விவசாயத் துறையில் டிரோன்கள்..!! மோடி அரசின் செம திட்டம்..!!
நாட்டில் வளர்ந்து வரும் புதிய டிரோன் சந்தையின் வளர்ச்சியில் எந்தத் தடையும் வராமல் இருப்பதை உறுதி செய்வதற்கான கொள்கைகளை அரசாங்கம் உருவாக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் உள்ள விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதற்காக இந்தியாவின் பல்வேறு பெரு மற்றும் சிறு நகரங்களில் 100 கிசான் ட்ரோன்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ட்ரோன் கிசான் யாத்ரா எனும் பெயரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மானேசரில் கூடியிருந்த விவசாயிகள் குழுவிடம் அவர் வீடியோ கான்பெரன்ஸ் மூலம் உரையாற்றினார்.
சரியான மனப்பான்மையுடன் கொள்கைகளை வகுத்தால் நாடு எவ்வளவு தூரம் பறக்க முடியும் என்பதற்கு இந்த சந்தர்ப்பம் சிறந்த உதாரணம் என்று கூறிய அவர், “டிரோன்கள் ஆயுதப் படைகளுக்கும் எதிரிகளை எதிர்த்துப் போரிடுவதற்குமானவை என்ற கருத்து சமீப காலம் வரை இருந்தது. கிசான் ட்ரோன் சுவிதா 21 ஆம் நூற்றாண்டின் நவீன விவசாயத்தின் ஒரு அங்கமாக மாறி வருகிறது.
நாட்டில் உள்ள பல நிறுவனங்கள் இந்த பாதையில் வேகமாக நகர்கின்றன. இந்தியாவில் டிரோன் சந்தையில் ஒரு புதிய தேவை உருவாகிறது. நாட்டில் தற்போது 200 க்கும் மேற்பட்ட டிரோன் ஸ்டார்ட்அப்கள் இயங்குகின்றன. அவை விரைவில் 1,000 ஆக அதிகரிக்கும். மேலும் இது பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
டிரோன் துறையில் புதிய தலைமையின் தோற்றத்தை இந்தியா காண தயாராக உள்ளது. மேலும் தொழில்முனைவோரின் பாதையில் எந்த தடைகளும் வராமல் இருப்பதை உறுதி செய்வதற்கான கொள்கைகளை அரசாங்கம் உருவாக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று கூறினார்.
“கருடா ஏரோஸ்பேஸ் அடுத்த 2 ஆண்டுகளில் 1 லட்சம் மேட்-இன்-இந்திய டிரோன்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு மற்றும் புதிய வாய்ப்புகள் உருவாகும்” என்று அவர் கூறினார்.
“கடந்த சில ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்டுள்ள சீர்திருத்தங்கள் இளைஞர்களுக்கும் தனியார் துறைக்கும் பலத்தை அளித்துள்ளது. இந்தியா அச்சத்தில் நேரத்தை இழக்கவில்லை. இளைஞர்களின் சிந்தனையை நம்பி நாங்கள் முன்னேறினோம்.” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த ஆண்டு பட்ஜெட்டில், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு அதிக முன்னுரிமை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.