பாரம்பரிய உணவாக ஹெல்த்தி பிரியாணி
பிரியாணி என்றாலே பாத்திரத்தில் தம் போட்டு செய்வது அல்லது குக்கரில் செய்வது. இதே பிரியாணியை மண்பாத்திரத்தில் செய்யும் போது பாரம்பரிய உணவாக சத்தான பிரியாணி ஆக இருக்கும். இந்த பிரியாணியில் நாம் விரும்பிய காய்கறிகள் அனைத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
பாஸ்மதி அரிசியை கொண்டு மசாலா பொருட்களால் விரும்பிய காய்கறிகளை கொண்டு சமைத்து இந்த ஹெல்த்தி பிரியாணி செய்வதற்கான எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.
மண்பானை வெஜிடபிள் பிரியாணி
தேவையான பொருட்கள் : பாஸ்மதி அரிசி கால் கிலோ, வெங்காயம் நறுக்கியது 2, கோஸ், காலிஃப்ளவர், பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, பட்டாணி தலா அரை கப், கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
இஞ்சி கழுவி தோல் சீவி இரண்டு துண்டு, இதனுடன் பூண்டு 10 பல், தோலுரித்து சேர்த்து அரைத்த பேஸ்ட் 2 ஸ்பூன், தக்காளி-2 நறுக்கியது. கால் கட்டு கழுவி சுத்தம் செய்த புதினா இலை, நறுக்கிய கொத்தமல்லி ஒரு கைப்பிடி, ஐம்பது மில்லி நெய்.
மசாலா பொருட்கள் பட்டை 3, கிராம்பு 3, சோம்பு அரை ஸ்பூன், கரம் மசாலா தூள் ஒரு ஸ்பூன், ஏலக்காய் 3, மிளகாய் பொடி ஒரு ஸ்பூன், மல்லி பொடி ஒரு ஸ்பூன், உப்பு தேவையான அளவு.
கால் கிலோ பிரியாணி அரிசிக்கு அரை லிட்டர் தண்ணீர்.
செய்முறை : அரிசியை கழுவி 10 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்து வைக்கவும். ஒரு கடாயில் அரிசி மற்றும் தண்ணீர் உப்பு, பிரிஞ்சி இலை, கிராம்பு, லவங்கம், ஏலக்காய் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் நெய் விட்டு வேக விடவும்.
ஒரு வாணலியில் சிறிது நெய் சேர்த்து நெய் சூடானதும், அதில் சோம்பு, இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், ஏலக்காய், பிரிஞ்சி இலையை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு காலிஃப்ளவர், கேரட், பீன்ஸ், வதக்கி பிறகு உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து வதக்கவும். கடைசியாக தக்காளி விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
பச்சை வாசனை போனவுடன் உப்பு, மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும். மசாலா பொடிகளை சேர்த்து பச்சை வாசனை போனதும். நன்கு வதக்கிய பிறகு இறக்கி வைக்கவும். மசாலா தயாராகிவிட்டது. சாதம் வெந்தவுடன் இறக்கி வைத்து விடவும்.
மண் பானை பாத்திரத்தை எடுத்து வதக்கி வைத்துள்ள காய்கறி கலவையை சேர்த்து அதன் மீது ஒரு அடுக்கு அரிசி சேர்க்கவும். இதே போல் காய்கறி மற்றும் அரிசியை இரண்டு அடுக்காக சேர்த்துக் கொள்ளவும். அதன் பின் மேலே வறுத்த வெங்காயம், புதினா மற்றும் கொத்தமல்லி தழையை தூவி அலங்கரிக்கவும்.
இதை ஐந்து நிமிடம் அடுப்பில் குறைந்த தீயில் வைத்து இறக்கினால் சுவையான வெஜிடபிள் பிரியாணி தயார். கடைசியாக மாற்றும் பாத்திரம் மண் பானையில் வைத்துக் கொள்ளவும்.