுடன் பொதுமக்கள் செல்ஃபி…!
முதல்வர் ஸ்டாலின் போல வேடமிட்டு வாக்கு சேகரித்த தொண்டரை ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள் அவருடன், செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து திமுகவினரோ இந்த முறை கோவையை கண்டிப்பாக அடித்து விட வேண்டும் என பல்வேறு வியூகங்களை வகுத்து களமாடி வருகின்றனர்.
இதனையடுத்து கரூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாடு முழுவதும் ஒரே தேர்தல் வர வுள்ளதாகவும், இன்னும் 24 அமாவாசையில் ஆட்சி மாறும் அப்போது காட்சிகளும் மாறும் என பேசியிருந்தார். மேலும் நீட் தேர்வில் அதிமுக தான் உரிமையை இழந்ததாகவும், இது தொடர்பாக விவாதிக்க தயாரா..? என முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்தார். அந்த சவாலை ஏற்பதாகவும் எங்கே, எப்போது வரவேண்டும் என கூறுங்கள், நானும் , அண்ணன் ஓபிஎஸ் அவர்களும் வருகிறோம் என கூறினார்.
இப்படி உள்ளாட்சி தேர்தல் களம் பற பறக்க சில தொண்டர்கள், வாக்களர்களை கவர வேடமணிந்து வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வரிசையில், திருப்பத்தூர் மாவட்டம் நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் குப்பம்மாள் மற்றும் ஆதரவாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது முதல்வர் ஸ்டாலின் போல் வேடமிட்டவருடன், இரட்டைமலை சீனிவாசன் தெரு, தென்றல் நகர், நரசிங்கராவ் காலணி, உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது ஸ்டாலின்தான் வாக்கு கேட்டு வருகிறார் என நினைத்து பொதுமக்கள் ஸ்டாலின் போல வேடமிட்டவரை உற்சாகத்தோடு வரவேற்று செல்.ஃபி எடுத்துக் கொண்டனர்.